கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், அக்டோபர் 12, 2011

தமிழே வாழ்க!

தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும்
ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;
வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்
ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை
இமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.
தமிழைத் தனித்த புகழில் நட்டாய்
தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா!
தத்துவ உணர்வை முதலில் தந்தாய்;
எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்
முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க!
இழைத்த குயிலே இசையே வாழ்க!
தழைத்த மயிலே கூத்தே வாழ்க!
ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

.........புரட்சி கவி பாரதிதாசன்