கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 09, 2016

தார்ச்சாலைப் பூக்கள்

தெருவிளக்கு உமிழும் 
வெளிச்ச எச்சிலில் 
இரவு  தன்னை 
கரைத்துக்கொண்டு
விடியலின் வாழ்வுக்கு 
வழிவிடுகிறது 

தார்ச்சாலைப் பூக்கள் 
வியர்வைத்துளிகளின் 
வாசம் பரப்பி 
ஒரு பரபரப்பில் 
தன்னை சிறைவைக்க 
தயாரானது 

எச்சங்களின் வரவால் 
வயிறு புடைத்த 
குப்பைத் தொட்டிகள் 
அட்டை பொறுக்கும் 
சிறுவர்களின் மறுவாழ்வில் 
அங்கம் கொண்டது   

நான்கு சக்கரம் 
இரண்டு சக்கரம் 
மூன்று சக்கரம் 
நாளெல்லாம் உருண்டு 
மானுடத் திசுக்களை 
சுமந்தவாறு 
ஊர்வலத்தை நடத்தின  

வளமிக்க 
விளைநிலங்களை 
மறந்த மனங்கள் 
விடுதலை அறியா 
விருப்பினர்களாக
தூண்டில்  புழுவானார்கள் 

நெரிசல் மிக்க 
நகரத்து விண்வெளியில் 
பறக்க மறந்த
பறவைகள் மட்டும் 
கிராமத்து பாதைகளை 
தேர்ந்தெடுத்தன 

.........கா.ந.கல்யாணசுந்தரம் 

செவ்வாய், மே 31, 2016

விடியலைத் தாருங்கள் ...

மக்களால் தேர்ந்தெடுகப்பட்டும்
மதியிழந்து போனார்கள் ...
காலில் விழும் கனவான்கள் !
பரவாயில்லை ...
பொறுத்துக்கொள்கிறோம் !

தொகுதிக்கு வாருங்கள்
உங்களின் காலில் விழுந்து
கெஞ்சாத குறையாய்
காத்திருக்கிறார்கள்
உங்களின் பிரஜைகள் !

அடிப்படை வசதிகூட
காணாத பகுதிக்கு
அவசியம் செல்லுங்கள்...!
குறைகளைக் கேட்டறிந்து
களைந்திடுங்கள் உடனடி தீர்வால் !

அடுத்த வேளை உணவின்றி
உடுத்த துணியுமின்றி வாடும்
அடித்தட்டு மக்களுக்கு நல்லதொரு
விடியலைத் தாருங்கள் ...
அடுத்த ஐந்தாண்டு அருகில்தான் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

இவனது நிஜ வாழ்க்கை ...

வண்ணக் கலவைகள்  
கிண்ணத்தில் இருந்தன...
ஆடை களைந்து
மினுக்கும் ஜிகினா
உடையணியும் நேரம்
ஒரு முறை மீண்டும்
நிலைக்கண்ணாடியில்
தன்னைப்பார்த்து மீள்கையில்
ஒப்பனைக் கலைஞன்
அவனருகே .....!
திரைவிலகியதும்
முதல் காட்சியில்
தோன்றவேண்டும்.....!
வீதியெங்கும் ஆவலுடன்
அமர்ந்திருக்கும்
ரசிகர்கள்....!
ஹார்மோனியப் பெட்டியுடன்
பாட்டுவாதியார்
பக்க வாத்தியங்களுக்கு
நடுவே...!
மாதக்கணக்கில்
ஒத்திகை பார்த்து
நினைவில்கொண்ட பாடலை
உச்ச குரலில் பாடவேண்டும்  !
ஆம்.....................
அரிதாரம் பூசி கோமாளியாய்
மற்றவர்களை சிரிக்கச்செயும்
இவனது நிஜ வாழ்க்கை ...
ஒரு முகமூடிக்குள்
புதைந்திருக்கிறது !


...........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

எப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை ?









அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள்  !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத்  தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத  மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?

..........கா.ந.கல்யாணசுந்தரம்








வெள்ளி, டிசம்பர் 23, 2011

சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்



















கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.