கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், நவம்பர் 08, 2012

கண்கள் தேடுகின்றன.....வெறுமனே புத்தகத்தின் பக்கங்களை
புரட்டிக் கொண்டிருந்தேன் !
வெளிச்ச தேவதையின் கண்கள்
கட்டப்பட்டு தனி அறையில்
தள்ளப்பட்டு தாளிடப்பட்டிருந்தது !
ஆசிரியர் சொன்ன பாடங்களின்
வரிகளை நிலவொளியில்
கண்கள் தேடுகின்றன.....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நுனிபுல்லை மேய்ந்த மாடென
சோம்பல் முறித்து தூங்கப் போனேன் !
ஏற்கனவே மின்சார பொத்தான்களை
இயக்கி வைத்ததால் பளீர் என
மின்னொளி நீண்ட நேர இடைவெளிக்குப்பின்
பாய்ந்து என் விழிப் படலத்தை தாக்கியது...
வெளிச்ச தேவதையின் கண்கள்
இப்போது திறக்கப்பட்டன.....
ஆனால் தூக்கம் ததும்பிய
எனது விழிகள் மட்டும் திறக்கவில்லை!
கனவில் ஆசிரியரின் பிரம்படி
துல்லியமாய் நினைவில் நின்றது
விழித்தபின் அம்மாவிடம் கேட்டேன் ...
விளக்கெரிக்க மண்ணெண்ணெய்யாவது
கிடைக்குமா?

........கா.ந கல்யாணசுந்தரம்