கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
நவீனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவீனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 24, 2019

ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில்

மௌனித்த இரவுத் திண்ணையில் 
யாரோ வாசிக்கிறான் புல்லாங்குழல்... 
கடலின் மொத்த அலைகளையும் 
வாரிச் சுருட்டி தனது விரல்நுனிகளில் 
வடியவைக்கிறான் இசையின் அலைகளை !
உனக்கும் எனக்குமான இடைவெளிகளை 
இட்டு நிரப்புகிறது இந்த இரவு நேரம் ...
அடர் பனிப்பொழிவில் உனது 
உருவம் மெல்லிய நீரோவியமாய்த் தெரிகிறது !
வியாபிக்கும் மௌனப் பெருவெளியில் 
இருவர் மட்டுமே அமர்ந்திருப்பது 
அந்த இசைக்கலைஞனுக்கு எப்படித் தெரியும் ?
எப்படியோ விடியலுக்குள் தெருக்களின் 
நீளம் குறையுமென்பது தெரிகிறது ...
தள்ளிப்போக எனக்கு விருப்பமில்லை ....
சாணம் மெழுகிய தெருவாசலில் 
அரிசிமாவுக் கோலத்தை ருசிக்கக் காத்திருக்கும் 
ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில் 
நான் மெல்ல ஊர்ந்துகொண்டிருப்பேன் 
உனது காலடித்தடம் ஸ்பரிசிக்கும் வரை !

...........கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஆகஸ்ட் 05, 2017

இது யாருக்கான தேடல் ?

இது யாருக்கான தேடல் ?
இரவும் பகலும் உறங்காத இதயத்துடன்
உயர்த்திப் பிடிக்கும் நெஞ்சுரத்துடன்
கண்களில் எதிர்காலத்தின்
வண்ணங்களைத் தேக்கியவாறே 
எத்தனை எத்தனை விடியாத பொழுதுகள் !
ஈரைந்து மாதங்கள் கூட ஒரு மலரைத்
தாங்கும் காம்பென சுகமானச் சுமையாகி
தவத்தின் மனோநிலைதான் இருந்தது !
மகனே உனது வளர்ப்பில் செலுத்தும் கவனங்களால்
ஒரு மண்பாண்டத் தொழிலாளியைப்போல்
எனது கவனங்கள் எப்போதுமே இருந்தது !
எப்பொழுதுமே என்னருகில்
உனை இருக்கச் செய்தல் என்பது
எனது இயலா நிலை என்று உணருகிறேன்....
காலத்தின் தேவை என்ன என்பதை
உனது உணர்வுகளால் தெரியப்படுத்துகிறாய்
பிரிதலுக்கான நேரம்தான் என அறிந்தும்
எதிர்பார்ப்பின்றி அன்பின் எல்லைகளை
விரிவுபடுத்தியத்தில் ஆனந்தம் கொண்டேன் !
அதீத கற்பனை வேண்டாம் வாழ்வில்
இயல்பின் வெளிப்பாடுகளை நுகர்வதில் ...
உனக்கான அடையாளங்களை தொலைக்காதே !
உன்னை உணர்ந்துகொண்டபிறகும்
யாருக்காகவும் மாற எப்போதும் நினைக்காதே !
தனித்துவ மேன்மையில் உனது
வெற்றிக் கொடிகள் எப்போதும் பறக்கட்டும் !
இந்த முதியோர் இல்லத்தில்
என்னிடமிருக்கிறது உனக்கான முத்திரை....
நானொரு முலையூட்டி வெப்ப இரத்த
வாழ்வினமே.....!...ஆம் மகனே .....
இது யாருக்கான தேடல் ?
வாழை அடி வாழைதான் இந்த மானுடம் !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
(உலகத் தாய்ப்பால் வாரம் )

இதுதான் கார் காலமோ ?

மின்னல் வெட்டிய பொழுதில்
மழைச் சாரல் !
துளிர்த்தலும் உதிர்தலும்
அன்றாட நிகழ்வுகள் ....
தெருவெங்கும் செந்நிற இலைகளால் 
ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு !
நீ...நடந்த பாதைகளில்
உதிர்த்த புனகைக் கோட்டின் எல்லைகளில்...
தவம் செய்யும் புல்லின் பனித்துளிகள் !
ஒன்றிரண்டு நனைந்த பறவைகள்
சிறகு விரித்தலில் சிந்தும்
மழைத் துளிகள் ...
இதுதான் கார் காலமோ ?
மங்கிய மாலைப் பொழுதில்
மேற்கு திசை வானம்
கவிழ்ந்து கிடக்கிறது !
மேகங்களைச் சுமந்தபடி
கிழக்கிலிருந்து புறப்பட்ட
ஈரமற்ற உனது குடைக்குள்
இறக்கத்துடன்
ஒரு இதயம் பயணிக்கிறது.....
யாருக்கும் தெரியாமல் !
திண்ணையில் அந்தக் குடையை
மடக்கி வைக்காதே....
அது மரணித்துவிடும் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 15, 2016

நாளொன்றைக் கூறுங்கள்...!!!




தேவைகளை உள்ளடக்கிய
வாழ்வில் அபரிமிதமாக
மனிதம் வாழ்கிறது ...!
பயணிப்பில் இலக்கு
தேவைதான்....
இலக்கின் பாதையில்
தோல்விகள் இருக்கலாம் !
ஆனால் சுயநலத்தின்
முதுகில் சவாரி செய்து
இலக்கினை அடைவதால்
யாருக்கு இலாபம் ?
வெற்றிகளை மட்டுமே
பச்சை குத்திக்கொள்ளும்
மனிதம் எப்போதுமே
அடையாளம் காணப்படுகிறது
ஆம்..............................
சூழலை மறந்த இனத்தோடு !
கொள்கையற்ற அரசியலார்
கால்கழுவி வாழுகின்ற
சுயநலக் கூட்டங்கள்
அவலநிலை மாந்தரின்
அன்றாட வாழ்வுதனை
கூறுபோட்டு விற்கிறது !
எல்லோரும் எல்லாமும்
பெறவேண்டும் !
இங்கு இல்லாமை
இல்லாத நிலை வேண்டும் !
........இதனை மெய்ப்பிக்கும்
நாளொன்றைக் கூறுங்கள்...!!!
.........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், ஜூலை 13, 2016

வடுகப்பட்டிமுதல் வால்காவரை ......



என் ஜன்னலின் வழியே
எட்டிப்பார்க்கிறேன்
நேற்றுப் போட்ட கோலம் கூட
ஒரு மௌனத்தின்
சப்தங்களாகிப்போனது !
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
என்று வைகறை மேகங்களில்
தமிழுக்கு நிறமுண்டென
உனது திருத்தி எழுதிய தீர்ப்புகள்
மறக்கவியலா கல்வெட்டுக்கள் !
பெய்யெனப்பெய்யும் மழையே ....
இந்த தண்ணீர் தேசத்து
எல்லா நதிகளிலும்
எங்கள் ஓடங்கள்
சிகரத்தை நோக்கி
கொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடனும்
காவி நிறத்தில் ஒரு காதல் செய்கிறது !
மூன்றாம் உலகப்போருக்கு
வில்லோடு வா நிலவே என்றழைக்க ...
ஒரு போர்க்களமும்
இரண்டு பூக்களுமே மீதமிருந்தன !
எனது பழைய பனைவோளைகளை
புரட்டியதில்
குளத்தில் கல்லெறிந்தவர்களை விட
கவிராஜன் கதைகளைக்
கேட்டவர்களே அதிகம் !
இதனால் சகலமானவர்களுக்கும்
வடுகப்பட்டிமுதல் வால்காவரை
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் .....
கள்ளிக்காட்டு இதிகாசம்
உனது இரத்ததானம் !
கருவாச்சி காவியம்
இன்னொரு தேசியகீதம் !
சிறுகதைகளின் சிற்பியே
உன்னைச் செதுக்கினாலும்
அந்தக் கல்லிலிருந்து
உதிரும் கவிதைப்பூக்கள்
விற்பனைக்கல்ல எங்களின் சுவாசத்திற்கு !
தாய்மண்ணின் தமிழுக்கு
உயிராய் வாழும் இந்நூற்றாண்டு கவியே
உளமார வாழ்த்துகிறேன் பிறந்தநாளில்
பல்லாண்டு வாழ்கவென !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், ஜனவரி 20, 2015

