கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 31, 2016

மனம்கொத்திப் பறவைகளின் கூடாகட்டும் !

இருளின் அடர்த்திக்குள்
என்னை முழுவதுமாய்
திணித்துக்கொண்டேன் ...
வெளிச்ச நாட்களின்
வாழ்க்கைப் பக்கங்களை
விளக்கின்றி
படிக்கத் துவங்கினேன்....
திடீரென இருளை
அணைத்துக்கொண்டு
விளக்கொளி உள்ளே
பாய்ந்தது ....
வெளிச்சப் பூக்களை
அள்ளித்தெளித்த
தேவதையாய் இரவின்
கரங்கள் மகிழ்ந்தன...
பகலைவிட இருளை
அதிகம் நேசிக்கிறேன்
காரணம்.....
அப்போதுதான் நெஞ்சம்
மனதின் விசும்பல்களை
அசைபோட்டபடியே
நிம்மதியடைகிறது !
இரவின் கரங்களே....
இப்போதாவது
தெரிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் இருக்கும்
வெளிச்சஅரும்புகளை
பூக்கவிடாது என்மீது
இருளின் வேர்களை
படரவிடுங்கள்....
அவை எனது
மனம்கொத்திப் பறவைகளின்
கூடாகட்டும் !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, நவம்பர் 01, 2014

அன்பெனும் சிறைக்குள்....





நினைப்பதை அப்படியே 
சொல்ல முடியவில்லை ...
சொல்வதற்கு முன் 
யோசிப்பது  முக்கியம் என்று 
யாரோ சொல்லி வைத்தார்கள் !
சிந்தனைகள் நமக்கு 
சொந்தமானவைதான்....!
ஆனால் வார்த்தைகள் மட்டும் 
நமது கட்டுப்பாட்டில் 
இருப்பதில்லை ....!
விடுதலையாகும் சிந்தனைகள் 
மற்றவர்களை சிக்க வைக்கட்டும் .... 
நம் அன்பெனும் சிறைக்குள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.



திங்கள், ஆகஸ்ட் 05, 2013

எப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை ?









அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள்  !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத்  தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத  மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?

..........கா.ந.கல்யாணசுந்தரம்








வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அப்போதே தன்னுள்....


வாழ்க்கை சிகரத்தின்
ஒவ்வொரு படியிலும்
நினைத்துப் பார்க்கிறேன்....
வியந்து நினைக்கிறேன்!
அகரம் பயில ....
துணையாய் நின்ற
தகரப் பலகையின்
கருமை வண்ணத்தை!
அப்போதே தன்னுள்
அடக்கமாய் ஒளித்து
வைத்திருந்த ஒளிமயமான
என்னுடய எதிர்காலத்தை!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.