கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜனவரி 18, 2012

நடக்க முடியாத நதிகள்
பலவீனத்தின் குறியீட்டில் ஒரு பாலின மனிதம்!
அது பெண்மையெனும் மலரினையொத்த
மெல்லிய பூங்காற்று! - ஆம் நிலமதில்
ஒரு நூல்கண்டு வேலியில்
ஓடி விளையாடும் நூலறுந்த பட்டங்கள்!
பெண்ணியம் பேசுகின்ற பெண்டிரெல்லாம்
புரிதலான வாழ்வுக்கொரு வழி தந்தால்
பாரத மண் மீது பெண்மைக்கொரு பெருமைதான்!
உளவியலை ஆராயாமல் உடலியலில்
ஆவல் கொண்டு மணம்புரியும் மாந்தரெல்லாம்
நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில்
எரிவதைக் காணுகின்றோம்!
விலைகேட்டுப் போனார்கள் திரும்பவில்லை - என்
வினைக்கூர்றின் மணநாளும் அரும்பவில்லையென
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிரைக் காணுகிறோம்!
பாரினில் பெண்கள் சட்டங்கள் ஆளினும்
வரதட்சணை நவீனமாய் உருவெடுத்து ஆள்கிறதே!
கலியுக இளைய தலைமுறையே......
நல்லதோர் முடிவெடுங்கள் இனிமேலும்
நடக்க முடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டாம்!
புதியதோர் உலகு செய்வோம்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

(ஈகரை தமிழ் களஞ்சியம் - இணையதளத்தில் பரிசு பெற்ற கவிதை)

1 கருத்து: