கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
மானுடம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மானுடம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 15, 2016

நாளொன்றைக் கூறுங்கள்...!!!




தேவைகளை உள்ளடக்கிய
வாழ்வில் அபரிமிதமாக
மனிதம் வாழ்கிறது ...!
பயணிப்பில் இலக்கு
தேவைதான்....
இலக்கின் பாதையில்
தோல்விகள் இருக்கலாம் !
ஆனால் சுயநலத்தின்
முதுகில் சவாரி செய்து
இலக்கினை அடைவதால்
யாருக்கு இலாபம் ?
வெற்றிகளை மட்டுமே
பச்சை குத்திக்கொள்ளும்
மனிதம் எப்போதுமே
அடையாளம் காணப்படுகிறது
ஆம்..............................
சூழலை மறந்த இனத்தோடு !
கொள்கையற்ற அரசியலார்
கால்கழுவி வாழுகின்ற
சுயநலக் கூட்டங்கள்
அவலநிலை மாந்தரின்
அன்றாட வாழ்வுதனை
கூறுபோட்டு விற்கிறது !
எல்லோரும் எல்லாமும்
பெறவேண்டும் !
இங்கு இல்லாமை
இல்லாத நிலை வேண்டும் !
........இதனை மெய்ப்பிக்கும்
நாளொன்றைக் கூறுங்கள்...!!!
.........கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஜூலை 09, 2016

தார்ச்சாலைப் பூக்கள்

தெருவிளக்கு உமிழும் 
வெளிச்ச எச்சிலில் 
இரவு  தன்னை 
கரைத்துக்கொண்டு
விடியலின் வாழ்வுக்கு 
வழிவிடுகிறது 

தார்ச்சாலைப் பூக்கள் 
வியர்வைத்துளிகளின் 
வாசம் பரப்பி 
ஒரு பரபரப்பில் 
தன்னை சிறைவைக்க 
தயாரானது 

எச்சங்களின் வரவால் 
வயிறு புடைத்த 
குப்பைத் தொட்டிகள் 
அட்டை பொறுக்கும் 
சிறுவர்களின் மறுவாழ்வில் 
அங்கம் கொண்டது   

நான்கு சக்கரம் 
இரண்டு சக்கரம் 
மூன்று சக்கரம் 
நாளெல்லாம் உருண்டு 
மானுடத் திசுக்களை 
சுமந்தவாறு 
ஊர்வலத்தை நடத்தின  

வளமிக்க 
விளைநிலங்களை 
மறந்த மனங்கள் 
விடுதலை அறியா 
விருப்பினர்களாக
தூண்டில்  புழுவானார்கள் 

நெரிசல் மிக்க 
நகரத்து விண்வெளியில் 
பறக்க மறந்த
பறவைகள் மட்டும் 
கிராமத்து பாதைகளை 
தேர்ந்தெடுத்தன 

.........கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

ஞாயிறு, மே 20, 2012

இலக்கை நோக்கி

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.