கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், செப்டம்பர் 21, 2011

களத்துமேட்டு வாழ்த்து...

களத்துமேடு குடியிருப்பில் அவள்
கதிர் அறுத்து கட்டு சுமந்து நடக்கையில்
காத தூரமானாலும் பின்னால் நடப்பதற்கு
வெல்லமென காத்திருப்பான்!
தென்னைமரத்து குயில் கூட
தோற்றுப்போகும் அவளது குரலில்!
மாந்தோப்பு மயில் கூட்டமும்
மெய்மறந்து ஆடாது நிற்கும்
அவளது இடையழகு நடையின் போது!
கருத்தொருமித்த காதலானது
இவர்களது நட்பின் மேன்மை!
நெல்லடித்து தூற்றியதுபோல்
சொல்லால் அடித்து துறத்தினார்கள்!
நூலருந்த பட்டமென அலைபாய்ந்து
செயலற்ற பிம்பமாய் அவளின் வாழ்வு!
கடலலை ஒதுக்கிய ஒற்றைக் கால் செருப்பாய்
கிராமத்து எல்லைதனில் ஒதுக்கப்பட்டான்!
எழிலார்ந்த வளமிக்க வயல்பரப்பில்
பழிசொல்லும் கூட்டம்தான் பெருகியது!
இயற்கை இயம்புவதை கேட்காத
ஈனபுத்தி மாக்கள் இனியேனும் மாறட்டும்!
விரும்பும் மனதின் வசந்த காலங்களை
அரும்பிட நீர்பாச்சும் நிலை வரட்டும்!
களத்துமேட்டு கதிரடிக்கும் காலமதில்
தூற்றிய பதர்களும் இருக்கத்தான் செய்யும்!
காளைகளின் மணியோசை இவர்களது
காதலை அங்கீகரிக்கட்டும் அதுபோதும்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்.