கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, பிப்ரவரி 02, 2018

நான் ஏன் ஐக்கூ கவிதைகளை மிகவும் நேசிக்கிறேன்/எழுதுகிறேன்/ரசிக்கிறேன் ?
நான் ஏன் ஐக்கூ கவிதைகளை மிகவும் நேசிக்கிறேன்/எழுதுகிறேன்/ரசிக்கிறேன் ?
****************************************************************************************************************
* ஐக்கூ கவிதைகள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது
* கவிஞரின் சிந்தனை ஒன்றானாலும் கோணங்கள் விரிந்து பல காட்சிகளைத் தருகின்றன.
* எளிதாக சொல்ல வந்த கருத்தை மூன்று வரிகளில்
பதிவிடும் போது வரிகளின் அமைப்பில் என்னை நானே மறந்து விடுகிறேன்.
* சமூக அவலங்களைச் சுட்டி எழுதும் தற்கால கவிஞர்களின் ஐக்கூ கவிதைகள் தடம் பதித்து வருகிறது சமுதாய வீதிகளில் .
* இயந்திரமாய் உழலும் அவசர உலகில் இந்த மூன்று வரிக்கவிதைகள் படிப்பவர்களை கவர்ந்திழுக்கிறது.
குறுகிய கால அவகாசத்தில் படித்து சிந்தனையைத் தூண்டும் இயபினைக் கொண்டவை இந்த ஐக்கூ கவிதைகள்.
* கொடுக்கப்படும் படத்திற்கு ஏற்றவாறு மூன்று வரிகளில் எழுதப்படும் ஐக்கூ கவிதைகள் தற்போது அதிகரித்து வருவதுடன் சமுதாய மறுமலர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது.
* ஜப்பானிய ஜென் தத்துவம் என்பதிலிருந்து விலகி
தமிழ் மண் சார்ந்த மரபு வழியில் ஏராளமான தமிழ் ஐக்கூ கவிதைகள் இப்போது உருவாகி காலத்தால் அழியா கவிதைகளாய் வலம் வருகின்றன .
* திருக்குறள் ஒன்றே முக்கால் அடி, நாலடியார் நான்கு அடிகள் என தமிழுக்குப் பெருமை சேர்த்தது போல் ஐக்கூ மூன்று அடிகளில் சரித்திரம் படைக்கிறது.
* விடுகதை போன்றும், நகைச்சுவை துணுக்கு போன்றும் பல ஐக்கூ கவிதைகள் பயண நேரங்களில் நமக்கு உடல் சோர்விற்கு மருந்தாகவும், சிரிப்போடு சிந்தனையையும் கொண்டிருக்கும் மருந்தாகவும் ஐக்கூ கவிதைகள் உள்ளன.
* ஏராளமான தமிழ் முகநூல்கள், வார,மாத, காலாண்டு இதழ்கள் தமிழ் ஐக்கூவிற்கு பக்கங்களை ஒதுக்கி வெளியிட்டு வருவதும், கவிஞர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுத் தொகைகள் கொடுப்பதும் இந்த கவிதை உலகையே தமிழ் ஐக்கூ வடிவத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது . மரபு வழி பயணிக்கும் பல இலக்கிய ஆளுமைக் கவிஞர்களும் தற்போது ஐக்கூ எழுதுகிறார்கள் என பெருமைப்படுகிறேன்.
* பல்கலை மாணவர்கள் ஐக்கூ நூல்களை பெருமளவில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற முடிகிறது எனில் இந்த தமிழ் ஐக்கூக் கவிதைகளை எப்படி நேசிக்காமல் இருக்க முடியும் ?
* தமிழ் ஐக்கூ வடிவம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு புதிய உத்திகளாக மோனைக்கூ , எதுகை ஐக்கூ என்றும் கண்டுபிடிக்கப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளதை ஐக்கூ வரலாறு பதிவு செய்வதோடு நான் மிகவும் ரசித்துப் படிக்கும் வகைமை அது.
* சிறு பிள்ளைகள் முதல் முதியோர் வரை விரும்பிப் படிக்கும் கவிதை வடிவம் ஐக்கூ என்பதில் ஐயமில்லை.
* அனைவர் கைத்தட்டலைப் பெரும் அளவில் ஐக்கூ கவியரங்கமும் அண்மையில் நடந்த கவியுலகப் பூஞ்சோலை முகநூல் ஆண்டுவிழாவில் அரங்கேற்றப்பட்டது மனத்தைக் கவர்ந்த ஒன்று.
* இவை எல்லாவற்றுக்கும் மேலாக எனது நேசிப்பிற்கும் எழுதுவதற்கும் ............. நல்ல சிந்தனையை உள்ளடக்கி மூன்று வரிகளில் பிறப்பெடுக்கும் பல ஐக்கூக் கவிதைகள் மனிதநேயமுடன் மானுடம் செழிக்க, மண்ணின் மரபு காத்து , கலாச்சார இலக்கணத்தை உணர்த்தி வருகிறது என்பதும் முக்கிய காரணமாய் விளங்குகிறது என்றே சொல்வேன்.
நீங்களும் வாசியுங்கள் தமிழ் ஐக்கூ நூல்களை.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்