கனவில் அந்த மூவரும்.....



ஊருக்குள் நுழையும்
தார்சாலையின்
ஓரத்தில்
சிதிலமடைந்த மண்டபம்...!
மண்டபத்தின் கூரையின்
நடுவில்
பெரியதாய் ஆலமரம்
தழைத்திருந்தது !

சிற்பவேலைப்பாடுகளுடன்
தூண்கள்...!
தரைப்பகுதி கற்கள்
களவாடப்பட்டு
குண்டும் குழியுமாய் இருந்தது !
சிலந்திக்கூட்டுக்குள்
சிக்கியிருந்த பூச்சிகள்
தவித்துக் கொண்டிருந்தன !

ஆடுமேயத்த சிறுவன்
ஒருவன்  
ஆட்டுக் குட்டியுடன்
அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்  
எதிரில் கட்டப்பட்டிருந்த
பஞ்சாயத்து நிழற்குடையின் கீழ்
அடுத்த பேருந்துக்காக
ஐந்தாறுபேர் நின்றிருந்தனர்!

கோடை காலத்தின்
வெப்பத்தை தாங்கமுடியாது  
அயர்ந்த உறக்கத்தில் இருந்த
அந்தச் சிறுவனின் கனவில்
மூவர் வந்து சென்றனர்.....
கண்விழித்த சிறுவனுக்கு
நினைவில் நின்றது....
கனவில் அந்த முவரும்
இவனுடன் அந்த மண்டபத்தில்
இளைப்பாறியதாய்......!
அவர்கள் கோவலன்,
கண்ணகியுடன் கவுந்தியடிகள்
என்பதுமட்டும்
அவனுக்கு தெரியவில்லை!

ஆனால் .......சரித்திர சான்றுகளின்
புனைவுகளில் என்றும்
இலயித்தவரே இருக்கின்றனர்
இன்றைய எழுத்தாளர்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

திங்கள், பிப்ரவரி 06, 2012

அசையாதா அரசியல் தேர்.....

சோழர் கால உத்திரமேரூர்
கல்வெட்டு செப்புகின்ற
மக்களாட்ச்சியின் மகிமை
நாடறிந்த ஒன்று!
இடிப்பார் இலாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் எனும்
குரள்மொழி இன்றும் கோலோச்சுகிறது!
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்தான்
இதுதான் விதியென மக்கள் நினைத்து...
வாழும் அவல நிலை இன்றும் உளது!
ஊழலின் வித்தாக அரசியல் கண்டோர்
உலவும் மாநிலத்தில் மக்களாட்சி,
மாற்றம் எப்போதும் கண்டதில்லை!
அடிபணியும் மக்களும் அதிகார வர்க்கமும்
புற்றீசலாய் புவிமீது எப்போதும்!
பொதுஉடைமைக் கொள்கைதனை
போதிக்கும் காந்தி இனிபிறப்பினும்,
ஆதரிக்கும் அரசியலாரைக் காண்பதறிது!
இளைய சமுதாயமே! இனி பொறுத்தது போதும்
பொங்கி எழுவென்று குரல்கொடுப்பினும்....,
எல்லோரும் ஏங்குகின்றனர்....
நல்லதொரு சமுதாயம் பிறப்பெடுக்க,
மக்களாட்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி பிறந்திட,
அசையாதா அரசியல் தேர் இனியேனும் !

........கா.ந.கல்யாணசுந்தரம்.