கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
கலியுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலியுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 02, 2020

வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?

காலத்தின் வயதில் யுகங்கள்
எல்லைகளைக் கொண்டுள்ளது...
கலியுகமே...நீ
வயதின் களங்கமா?
உன்னோடு சாத்தான்கள்
உலா வருகின்றனவே !
கலியுகத்தின் தொடக்கத்தில்
அந்த மாயக்கண்ணன்
அவதரித்தானா ?
எங்களின் முதல் கணிதவியல்
மேதாவி ஆர்யபட்டா
கலியுகத்தின் தொடக்கத்தில்
கோள்கள் இடம்பெயர்ந்த
அதிசயத்தைக் கூறினார் !
இது மொஹஞ்சதாரா கல்வெட்டின்
சாட்சியம் எனக் கூறுகிறார்கள்..!
கலியுகத்தில் அதர்மம் தழைக்க
விவேகமழிந்தோர் அறிவியலை
அழிவுக்கே பயன்படுத்துகிறார்கள் !
ஆதிக்க சக்திகள்
தனிமனிதனை ஒரு கிராமத்தை
நகரத்தை….ஏன் ஒரு நாட்டையே
துண்டாட வைக்கிறது!
மருத்துவமில்லா நோய்களைப் பரப்பி
மனிதத்தை வீழ்த்துகிறது !
மலையிலிருந்து உருளும்
பாறைபோல் மக்கள்
நற்குணமிழந்து நலமிழக்கிறார்கள் !
இறைவா..உனக்கு இன்னுமா
வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?
கொரோனா உயிர்க்கொல்லி
உலகையே அழிக்கிறதே….
கலியுகத்தின் கணக்கு முடியவில்லையா?
மௌனம் களைந்து மீட்டெடு...
அபயக் குரல்கள்
வானைப் பிளப்பதற்குள் வந்துவிடு !
………..கா. ந. கல்யாணசுந்தரம்

Image may contain: 1 person

வியாழன், டிசம்பர் 22, 2011

உலகம் அழியும் இது மயனின் வழி.....


டிசம்பர் இருபத்து ஒன்று 2012
உலகம் அழியும் நாள்....
இது மயன் நாட்காட்டியின் எல்லை!
கடல் கொந்தளித்து சுனாமி வரலாம்...
எரிமலைகள் வெடித்து சிதறலாம்...
வேற்று கிரகங்களில் இருந்து
புதிய விண்வெளிக்கலன்களின் தாக்குதல்
இருக்கலாம்....
சூறாவளிப் புயல்களால் நாடு உருக்குலையலாம்....
சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைந்துபோகலாம்....
கடல்மட்டம் உயர்ந்து நிலங்களை
கபளீகரம் செய்யலாம்....
விண்மீன்களின் பாதைகள் மாறி
கிரகங்களின் மீது மோதி பூமியை தாக்கலாம்....
மொத்தத்தில் கலியுகம் முடியும் நாள்
டிசம்பர் 21 , 2012 ............................................
இப்படியெல்லாம் தகவல்கள்
தொலைக்காட்சிகளிலும்,
மேலைநாட்டு பத்திரிகைகளிலும்
இணையதளத்திலும் செய்திகள்..........
அறிவியல் வல்லுனர்கள்,
வானியல் ஆராய்ச்சியாளர்கள்
ஜோதிடர்கள், பாதிரியார்கள், சாதுக்கள்
இப்படியாக பலர்
அமானுஷ்யமாக பட்டும் படாமலும்
ஆமோதித்து பின்பு சாத்தியமில்லை என்றும்
சொல்கின்றனர்..........
இப்படியாக நான் இந்த செய்திகளை உள்வாங்கி,
சிந்தித்து நாற்காலியில் அமர்ந்திருந்தேன் !
என் கவனத்தை திசை திருப்பி
எங்களின் பெயர்த்தி சொன்னாள்.....
"இனிமே ஒரு வருஷம் என்பது
ஆறு மாதங்கள்தான் !
அப்போ நான் நிச்சயமா
நூறு வயசுக்குமேல் வாழ்வேன்...!"
சிரித்துக்கொண்டே சொன்ன சிறுமியின்
அமானுஷ்ய வார்த்தைகளில் சிக்குண்டு
அந்த மயன் நாட்காட்டியை
என் நினைவில் இருந்து
கழற்றி எறிந்தேன்!
மானுடம் வெல்லும் என்று எண்ணியவாறே!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 19, 2011

வாழ்க்கைப் படகு!























பயணங்களில் எப்போதுமே
வெற்றி நிச்சயம் என்று
சொல்லமுடியாது!
இதுதான் இலக்கு என்று
பயணிப்பவர்களுக்கு கூட
படிக்கற்கள் தடைக்கல்லாய்
மாறியதுண்டு!
விட்டுக்கொடுக்கும்
பண்பானவர்களும்
வீதியில் நிற்கும் அவலங்கள்
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது!
ஒரு நாணயத்தின்
இருபக்கங்களாய் மானுடம்
இந்த கலியுகத்தில்
வெற்றித் தோல்விக்கு மத்தியில்
பந்தாடப்படுகிறது!
ஓ.....மறைந்துபோகும் மானிடனே
மறந்துவிடாதே.....!
இந்த பிறவிக்கடலில்
எப்போதாவது சந்திக்கும்
வாழ்க்கைப் படகின்
வெற்றிப் பயணத்தில்
உன்னுடன் பயணிக்கின்றன...
தோல்வியின் துடுப்புகளும்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.