கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

இயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் ! தொடர் 2

இயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் !
**********************************************************************
இயற்கை மானுடம் ஆராதிக்கின்ற இறைவனின் படைப்பு. வாழ்வியல் தத்துவங்களை மனிதனுக்கு இயற்கை போதிக்கும் ஆற்றல் கொண்டவை . இயற்கையை மனிதன் இறைத்தன்மையுடன் ஒப்பிட்டு வழிபாடு செய்தவிதங்கள் அற்புதமானவை.
இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் மனிதனின் 
ஆரோக்கியமான வழிநடத்துதலில் முக்கிய பங்கு வகிக்கிறது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
" வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்....
வாடினேன் ! "
........அருள்பிரகாச இராமலிங்க வள்ளலாரின் மனிதநேயமிக்க வரிகள். இயற்கையின் வளங்களை ஆராதித்த முதல் வள்ளல். மிகச் சிறந்த ஐக்கூவாக இதை ஏற்றுக் கொள்ளலாம்.
பெரும்பாலும் ஜப்பானிய ஐக்கூ கவிதைகள் இயற்கையின் வளங்களை அதில் உறைகின்ற சூட்சுமங்களை எடுத்துச் சொல்லும் ஜென் புரிதலாகவே விளங்கின. ஒரு நூற்றாண்டை கடந்த தமிழ் ஐக்கூ கவிதைகளில் பல தமிழகம் சார்ந்த இயற்கையின் புரிதலோடு ஒட்டி எழுதப்பட்டுள்ளன என்பது நிதர்சன உண்மை.
தற்கால ஐக்கூ கவிகளின் புரிதல் இயற்கை ஒட்டி இருத்தல் அவசியம். காலச் சூழலின் காரணமாக பெரும்பாலும் அரசியல், சமூகம் சார்ந்த அவலங்களின் வெளிப்பாடாகவே ஐக்கூ கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன....இதுதான் உண்மையும் கூட.
எழுதும் பத்து ஐக்கூ கவிதைகளில் ஒன்றையாவது இயற்கையின் புரிதலோடு எழுதுங்கள். அவை காலம் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
இனி சில ஹைக்கூ கவிதைகளைக் காண்போம்....
1. உள்ளே உறங்கும் தேனீக்கள்
பனியில் முழுக்க நனைந்து
கிளையில் தொங்கும் தேன்கூடு
.......ந.க.துறைவன் (ஹைக்கூ பாவை )
2. கூடு திரும்பும்
பறவைக் கூட்டம்
வெள்ளை வானவில்
......அருணாச்சல சிவா (பொன்விசிறி )
3. ஓய்ந்த மழையை
எதிரொலித்தன
மரத்தின் இலைகள்
.......கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி (பெயர் தெரியாப் பூ )
4. பூக்களுக்குக் குளிர்
போர்வையாய் விரிகிறது
வண்ணத்துப் பூச்சி
.......புல்வெளி செ.காமராசன் (விதைக்குள் விருட்சம் )
5. விண்மீன்களுக்காக காத்திருந்தபோது
மடியில் வந்து விழுந்தது
ஒரு பூ
.......கழனியூரன் (கரந்தடி )
6. வீசுகிறது
வேலியைத் தாண்டி
வெண்மல்லி வாசம்
........பொன்குமார் ( பிற )
7. மழை நனைத்த பூமி
உறவு விரிந்தது
எங்கும் மண் வாசம்
........ஆரிசன் (குளத்தில் மிதக்கும் தீபங்கள் )
8. தாமரைப் பூவில் நின்று
வண்டை விரட்டித் தவளை சொன்னது
இசைமிக நல்ல தென்று
...........ஈரோடு தமிழன்பன் (சென்னிமலை கிளியோபாத்ராக்கள்) (லிமரைக்கூ )
9. காற்றோடு கலக்கிறது
மகரந்த மணம்
வேலியோரப் பூக்கள்
............ச.கோபிநாத் (குழந்தைகளைத் தேடும் கடவுள் )
10. உதிரும் கொன்றை மலர்கள்
கருப்புக் குடையின் மேல்
கார் காலத் துவக்கம்
.......... கா.ந.கல்யாணசுந்தரம் (மனிதநேயத் துளிகள் )
......தொடரும் ....இயற்கை குறித்த புரிதல் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக