கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

ஒரு பனி பொழியும் காலை


ஒரு பனி பொழியும் காலை
அவளின் பவித்திர எழிலை
சுமந்து வந்த செந்நிறக் கதிர்கள்
அவனது இதய வாசலில்
பன்னீர் தெளித்து கோலமிட்டது...
ஒவ்வொரு விடியலும்
தினம் தினம் பூக்கின்றன
அவளின் வாசத்தோடு!
வைகறை மேகங்களில்
சேர்ந்திசைப் பாடல்களை
விடியல் பறவைகள்
பாடும்போதெல்லாம்
அவனது இதயக் கூட்டுக்குள்
ஒரு இனம்புரியாத
நேசப்பறவை சிறகடிப்பதை
உணர்ந்துகொள்ள முடியும்
அவளால் மட்டுமே!

.......கா .ந .கல்யாணசுந்தரம்.
நடை பயின்ற நாள் முதலே

ஆண் பெண்
இருவருக்குமான
உறவுப் பாலத்தை
காண்பதற்கு முன்
சிநேகத்தின் வாசத்தை
அறிந்து கொண்டேன்
நடை பயின்ற
நாள் முதலே!


இனி அவள் பாவை அல்ல...திருப்பாவை

பனி ஆடைக்குள் பவித்திரமாய்
அந்த மார்கழி காலைப்பொழுது!
விடியல் பறவை எழும்முன்
அவள் எழுந்துவிட்டாளோ?
காரணம் பனிபெய்த ஈரமண் வீதியில்,
தோழிகளுடன் அவளது பாத முத்திரைகளின்
அடையாளம் நன்றாகவே தெரிகிறது!
பாவை நோன்பில் ஆண்டுதோறும்
பயணித்திடும் அவளது எதிர்பார்ப்புகள்
வெறும் காத்திருப்புகளாகவே இருக்கின்றன!
இல்லை... இல்லை... இந்த ஆண்டு மட்டும்
அவளுக்கான இந்திரவனம்
என்னுள் பூத்திருக்கிறது....ஆம்
இனி அவள் பாவை அல்ல...திருப்பாவை!
.......கா.ந.கல்யாணசுந்தரம்.

கனவுத் தொழிற்சாலைகள்

கனவுத் தொழிற்சாலைகள்
மனிதத்தின் முதலீடுகள்
எல்லையற்ற ஆசையின்
ஆளுமையில் அவைகள்
ஒரு போருக்கான
கருவிகளின்
உற்பத்திக் கூடங்களாகின்றன....
இனியாவது
கவனத்துடன் இருப்போம்
மற்றவர்கள்
நம்
கனவுகளையாவது
விட்டு வைக்கட்டும்
களவாடாமல்!

தாய்மையின் விளக்கம் உன்னிடமே!



ஒளிதரும் மெழுகின் உன்னதமே-எங்கள்
பாச உணர்வின் உறைவிடமே!
அறுசுவை உணவின் பிறப்பிடமே-நல்ல
தாய்மையின் விளக்கம் உன்னிடமே!

கருவை சுமந்த நாள் முதலே-உன்
உருவம் காண துடித்திருந்தேன்!
பனிக்குடம் உடைத்து பிறப்பித்தாய்-நல்ல
தாய்மொழி அறிய கற்பித்தாய்!


நெஞ்சில் பதிந்த கல்வெட்டு - உந்தன்
நேசம் பொதிந்த தாலாட்டு!
இறைவனை நினைத்துப் பார்த்ததில்லை -உன்
இணையடி நிகர்க்கு ஏதுமில்லை!

[i] .....கா.ந.கல்யாணசுந்தரம்.[/i]