கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
கனவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 27, 2016

மனசாட்சியை கூறுபோட்டு

எனது கனவுகளை
பறித்துக்கொண்டு
நிஜங்களை பரிசளிக்க
கடவுள் எதிரே வந்தார்....

இலவசமாய் பெறுவதற்கு
மனம் விரும்பவில்லை
அது விலையில்லா
பொருளாகி என்னிடம்
சோம்பலை தந்தது....
மனசாட்சியை கூறுபோட்டு
அடிமை சாசனத்தில்
கையெழுத்திட வைத்தது....!

காலை எழுந்தவுடன்
மறந்துபோகும் கனவுகளை
மட்டுமாவது விட்டுவையுங்கள்...
மீண்டும் கடவுளிடம்
மன்றாடிக் கேட்டேன் !

கனவுகள் எப்போதும்
இலவசமல்ல
உன்னோடு பிறந்தது ! 
என சொல்லி மறைந்தார்....!
தூக்கம் கலைந்தேன்
அந்த கனவு
மறவா கனவானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம் 






வியாழன், ஜூலை 30, 2015

இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !

எளிமையின் சிகரம்
இணையிலா மாமனிதர்
கவிதை நெஞ்சின் கோமகன்
அக்கினிச் சிறகினில்
அகிலத்தை அடைகாத்தவன் ...
பார் போற்றும் பாரதரத்னா !
இராமேஸ்வர கடற்கரையின்
இளம் தென்றல்....
அன்பெனும் சிறைக்குள்
நம்மை அகப்படவைத்தவன் !
அறிவியல் உலகின்
ஓர் அமர காவியம்....
தமிழுலகின் இலக்கியப் பேழை
இந்தியத் தாயின் நல்லிணக்க நாயகன் !
மதங்களைக் கடந்த மாமேதை
அப்துல் கலாம் இன்னுயிர் பிரிந்தாலும்
அவரின் சாதனைப் பயணம்
என்றும் நம்மோடுதான். !

...............கா.ந.கல்யாணசுந்தரம்.
 

சனி, ஆகஸ்ட் 09, 2014

நீங்களாவது.......




கொடிதருகிறேன் 
குண்டூசி தருகிறேன் 
நீங்களாவது சட்டையில் 
அணிந்துகொள்ளுங்கள்!
என்று தணியுமிந்த 
ஏழ்மையின் தாகம்?
தேசியம் தழைத்ததா?
சுதந்திரம் பிழைத்ததா?
நினைவினில் பாரதி ....
நிழலாடுதே உன்கவி...!

........கா.ந.கல்யாணசுந்தரம் .

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

நங்கூரமிடாத நம்பிக்கைகளோடு .....
















பயணங்களில் புதுமைகள்
எபோதுமே நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது!
பல இடங்கள் ஏற்கனவே
எனக்கு பழகியதாய் இருக்கிறது!
சில பழமையான வீடுகளை பார்க்கும்போது
அதில் வசித்தது போன்ற ஒரு உணர்வு!
நினைவு தெரிந்த நாள் முதல்
பறவைகளிடம் ஒரு அதீத பற்று!
என்னுடைய கரங்கள் தொட்டு துவக்கினால்
அது மற்றவர்களுக்கு மட்டுமே ராசியாகிறது!
நான் வசிக்கின்ற இடத்தின் எதிரில் எப்போதுமே
புதிய கட்டடம் உருவாகிறது!
அதில் வசிப்போரும் வாழ்வின் உயர்நிலையை
நுகர்கின்றனர்..
இறைவனின் இயற்கை படைப்புகளில்
ஆன்மா எபோதுமே இயைந்து செயல்படுகிறது
கனவுகளில் .....
எனது செயல்கள் முற்றுப்பெறாமல்
தொக்கிநின்று ஏக்கத்தை ஏற்படுத்துகிறது...
ஆனால் மற்றவர்கள் நடக்கிறார்கள்....
நான் மட்டும் பறந்து செல்கிறேன்....
நீரோடைகள் எப்போதுமே
பயணிப்பில் குறுக்கிடுகின்றன...
மானுடத்தின் ஏழாம் அறிவில்
அறிவியல் பயணிக்கும் தருவாயில்
கடந்தகால பயணிப்பில் எனது
அறிவு பயனத்திசையை மாற்றி
ஆச்சரியத்தில் மீண்டும் மீண்டும்
மூழ்கிக் கிடக்கிறது....!
நங்கூரமிடாத நம்பிக்கைகளோடு!




......கா.ந.கல்யாணசுந்தரம்.