கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், டிசம்பர் 25, 2014

விண்ணில் ஒளிரும்....

விண்ணில் ஒளிரும் 
மனிதநேய மணிவிளக்காய் ....
மண்ணில் தவழ்ந்தார் இயேசு!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, நவம்பர் 23, 2014

புலம்பெயரும் நிழல்கள்....








விழுதலும் எழுதலும்
மானுடம் சந்திக்கும்
நிகழ்வுகள்...
அடிபட்ட காயங்களை
ரணமாக்கவே
சமுதாயம்
விரும்புகிறது....
மாற்று மருந்தொன்று
இருப்பதாய் தெரியவில்லையென
என்னுடன் கீழே
விழுந்தும் அடிபடாத
நிழல்  புலம்பியவரே
இடம்பெயர்கிறது....


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், நவம்பர் 03, 2014

பகிர்ந்தபோது!

நெஞ்சம் நிறைந்தது
அகழ்ந்த கிழங்கை
பகிர்ந்தபோது!

............கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, நவம்பர் 01, 2014

அன்பெனும் சிறைக்குள்....





நினைப்பதை அப்படியே 
சொல்ல முடியவில்லை ...
சொல்வதற்கு முன் 
யோசிப்பது  முக்கியம் என்று 
யாரோ சொல்லி வைத்தார்கள் !
சிந்தனைகள் நமக்கு 
சொந்தமானவைதான்....!
ஆனால் வார்த்தைகள் மட்டும் 
நமது கட்டுப்பாட்டில் 
இருப்பதில்லை ....!
விடுதலையாகும் சிந்தனைகள் 
மற்றவர்களை சிக்க வைக்கட்டும் .... 
நம் அன்பெனும் சிறைக்குள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.



செவ்வாய், அக்டோபர் 21, 2014

மனிதநேயமுடன் மாநிலத்தில் வாழ்ந்திடவே வாழ்த்துகிறேன்....




இன்சுவைப் பண்டங்கள் 
இனிதே உண்டு 
புத்தாடைப் பொலிவுடனே 
பட்டாசு மத்தாப்பு 
வகை வகையாய் 
வானவேடிக்கை பல செய்து 
மகிழ்ந்திருப்பீர் நட்புடனே!
தீப ஒளித் திருநாளாம் 
தீபாவளி நன்னாளில் 
மனிதம் தழைத்திட 
உறுதிமொழி ஏற்பீர் !
அறிவியல் நுட்பமெல்லாம் 
ஆக்கமுடன் கையாண்டு 
மனிதநேயமுடன் 
மாநிலத்தில் வாழ்ந்திடவே 
வாழ்த்துகிறேன்....
இனிய தீபாவளி 
திருநாள் வாழ்த்துக்கள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.  

புதன், அக்டோபர் 08, 2014

அமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது !



காடுவெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தான் மிச்சம் ! - எனும்
உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை
அன்றே பாடிவைத்த பட்டுக்கோட்டையே !
இமைப்பொழுதும் சோம்பலின்றி உழைத்து 
இளைய சமுதாயம் மேன்மையுற- நல்லிசை
பாடலை நாள்தோறும் புனைந்த புலவனே !
பொதுஉடமை பூவெடுத்து நற்றமிழ் சொல்
நார்கொண்டு பாமாலை தந்த வள்ளலே !
நிலவுக்கு ஆடைகட்டி மன மேடையில்
ஆடவைத்த ஆனந்தக் கவியே!
உனதிசைப்பாடல்களால் துள்ளாத மனங்களை
துள்ளவைத்து இன்பத் தேனை அள்ள வைத்தாய்!
வாழ்ந்த காலங்கள் குறைவெனினும்
குன்றின்மேலிட்ட விளக்கானாய் !
நும் பெயரை எனக்கிட்ட பெற்றோர்கள் இன்றில்லை!
நுனிப்புல்லின் பனித்துளியாய் கவிஎழுதும்
திறன் எனக்கு வந்ததெல்லாம் - நின் பெயரை
கொண்டதாலே எனவெண்ணி நாளும் மகிழ்கிறேன்!
தமிழ் வாழும் காலமெல்லாம் நற்றமிழ் மணம்பரப்பி
அமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, அக்டோபர் 05, 2014

காத்திருக்கிறேன்....




