கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், டிசம்பர் 12, 2012

12.12.12 ஹைக்கூ கவிதைகள்*இலையுதிர் காலத்தின்
திறந்த புத்தகமாயின....
தளிர்களின் வரவு!

*மொட்டவிழும் மலருக்கு
தெரியாத உறவு...
வேர்களின் பரிவு !

*புல் நுனியில்
ஒரு பிரபஞ்சம்
பனித்துளி !

*தென்றலின் தழுவலில்
நாணிற்று ....
ஆற்றங்கரை நாணல் !

*மாலை நேரத்து
எழிலோவியங்கள்....
கூடு திரும்பும் பறவைகள் !

*மீனவனின் அவலத்தை
சுமந்து வந்தது......
கடலோர காற்று !

*மலை முகட்டில்
மேகப் பெண்களின் ஆடிப் பொங்கல் ....
அருவி!

*வெள்ளி அலைகளின்
தோழமையுடன் .....
துள்ளியெழும் மீன்கள் !

*பரிசல் பெண்ணின்
புரிதல் வாழ்க்கையில் ....
புலம் பெயரா படகுத்துடுப்புகள் !

*தேன் தந்த மலருக்கு
வண்டின் பரிசளிப்பு....
மகரந்த சேர்க்கை !

*கொன்றை மலர்களின்
சிவப்பு கம்பள வரவேற்பு....
கிராமத்தின் சாலைகளில் !

*விட்டுக் கொடுக்கும்
பண்பை வளர்த்தன....
ஒற்றையடிப் பாதைகள் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.