கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஏப்ரல் 14, 2018

உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 3


உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 3
 ********************************************************மட்டக்களப்பு – ஓட்டமாவடி இலக்கிய விழா முடித்து எங்களது பயணம் 26/02/2018 அன்று இலங்கையின் வடக்கு மாகாண தலைநகர்  திரிகோணமலை நோக்கி இனிதாய் நகர்ந்தது. திரிகோணமலை செல்லும் வழியெங்கும் அழகிய இலங்கை கடற்கரை இருபுறமும் காட்சி அளித்தது. இயற்கை எழில் சூழ்ந்த தமிழர் வாழும் பகுதிகள் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

மதிய நேரம் திரிகோணமலை அடைந்து அங்கே விடுதியில் சற்று ஓய்வெடுத்து திரிகோணேஸ்வரர் திருக்கோயிலை கண்டு ரசித்தோம்.
இராவணனால் தரிசிக்கப்பட்ட புராதான சிவலிங்கம் தரிசனம் கண்டோம். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கும் தற்போதைய அரசால் செய்யப்பட்டு இருந்தது.

விக்கிப்பீடியா வரலாறு :
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்இலங்கையின்கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில்உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில்தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[2]

இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது.

குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம் திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.
இத்தகு சிறப்புமிகு இடத்தை மூன்று மணிநேரம் பார்வையிட்டோம். இம்மலைக்கு செல்லும் வழியில் மான்களும் மயில்களும் ஒருங்கே இருப்பதைக் காண முடிந்தது. இயற்கை சூழல், மலைவளம், கடற்கரை பொலிவு அனைத்தும் சேர்ந்த இந்த மலைப்பகுதி கோயில் இராவணனால் வணக்கப்பட்ட லிங்கம் உள்ளது என்பதற்கு சான்றாக மலையின் அடிப்பகுதியில் இராவணனின் கோட்டைக் கொத்தளம் இன்றளவும் சிதலமடைந்து உள்ளது என்றார்கள். அதற்கு நாங்கள் சென்ற போது படகுப் போக்குவரத்து இல்லை.  எழில் சூழ்ந்த இயற்கை வளங்களோடு வாழ்ந்த இராவணன் வரலாற்றை கோயில் உள்புற மண்டபத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது மிகச் சிறப்பு.

பார்க்கவேண்டிய பரவசமூட்டும் இடம்....

...............கா.ந.கல்யாணசுந்தரம்

தொடரும்....அடுத்த பதிவு வியப்பில் ஆழ்த்தும் திரிகோணமலை பத்ரகாளியம்மன் கோயில் சிற்பங்கள்