புன்னகை எப்போது வரும்?
காத்திருக்கிறேன்....
சராசரி மனித வாழ்க்கையில்
மகிழ்வின் எல்லையில் 
உதடுகள் தருகின்ற 
உன்னத வெளிப்பாடே 
புனிதமான புன்னகை !
எண்ணங்களின் எளிய 
வண்ணமயமான 
வாழ்வியலே புன்னகை!
பொலிவுறும் முகத்தோற்றத்தில் 
புத்தொளி வீசி 
கவர்ந்திழுக்கும் கலைனுட்பமே 
புன்னகை!
மற்றவரின் செயல்பாடுகளில் 
நிறைவுகளை அடையாளம் 
காணும் மௌன வெளிப்பாடே 
புன்னகை....
ஒரு புன்னகை ஓராயிரம் 
செயல்பாட்டினை செம்மையாக 
செயல்படுத்தும் திறனாளி !
வாய்மொழியில் பாராட்டாது
புன்னகைத்து அங்கீகரித்தல் 
பண்பாட்டின் எல்லை !
அகத்தின் முகவரியை 
முகத்தின் புன்னகை  
அறிமுகப்படுத்தும் !
முகவரி அற்றுப்போய் 
முதுகெலும்பில்லாமல் வாழாதீர்!
புன்னகை முகத்தோடு 
புவிமீது புதுக்கவிதை 
எழுத வாருங்கள்...
காத்திருக்கிறேன்.....
புன்னகையின் பேரேழில் காண !


............கா.ந.கல்யாணசுந்தரம் 



சனி, அக்டோபர் 04, 2014

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

.......பாவேந்தர் பாரதிதாசன்.

வியாழன், செப்டம்பர் 25, 2014

இன்னொரு பட்டாம்பூச்சி ....





ஒரு கோப்பை தேனீர்
என்னெதிரே இருக்க
பட்டம்பூச்சி என்னருகே
நலம் விசாரித்துவிட்டு
போகிறது....!

தேநீரை அருந்தாத
எனது நெஞ்சத்தில்
இனம்புரியாத
மகிழ்வோன்று
படபடக்கிறது....

இயற்கையுடன்
இணைந்த  வாழ்வில்
இயந்திரமாய்
இருப்பதற்கு
இடம் கொடுக்கவில்லை....!

எழுந்தவாறே
பறக்க நினைக்கிறேன் ....
நடப்பு நாளின்
நடுங்கும் குளிரிலும்
கங்குலானது மனது !

தீராத வேட்கைக்கு
தீர்ப்பெழுதிப்போன
அந்த வண்ணத்துப் பூச்சியின்
சிதைந்த சிறகு ஒன்று
கைகொட்டி சிரித்தது ...

இயற்கையுடன் இயைந்த
வாழ்வு கொடுவென்று
ஏளனமாய் எனைப்பார்த்து
வழிவிட்டு ஒதுங்கியது
காற்றின் தோழமையோடு !

மீண்டும் அமர்ந்தேன்
ஒரு கோப்பை தேநீரை
அருந்தியபடி
சிந்தித்துக் கொண்டிருந்தேன்...
நலம் விசாரிக்க வரவில்லை ...
இன்னொரு பட்டாம் பூச்சி !

...........கா.ந.கல்யாணசுந்தரம்




செவ்வாய், செப்டம்பர் 23, 2014

கார்கால ஹைக்கூ கவிதைகள்.....




*கார்கால மழை
நனையாமல் நகரும் நத்தைகள்
சாலையோர நாய்க்குடை காளான்கள் ...!

* பாசிபடிந்த ஆல விழுதுகள்
ஊஞ்சலாடுகின்றன...
மழையில் நனைந்த மந்திகள் !

* மந்தையில் இருந்து பிரிந்தது
ஆட்டுக்குட்டி....
மஞ்சள் வெயிலில் நனைந்தபடி !

* குளிர் காற்றில் ஊசலாடும்
தூக்கனான் குருவிக் கூடுகள்...
உறக்கமிழந்த குஞ்சுகளோடு !

* புது வெள்ளத்தில்
ஆனந்தக் கூத்தாடியது...
ஓடைக்கரை தவளைகள்  !

* நேற்று பெய்த மழை வாசம்
புத்துயிர் பெற்றன...
எனது கவிதைக் கரங்கள் !

* இன்னமும் தேடுகிறது மனது
மழை வருமுன் மணக்கின்ற
மண்வாசம் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.


அது ஒரு வசந்தகாலம்...



அது ஒரு வசந்த காலம்
மேக மூட்டம் பகலை
இருளாக்கியது.....


