ஒரு பூக்கால ஆலாபனை ....
******************************************************
(கவிதாஞ்சலி )
நிலவில் இருந்து வந்தவன் என்பதால்
கடவுளின் முகவரியைக் கேட்டுப் பார்த்தேன்...
இறந்ததால் பிறந்தவன் என்று சொல்லி
இது சிறகுகளின் காலம் எனப் பறவையின் பாதையை
உனது சுட்டுவிரலால் அடையாளம் காட்டினாய் !
விலங்குகள் இல்லாத கவிதைக்கு
மின்மினிகளால் ஒரு கடிதம் எழுதி....
பூப்படைந்த சபதமாய் முத்தமிழின் முகவரிக்கு
பால்வீதி சமைத்தாயே !
ஆனால் கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லையென
தேவகானமாய் ஒரு ரகசியப் பூவை
அந்தச் சிலந்தியின் வீட்டில் சூட்டி மகிழ்ந்தாய் !
பசி எந்த சாதி என முழக்கமிட்டு
காக்கைக்குச் சோறும் போட்டு....
புதுக்கவிதைக் குறியீட்டில் பித்தனாய்
வாழ்ந்ததெல்லாம் நேயர் விருப்பமாய்...
சொந்தச் சிறையின் சுவர்கள் பேசிக்கொள்கின்றன...!
கம்பனின் அரசியல் கோட்பாட்டில்
நெருப்பை அணைக்கும் நெருப்பாகி
நெகிழவைத்தாய் !
கரைகளே நதியாவதில்லைதான்.... ஆனால்
காற்றை உனது மனைவியாக்கிக் காலமெல்லாம்
முத்தங்கள் ஓயாமால் கொடுத்து வந்தாய் !
அவளுக்கு நிலா என்றும் பெயர் சொல்லி ....
ஒரு பூக்கால ஆலாபனைக்குள்...
நீயொரு சோதிமிகு நவகவிதையானாய் !
வீட்டின் கதவுகளைக் காயங்கள் என்றே...
தட்டாதே திறந்திருக்கிறது மனிதநேயமாய்
என அனைவரையும் வரவேற்ற கவிக்கோவே...
மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல...
எனச் சொல்லிக்கொண்டே
விதை போல் விழுந்தவன் நீ...!
எங்களை அடைகாக்கும் கவிதைப் பறவை நீ ...
இந்த முட்டை வாசிகளுக்கு....
எம்மொழி செம்மொழியென அடையாளம்
காண்பித்தவன் நீ....உனது இழப்பில்
தொலைபேசிகளும் கண்ணீர் சிந்தின...!
வாழும் கவிதைகளில் உறங்கும் அழகனாய்
உலா வருகிறாய்....
நீ....இல்லையிலும் இருக்கிறாய்....
ஆம்....
இப்பொழுது பாலை நிலாவும்
உனக்காக ஹைக்கூ பார்வையோடு
கஜல் ஒளிகளைச் சிந்திக்கொண்டிருக்கிறது !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
(கவிக்கோ எழுதிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் பெயர்களைக் கொண்டே அவர்களுக்காக நான் எழுதிய அஞ்சலிக் கவிதையை தடாகம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்டது . நன்றியுடன். )