கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், பிப்ரவரி 13, 2012

முப்பொழுதும் நினைத்திருப்போம்!

மண்ணுலகை ஓரடியால்
வாமனன் அளந்தாலும்
வள்ளுவனின் ஈரடி குறள்
நம் நினைவில் தடம் பதிக்கிறது

நல்லுலகில் வள்ளுவம் வழி
நடக்கின்ற மாந்தரெல்லாம்
நல்வழிகண்டு நலம்பெருவர்
மதுரை சங்கம் கண்ட மாண்புறு தமிழ்
மண்ணில் சரித்திரம் படைத்ததுவே

செம்மொழியாய் செம்மாந்து
சேய்மையில் வாழ்வோரிடத்தும்
இன்றும் சொல்தொடுத்து
வாழ்வியலில் வளமோடு இலங்கியதே

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றி மூத்த தமிழென்று
முன்னோர்கள் பகர்ந்ததை
மீண்டும் மீண்டும் பறைசாற்றி
பேசுவதில் பயனில்லை

மென்பொருள் அறிவியலில் மேலும்
தடம்பதிக்க விழைகின்றோம்!
மென்பொருள் துறை வல்லுனர்களே
தமிழின் தரம் ஆய்ந்து துறைதோறும்
தமிழ் மென்பொருள் கணணிவளர
அயராதுழைத்திடுங்கள்....!

இந்நூற்றாண்டில் மொழிப் புரட்சி
போர்க்கள தளபதி
எப்போதும் நீங்கள்தான்...!
முத்தமிழின் சிறப்புயர்த்தும்
இத்தரையின் மாந்தர்களை
முப்பொழுதும் நினைத்திருப்போம்!!!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.