பெருமழை பெயதலின்
முன்னோடியாய்
மின்னல் வெட்டும் இடியும்...
பள்ளிக்கூடத்தின் மணி
அடிக்கப்பட்டது....
புற்றீசலாய் வகுப்பிலிருந்து
பறந்து சென்றோம்
வீட்டுக்கு....!


சுவையான கேழ்வரகு அடை
அம்மாவின் கைவண்ணத்தில்
மணம் தவழ
அழைத்தது வீட்டின் வாயில் !


தூறல் ஆரம்பித்தது.....
மழைக்கு இதமாய்
அடையை காகிதப்பைகளில்
அடைத்து வைத்துக்கொண்டு
திண்ணையில் உட்கார்ந்து
சுவைத்தவரே தயாரானது
எங்களின் காகிதக் கப்பல்கள்....!


அக்கம் பக்கம் நட்புகளுடன்
தெருவில் அணைகட்டி
திறந்துவிட்டோம்
வெள்ளத்தை ....
வெள்ள நீரில் பயணித்தன
காகிதக் கப்பல்கள் .........
மனிதநேயத்தின்
அறிச்சுவடுகளாய்....!
ஆம்...அது ஒரு வசந்த காலம் !!!!!!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 11, 2014

மங்கலத் திருமண நாளின்று....









பெற்றோர் ஆசிகூற சுற்றமும் நட்பும் வாழ்த்தொல்லிக்க 
நற்றமிழ் நங்கை அருள்செல்வியுடன் கரம் கோர்த்த 
மங்கலத் திருமண நாளின்று ! - பல்கலையாய் 
மக்களீன்ற மனைமாட்சி மகிழ்வெய்தும் தருணமிது !
பகிருகின்றோம் வலைப்பூவில் அகம் மகிழ்ந்து.

- கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஆகஸ்ட் 09, 2014

நீங்களாவது.......




கொடிதருகிறேன் 
குண்டூசி தருகிறேன் 
நீங்களாவது சட்டையில் 
அணிந்துகொள்ளுங்கள்!
என்று தணியுமிந்த 
ஏழ்மையின் தாகம்?
தேசியம் தழைத்ததா?
சுதந்திரம் பிழைத்ததா?
நினைவினில் பாரதி ....
நிழலாடுதே உன்கவி...!

........கா.ந.கல்யாணசுந்தரம் .

சனி, ஜூன் 07, 2014

இனி தேவை ....மனிதநேயம்







@   மனிதம் பிழைக்க இனி 
       தேவை ....
       மனிதநேயம் !

@    குழந்தை வேண்டி 
        பெண்மையின் தவம் ....
        மண்சோறு உண்டபடி !

@    குழந்தைகளின் 
        போராட்ட ஊர்வலம்....
        மழலைக்  கவிஞர் வேண்டுமென!

.........கா.ந.கல்யாணசுந்தரம் 




         

திங்கள், ஏப்ரல் 14, 2014

தமிழ் நவின்று தழைத்திடுங்கள் பல்லாண்டு!










முத்தமிழின் சுவையுணரும் 
இளங்காலை நேரம் !

இத்தரையை மகிழ்விக்கும் 
சுகமான காலம் !
சித்திரை எனும் 
முத்திரை பதித்த மாதம்!
மல்லிகை மலரோடு 
மாவிலைத் தோரணம் அசைந்தாட 
மெல்லிசையாய்  
தமிழ் பேசும் மழலை மொழி !
உற்றோரும் பெற்றோரும் 
பெற்றெடுத்த தமிழ்மண்ணின் 
வரலாற்றை வளமோடு காத்திட்டு 
வளர்கின்ற தலைமுறைக்கு
தாய்மொழியை அமுதாக..... 
என்றென்றும் தந்திடுவோம்  தரமாக !
ஜெய ஆண்டின் வருகையிலே 
இதய மகிழ் தமிழ் வாழ்த்து 
இயம்புகிறேன் .... தமிழ் நவின்று 
தழைத்திடுங்கள்  பல்லாண்டு! 

........... கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஏப்ரல் 03, 2014

இதுவன்றோ தமிழனின் வீடு......

