கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜனவரி 18, 2012

இனிய தமிழ் இனி

அகரம் பயின்ற நாள் முதலே
அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!
இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
இணைய தளத்திலும் தடம் பதித்தது!
ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!
உலகின் மொழிகளில் செம்மொழியென
உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!
எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென
ஏங்கும் இளைஞர் அயராதுழைப்பர்!
ஏற்றமிகு சொல்வனத்தில் புவியெங்கும்
ஐயமின்றி தேன்பொழியும் மணமலறாய்
ஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க
ஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை
ஒருங்கிணைத்து எபோதும்
ஓங்கு புகழுடன் இனியத் தமிழினி
ஔவை முதல் இன்றைய கவிகள் வரை
புகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.

(nanri: eegarai.net)

நடக்க முடியாத நதிகள்
















பலவீனத்தின் குறியீட்டில் ஒரு பாலின மனிதம்!
அது பெண்மையெனும் மலரினையொத்த
மெல்லிய பூங்காற்று! - ஆம் நிலமதில்
ஒரு நூல்கண்டு வேலியில்
ஓடி விளையாடும் நூலறுந்த பட்டங்கள்!
பெண்ணியம் பேசுகின்ற பெண்டிரெல்லாம்
புரிதலான வாழ்வுக்கொரு வழி தந்தால்
பாரத மண் மீது பெண்மைக்கொரு பெருமைதான்!
உளவியலை ஆராயாமல் உடலியலில்
ஆவல் கொண்டு மணம்புரியும் மாந்தரெல்லாம்
நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில்
எரிவதைக் காணுகின்றோம்!
விலைகேட்டுப் போனார்கள் திரும்பவில்லை - என்
வினைக்கூர்றின் மணநாளும் அரும்பவில்லையென
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிரைக் காணுகிறோம்!
பாரினில் பெண்கள் சட்டங்கள் ஆளினும்
வரதட்சணை நவீனமாய் உருவெடுத்து ஆள்கிறதே!
கலியுக இளைய தலைமுறையே......
நல்லதோர் முடிவெடுங்கள் இனிமேலும்
நடக்க முடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டாம்!
புதியதோர் உலகு செய்வோம்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

(ஈகரை தமிழ் களஞ்சியம் - இணையதளத்தில் பரிசு பெற்ற கவிதை)