கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 31, 2016

விடியலைத் தாருங்கள் ...

மக்களால் தேர்ந்தெடுகப்பட்டும்
மதியிழந்து போனார்கள் ...
காலில் விழும் கனவான்கள் !
பரவாயில்லை ...
பொறுத்துக்கொள்கிறோம் !

தொகுதிக்கு வாருங்கள்
உங்களின் காலில் விழுந்து
கெஞ்சாத குறையாய்
காத்திருக்கிறார்கள்
உங்களின் பிரஜைகள் !

அடிப்படை வசதிகூட
காணாத பகுதிக்கு
அவசியம் செல்லுங்கள்...!
குறைகளைக் கேட்டறிந்து
களைந்திடுங்கள் உடனடி தீர்வால் !

அடுத்த வேளை உணவின்றி
உடுத்த துணியுமின்றி வாடும்
அடித்தட்டு மக்களுக்கு நல்லதொரு
விடியலைத் தாருங்கள் ...
அடுத்த ஐந்தாண்டு அருகில்தான் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

தளிர்களின் காலம் ....




விண் காணும் தளிர்கள்
மண் நோக்கியபடி
சருகுகள்

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஏப்ரல் 10, 2015

சாவிகொடுத்த பொம்மைபோல் ....

எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் ...
வேகமாக நடந்து செல்வோரின் கைகள்
அவரவர்களின் மனவோட்டத்தின்படி
அசைந்து அசைந்து ஊஞ்சலாடுகிறது !
சாவிகொடுத்த பொம்மைபோல் சிலர்
முகத்தில் சலனமற்று பயணிக்கின்றனர் !
நாளைய வாழ்க்கையின் இருத்தலுக்காய்
இருப்புக்கொள்ளாமல் தேடுதல் வேட்டை !
இடையிடையே தர்மநெறி  தேர்வு நடத்தும்
பாதையோர பிதாமகர்கள் !
காலனின் கையாட்களாய்
சாலைகளெங்கும்  போக்குவரத்து
விதிமீறும் வாகனவோட்டிகள் !
தமிழில் பேசினால் அவமானமென்று
ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்கும்
இளைய தலைமுறைகள் .....
எதையும் காதில் போட்டுக்கொள்ளாது
அலைபேசி பாடல்களில் மூழ்கியபடி
பேசா மானுட பிறவிபோல்
இருப்பிடத்தை தொலைத்தவாறே நகர்கிறது !
பணம் கொடுத்து எதையும் வாங்கும்
 நகரத்து பகட்டு நரக வாழ்வுதனில்
மனிதநேயம் மறைந்தே போனது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, அக்டோபர் 05, 2014

காத்திருக்கிறேன்....




புன்னகை எப்போது வரும்?
காத்திருக்கிறேன்....
சராசரி மனித வாழ்க்கையில்
மகிழ்வின் எல்லையில் 
உதடுகள் தருகின்ற 
உன்னத வெளிப்பாடே 
புனிதமான புன்னகை !
எண்ணங்களின் எளிய 
வண்ணமயமான 
வாழ்வியலே புன்னகை!
பொலிவுறும் முகத்தோற்றத்தில் 
புத்தொளி வீசி 
கவர்ந்திழுக்கும் கலைனுட்பமே 
புன்னகை!
மற்றவரின் செயல்பாடுகளில் 
நிறைவுகளை அடையாளம் 
காணும் மௌன வெளிப்பாடே 
புன்னகை....
ஒரு புன்னகை ஓராயிரம் 
செயல்பாட்டினை செம்மையாக 
செயல்படுத்தும் திறனாளி !
வாய்மொழியில் பாராட்டாது
புன்னகைத்து அங்கீகரித்தல் 
பண்பாட்டின் எல்லை !
அகத்தின் முகவரியை 
முகத்தின் புன்னகை  
அறிமுகப்படுத்தும் !
முகவரி அற்றுப்போய் 
முதுகெலும்பில்லாமல் வாழாதீர்!
புன்னகை முகத்தோடு 
புவிமீது புதுக்கவிதை 
எழுத வாருங்கள்...
காத்திருக்கிறேன்.....
புன்னகையின் பேரேழில் காண !