தமிழிசை நாள்தோறும் பாடு - இனி 
நற்றமிழ் துறைதோறும் நாடு 
இதுவன்றோ தமிழனின் வீடு - இதை 
மறுப்போரை மறக்காமல் சாடு 

......(தமிழிசை ) 

தாய்மொழி நன்கறிந்து பயின்றால் - அயல் 
மொழி இனிதாகும் இன்றே 
வாய்மொழி தாய்தந்த பரிசு - நம் 
வாழ்வினை வளமாக்கும் உறவு 

....(தமிழிசை ) 

அம்மா என்றழைக்கும் மழலை - பின் 
மம்மி என்றழைப்பது ஏனோ ? 
தனிமனித முன்னேற்றம் இதுவில்லை - ஏன் 
தமிழன் மறந்தான் நற்றமிழ் சொல்லை ? 

......(தமிழிசை )

............................கா.ந.கல்யாணசுந்தரம் .

திங்கள், மார்ச் 31, 2014

நாளை உலகின் பாதையை .....



ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே

ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)


 ..........கவியரசு கண்ணதாசன் .

செவ்வாய், மார்ச் 25, 2014

ஹைக்கூ கவிதைகள்..... மாறுபட்ட சிந்தனைகளுடன் !



@  பூட்டிய வீட்டுக்குள்
      சலங்கை ஒலி ...
      பரதம் கற்பித்த முற்றத்துடன் !

@  நிலவொளியில் மங்கினாலும்
      நீலவானின் நண்பர்கள் ...
      விண்மீன்கள் !

@  நடைபயிலும் குழந்தைக்கு
      தெளிவாய் தெரிந்தது
      நம்பிக்கையின் இருப்பிடம் !

...........கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், மார்ச் 19, 2014

தமிழர்தம் நெஞ்சமெல்லாம்.........



தமிழர்தம் வாழ்வினை சிற்றுளியால்
மனிதநேயமுடன் சிற்பங்களில்
அள்ளித் தெளித்தான் பல்லவன் !
பகலவன் உள்ளளவும் பார்போற்றும்
மாமல்லை பறைசாற்றும்
கலைமாந்தர் நுண்ணறிவை !
வனப்புமிகு சிலைகள் எல்லாம்
உயிர்பெற்று வாராதோ... என்றே
ஏங்கிடும் தமிழர்தம் நெஞ்சமெல்லாம்
தவிக்கிறது ........
உயிர்கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும்
மாமல்லபுரத்து எழில்மிகு சிற்பங்களை....
கடலரிப்பின்  பிடியிலிருந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், பிப்ரவரி 24, 2014

ஏங்கிடும் புத்தகங்கள்!

 @ என்னை புரட்டிப் பார்ப்பதைவிட
 படித்துப்பாருங்கள்....
ஏங்கிடும் புத்தகங்கள்!

@ வீட்டின் அழகு கூட்ட
அலங்காரப் பொருளானேன்...
படிக்கப்படாத புத்தகங்கள் !

@ என்னுள் ஒரு மயிலிறகு
காலம் கடந்தும் சுமக்கிறது  ...
வசந்த காலங்களை !

@ உங்களின் நினைவுகளில்
வாழாவிடினும் உணவானேன்...
கரையான்களுக்கு !

@ எப்படியோ அறிவொளி
ஏற்றி மகிழ்ந்தேன்
கிழிந்த நிலை புத்தகங்கள் !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.


வெள்ளி, பிப்ரவரி 21, 2014

அம்மா எனும் சொல் அற்புதமானது ...


வணிகக்கல்வி வாழ்வினை உயர்த்தும்
கல்வியில் வணிகம் மனிதத்தை வீழ்த்தும்
தாய்மொழிக் கல்வி தரத்தினை பெருக்கும்
அயல்மொழி கற்றிட அடித்தளம் அமைக்கும்

செம்மொழி தமிழின் இலக்கிய மாண்பு
சிந்தனை வளத்தின் இயற்கை ஊற்று
புலமை பெற்றிட்ட முன்னோரெல்லாம்
பன்மொழி பயின்று மேதைகளானார்

ஆங்கிலம் பயிலும் அரும்புகளிடத்து
அம்மா எனும் சொல் அற்புதமானது
அளவுக்கு மீறிய புத்தக சுமையில்
அமுத மொழியோ புதைந்து போனது

உலகின் தொன்மை தமிழில் உண்டு
உண்மை இதுவென அனைவரும் அறிவர்
பெற்றோர் நாளும் தமிழினை பகன்றால்
புதிய தலைமுறை அணியும் மகுடம்

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

நெஞ்சம் நிறையும்



இல்லையென்று  சொல்லாமல் 
ஒரு மலரினைக் கொடு 
நெஞ்சம் நிறையும் 
......கா.ந.கல்யாணசுந்தரம்