கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், டிசம்பர் 24, 2019

ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில்

மௌனித்த இரவுத் திண்ணையில் 
யாரோ வாசிக்கிறான் புல்லாங்குழல்... 
கடலின் மொத்த அலைகளையும் 
வாரிச் சுருட்டி தனது விரல்நுனிகளில் 
வடியவைக்கிறான் இசையின் அலைகளை !
உனக்கும் எனக்குமான இடைவெளிகளை 
இட்டு நிரப்புகிறது இந்த இரவு நேரம் ...
அடர் பனிப்பொழிவில் உனது 
உருவம் மெல்லிய நீரோவியமாய்த் தெரிகிறது !
வியாபிக்கும் மௌனப் பெருவெளியில் 
இருவர் மட்டுமே அமர்ந்திருப்பது 
அந்த இசைக்கலைஞனுக்கு எப்படித் தெரியும் ?
எப்படியோ விடியலுக்குள் தெருக்களின் 
நீளம் குறையுமென்பது தெரிகிறது ...
தள்ளிப்போக எனக்கு விருப்பமில்லை ....
சாணம் மெழுகிய தெருவாசலில் 
அரிசிமாவுக் கோலத்தை ருசிக்கக் காத்திருக்கும் 
ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில் 
நான் மெல்ல ஊர்ந்துகொண்டிருப்பேன் 
உனது காலடித்தடம் ஸ்பரிசிக்கும் வரை !

...........கா.ந.கல்யாணசுந்தரம்