கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, மே 10, 2013

சுமைதாங்கியிடம்

என்னை நான் வியந்து பார்க்கிறேன்
நெஞ்சு வெடிக்கும் மனச் சுமைகளைக் கூட
தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தை
இறைவன் எப்படி கொடுத்தானென்று !

எப்படியும் ஏதோ ஒரு விதத்தில்
ஒவ்வொருவருக்கும் மனச் சுமைகள்
இருந்து கொண்டுதான் இருக்கிறது!

சுமைகளை ஏற்றிய பார வண்டியாய்
இமைகளை மூடி ஒரு புத்தனைப்போல்
சும்மா இருத்தலின் சுகம் காணும்
முயற்சியில் தோல்விகளே நிதர்சனம்!

நடைபயணத்தில் தலைமுதல்
பாதம்வரை நரம்புகள் உயிர்த்தெழ
பாரம் பதவி விலகி பயணிக்க ஆரம்பித்தது !

கிராமத்து ஒற்றையடிப் பாதையில்
கம்பீரமாய் நின்ற சுமைதாங்கியில்
சாய்ந்தபடி ஓய்வெடுத்தேன்......
" தலைச் சுமைகளை மட்டுமே
இறக்கிவைக்கின்றனர் " என ஏக்கத்துடன்
முணுமுணுத்த சுமைதாங்கியிடம்
விக்கித்து வலுவிழந்துபோனேன் !


..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், மே 09, 2013

கும்புடுங்க



கத்திரி வெய்யில்
தோள்பட்டை எலும்பை
உருக்கி எடுக்க
தென்னை இளநீர்
விற்றபடி கணவனைப்
பார்த்து மனைவி சொன்னாள் ....
"படிக்கவைக்காத
தென்னம்பிள்ளையை
படம்புடிச்சி தெனமும்
கும்புடுங்க !"

......கா.ந.கல்யாணசுந்தரம்,

எதிர்வினை ....



ஒரு கனவின் தொடர்
என்னுள் மின்னல் பூக்களை
மலரவிட்டது
தொடரும் தேடுதல்
எதற்காக என்பது மட்டும்
புரியாமல் இருக்கிறது
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாமலே
கனவுகள் முற்றுப்பெருகிறது
வானப்பெருவெளியில்
சிறகை விரித்து பறக்கிறேன்
மனிதநேயமுடன்
பறவைகளின் விசாரிப்புகள்
மனதை குளிர்விக்கிறது
சிகரங்களை நோக்கி
பயணம் தொடர்கிறது
என்னைப் பிடித்து
இழுத்து கீழே தள்ள
அங்கு எவரும் இல்லை.
இருப்பினும் எதிர்வினை
இல்லாததொரு தேசத்தில்
எனது இருப்பிடம்
சிறப்பானதாக தெரியவில்லை.

............கா.ந.கல்யாணசுந்தரம்