............கா.ந.கல்யாணசுந்தரம் 



செவ்வாய், ஜனவரி 08, 2013

நம்பிக்கையெனும் நங்கூரம் !







*இருகரம் இணைந்த மணவாழ்வில்


புதைந்துகிடக்கிறது ....

நம்பிக்கையெனும் நங்கூரம் !



*கைகளுக்குள் கனிவாய்

மலர்ந்திடுதே....

காதல் பூக்கள் !



* கைகுலுக்காமலே

நடந்து முடிந்தது...

சாதி ஒழிப்பு மாநாடு!



* கண்ணாமூச்சி வேண்டாம்

உன் கைகளை நீட்டு...கண்ணே

மருதாணி வைக்க வேண்டும் !



* கடவுளைத் தொழும் கைகள்

காத்திருக்கவேண்டும் எப்போதும்....

மற்றவர் துயர் துடைக்க !



......கா.ந.கல்யாணசுந்தரம்.

.

சனி, ஜூலை 28, 2012

முற்றுப்புள்ளி உறவுகள்......




கால்புள்ளியும் அரைப்புள்ளியும்
அவ்வப்போது வைத்து நீட்டித்துக்
கொண்டிருந்தாலும்,
வினாக்குறி வாழ்க்கையில்
எப்போதுமே ஆச்சரியக் குறிகள்!
இருப்பினும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
முற்றுப்புள்ளி உறவுகளுடன்.

......கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, ஜூலை 13, 2012

இதய நூலகம்.....




படுக்கையில் படுத்ததும் கண்ணுறங்கி
கனவுலகில் சஞ்சரிக்கும் நாட்கள் குறைந்தன !
ஏதோ ஒன்றை இழந்து மற்றொன்றை தேடும்
படலத்தில் வாழ்க்கை காய்களை நகர்த்துகிறேன்!
ஒளிவு மறைவற்ற எண்ணங்களில்
என்னை நானே ஏமாற்றப்படுகிறேன்!
தீர்க்கமாய் செய்துமுடிக்கும் திறனும்
இப்போதெல்லாம் சோம்பல் போர்வைக்குள்
முடங்கியவாறே செயலிழந்திருப்பது...
நன்றாகவே உணரப்படுகிறது!
ஆரம்பிக்கப்பட்ட வாசல் கோலங்கள்
முடிக்கப்படாமலே சிக்கலாய் முடிவதைப்போல்
முனைப்புகள் தோல்விகளின் விளிம்புகளில் !
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது...
மனதின் உறுதியை உடல் ஏற்க மறுக்கிறது!
எண்ணங்களின் விழுதுகள் அவ்வப்போது
விரல் நுனிக்குள் கவிதை வேர்களாய் வியாபித்து....
தடம் பாதிக்கும் ஆற்றலுடன் வெளிப்படுகிறது!
காகிதத் தாட்களுடன் கடைசிவரை வாழ்வதில்
இதய நூலகம் எப்போதும் காத்திருக்கிறது!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூலை 11, 2012

தியாகத்தின் விளைநிலம் !






என்னை உயிர்ப்பித்த நாள் முதல்
பிம்பங்களின் நடு நடுவே
எனது கண்கள் தேடுகின்றன...
நிஜமான மனதுடைய முகங்களை!
சில நேரங்களில் முகத்தருகே கூட
முத்தமிடுவதுபோல் அன்பான முகங்கள்!
சலிப்பின் விளிம்புகளை தொட்டவாறு
கைதட்டலோடு சில முகங்கள்!
சேட்டைகளை செய்தவாறே எனது
புன்னகைக்கு தவமிருக்கும் புதிய முகங்கள்!
கைநீட்ட எனை எடுத்தணைக்கும்
இருகரமுடைய மனிதங்கள்!
மனித உடல் சூட்டில் எனது சிறுநீர்
சட்டென்று வெளியேற,
வீசி எறியாத குறையாய் பெற்றவளிடம்
தள்ளுகின்ற பல முகங்கள்!
பட்டாடைமேல் மலம் கழித்தாலும்
முகம் சுளிக்காமல் எனைக் கொஞ்சுகின்ற
ஓர் முகம்! - பத்துமாத பந்தம் மட்டுமல்ல!
எனது முகவரிக்குள் எழுத்தாகி ,
உயிர் மெய்யாய் உலவும் தாயெனும்
தியாகத்தின் விளைநிலம்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்



















நடந்து செல்ல செல்ல
எனது தூரம் வளர்கிறது
பாதை ஏனோ முடியவில்லை !
அருகில் எவரையும்
காண முடியவில்லை !
தேநீர் அருந்த எவ்வளவு
தூரம் பயணிப்பது?
ஒரு ஓலைக் குடிலுக்கு அருகில்
எனது தாய் என்னை வரவேற்கிறாள்!
மகனே...கால் வலிக்கிறதா?
உள்ளே வா ..... உனக்கு தேநீர் தருகிறேன்
என்றழைத்து ஒரு கோப்பை தேநீர்
அருந்தத் தருகிறாள்!
என் கரங்களைப் பற்றி
அவள் கண்ணீர் மல்க கூறுகிறாள்
" தடைக் கற்கள் என்றுமே
உனது படிக் கற்கள் தான்!
சோர்வு அடையாதே.....
என்றாவது இந்த உலகம்
உன்னை திரும்பி பார்க்கும்"
இந்த உற்சாக வார்த்தைகள்
என்னுள் ஆனந்த ராகங்களை
மீட்டுகிறது......
எனக்கு புதியதாய் சிறகுகள்
முளைக்கின்றன......
இதோ ....நான் பறந்து செல்கிறேன்...
இப்போது நான் பயணிக்கும் தூரம்
அதிகமில்லை!
இலக்குகள் என்னருகே.........!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 18, 2012

நடக்க முடியாத நதிகள்
















பலவீனத்தின் குறியீட்டில் ஒரு பாலின மனிதம்!
அது பெண்மையெனும் மலரினையொத்த
மெல்லிய பூங்காற்று! - ஆம் நிலமதில்
ஒரு நூல்கண்டு வேலியில்
ஓடி விளையாடும் நூலறுந்த பட்டங்கள்!
பெண்ணியம் பேசுகின்ற பெண்டிரெல்லாம்
புரிதலான வாழ்வுக்கொரு வழி தந்தால்
பாரத மண் மீது பெண்மைக்கொரு பெருமைதான்!
உளவியலை ஆராயாமல் உடலியலில்
ஆவல் கொண்டு மணம்புரியும் மாந்தரெல்லாம்
நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில்
எரிவதைக் காணுகின்றோம்!
விலைகேட்டுப் போனார்கள் திரும்பவில்லை - என்
வினைக்கூர்றின் மணநாளும் அரும்பவில்லையென
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிரைக் காணுகிறோம்!
பாரினில் பெண்கள் சட்டங்கள் ஆளினும்
வரதட்சணை நவீனமாய் உருவெடுத்து ஆள்கிறதே!
கலியுக இளைய தலைமுறையே......
நல்லதோர் முடிவெடுங்கள் இனிமேலும்
நடக்க முடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டாம்!
புதியதோர் உலகு செய்வோம்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

(ஈகரை தமிழ் களஞ்சியம் - இணையதளத்தில் பரிசு பெற்ற கவிதை)

புதன், ஜனவரி 04, 2012

நெஞ்சைத் தொடும் கவிதைகள்.....











இசை அறியா உள்ளத்தையும்

செயலிழக்கச் செய்கிறது...

கொலுசுச் சத்தம்!


காய்க்க முடியாது தவிக்கும்

காகிதப் பூக்களாய்...

விலை மகளிர்!


என்றும் பசுமையாய்

நினைவில் நிற்கிறது...

பாடசாலை அனுபவங்கள்!


இனியவை பேசி

இன்னல் அகற்றுதல்...

மனிதநேயத்தின் அஸ்திவாரம்!


புரட்டிப் பார்ப்பதைவிட

என்னை படித்துப்பாருங்கள்...

ஏங்கிடும் புத்தகங்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம்.








வெள்ளி, டிசம்பர் 30, 2011

மலரும் மங்கையும்



மலரும் மங்கையும்
ஒரு ஜாதியானதால்....
பட்டாம்பூச்சியின் சுவாசமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 29, 2011

தவமாய் தவமிருக்கும்


தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்



















கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 19, 2011

வாழ்க்கைப் படகு!























பயணங்களில் எப்போதுமே
வெற்றி நிச்சயம் என்று
சொல்லமுடியாது!
இதுதான் இலக்கு என்று
பயணிப்பவர்களுக்கு கூட
படிக்கற்கள் தடைக்கல்லாய்
மாறியதுண்டு!
விட்டுக்கொடுக்கும்
பண்பானவர்களும்
வீதியில் நிற்கும் அவலங்கள்
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது!
ஒரு நாணயத்தின்
இருபக்கங்களாய் மானுடம்
இந்த கலியுகத்தில்
வெற்றித் தோல்விக்கு மத்தியில்
பந்தாடப்படுகிறது!
ஓ.....மறைந்துபோகும் மானிடனே
மறந்துவிடாதே.....!
இந்த பிறவிக்கடலில்
எப்போதாவது சந்திக்கும்
வாழ்க்கைப் படகின்
வெற்றிப் பயணத்தில்
உன்னுடன் பயணிக்கின்றன...
தோல்வியின் துடுப்புகளும்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஒளிமயமான பசுமைக்காலம் - ஹைக்கூ

















பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

வாழ்வியல் சிந்தனைகள் - ஹைக்கூ




பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!




அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள்



பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!

புதன், டிசம்பர் 14, 2011

ஹைக்கூ சிந்தனைகள்....

















*தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

*ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!

*பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

*பிரிந்தபோதுதான் தெரிந்தது
இன்பம் மட்டுமே அல்ல....
வாழ்க்கையின் புரிதல் !

*இந்த பூமியைக் காட்டி
குழந்தைக்கு சோறு ஊட்டினாள்...
நிலவில் தாய்!

*விளையாடும் வயதை மறந்து
வயிற்றுப் பிழைப்பில் ...
பொம்மை விற்கும் சிறுமி!

*ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!

*இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

பின்னுக்கு தள்ளப்படவேண்டும் ....















எனக்கு தெரிந்தவரை மனிதம்
பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்...
பத்துபைசா தபால் அட்டையில்
நலம் விசாரித்தபோது உறவுகள்
பலமாயிருந்தது!
செல்போன் இல்லாத கரங்கள்
எப்போதும் தயாராய் இருந்தது
மற்றவர்களின் துன்பம் போக்க!
ஏர் பூட்டி உழவு மேற்கொண்டபோது
உணவுதானியங்கள் தரமாயிருந்தது!
நடைபாதை பயணங்கள்
மக்களின் நலனுக்கான வழிதந்தது!
திரைப்படங்கள் பண்பாட்டின்
சிகரங்களாய் விளங்கின!
இல்லறமே நல்லறமாய் கொண்டு
மாந்தரெல்லாம்
நல்லதொரு குடும்பம் பல்கலையென
வித்திட்டிருந்தன......
ஆம்...ஒரு குறைந்தபட்ச
மனிதநேயத்தைக் காண
எனக்கு தெரிந்தவரை மனிதம்
பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்...

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், அக்டோபர் 17, 2011

சற்று வித்தியாசமானதுதான்
















அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.