கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஏப்ரல் 15, 2018

உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4


உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4
************************************************************************

26/02/2018 அன்று திருகோணமலை பத்ரகாளியம்மன் ஆலயம் சென்று வழிபட்டோம். அடடா...என்னவொரு நேர்த்தியான சிற்பங்கள் கொண்ட கோயில். கோயிலின் மேற்புற கூரையில் அழகிய சிற்பங்கள் வடிவமைப்பு இருந்தது. இதுவரை இம்மாதிரியான கலை அம்சம் கொண்ட கோயிலைப் பார்த்ததில்லை. இந்தத் திருத்தல வரலாற்றை சிற்பங்களாக வடித்திருந்தனர்.

இன்றெல்லாம் கண்டாலும் நேரம் போதாது. காணக் கண்கோடி வேண்டும்.
பத்ரகாளி அம்மன் அச்சு அசலாக அருள்மிகு அங்காளபரமேஸ்வரி போன்ற தோற்றமுடன் வீற்றிருந்த காட்சி அற்புதம்.

இனி வரலாற்றைக் காண்போம்:
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில்பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்துநிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில்தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணிகூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாலயத்தில் கடந்த 150 ஆண்டு காலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம்புரட்டாதி மாதம் விஜயதசமி முதல் ஐப்பசி மாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

விசயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.


திருகோணமலை கவிஞர் அருணாசலம் சிவானந்தம் அவர்கள் எங்களுடன் இத்திருத்தலத்தில் உடனிருந்து அழைத்துச் சென்றார்.. திருகோணமலையில் வசிக்கும் கவிதாயினிகள் சிவரமணி கவிச்சுடர் மற்றும் பிரிதிவிராஜ் லோஜி அவர்கள் நாயன்மார்கள் நற்றமிழ் சங்கம் நிறுவனர் ஸ்ரீகாந்த் ராஜா மற்றும் ஜாகிர் அவர்களுடன் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகக் கவிஞர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்ததை மறக்க முடியாது.  ஈழத்துக் கவிஞர்கள் பலருடன் உரையாடியது மகிழ்வை தந்தது.

கூட்டம் முடிந்து கவிதாயினி பிரிதிவிராஜ் லோஜி அவர்கள் தங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்று இன்முகத்துடன் வரவேற்று தேனீர் கொடுத்தது இன்னும் கண்முன்னே காட்சி அளிக்கிறது. லோஜி அவர்களுடைய வயதான தாயார் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கவிஞர் அருணாசலம் சிவானந்தம் அவர்கள் இல்லம் சென்றோம்.
அனைவரையும் வரவேற்று கவிஞர் சிவா அவரது மனைவியும் எங்களுக்கு இன்முகத்துடன்  அறுசுவை உணவளித்தது மறக்க முடியாது. நாங்கள் பயணப்பட்டு அன்றுதான் முழுமையான உணவருந்தி மகிழ்ந்தோம்.

இரவு விடுதியில் தங்கி மறுநாள் காலை வெந்நீர் ஊற்றில் குளித்து மகிழ்ந்தோம். மார்பல் பீச் -  பளிங்கு கடற்கரை சுற்றிப்பார்த்துவிட்டு  யாழ்பாணம் நோக்கி பயணமானோம்.

இனிய நேரங்கள்....

தொடரும்...அடுத்து....யாழ்பாணம் போகும் வழியில் ஓமந்தை கண்ணகி கோயில் வழிபாடு...

.........கா.ந.கல்யாணசுந்தரம்.