கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஜனவரி 20, 2015

கனவில் அந்த மூவரும்.....ஊருக்குள் நுழையும்
தார்சாலையின்
ஓரத்தில்
சிதிலமடைந்த மண்டபம்...!
மண்டபத்தின் கூரையின்
நடுவில்
பெரியதாய் ஆலமரம்
தழைத்திருந்தது !

சிற்பவேலைப்பாடுகளுடன்
தூண்கள்...!
தரைப்பகுதி கற்கள்
களவாடப்பட்டு
குண்டும் குழியுமாய் இருந்தது !
சிலந்திக்கூட்டுக்குள்
சிக்கியிருந்த பூச்சிகள்
தவித்துக் கொண்டிருந்தன !

ஆடுமேயத்த சிறுவன்
ஒருவன்  
ஆட்டுக் குட்டியுடன்
அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்  
எதிரில் கட்டப்பட்டிருந்த
பஞ்சாயத்து நிழற்குடையின் கீழ்
அடுத்த பேருந்துக்காக
ஐந்தாறுபேர் நின்றிருந்தனர்!

கோடை காலத்தின்
வெப்பத்தை தாங்கமுடியாது  
அயர்ந்த உறக்கத்தில் இருந்த
அந்தச் சிறுவனின் கனவில்
மூவர் வந்து சென்றனர்.....
கண்விழித்த சிறுவனுக்கு
நினைவில் நின்றது....
கனவில் அந்த முவரும்
இவனுடன் அந்த மண்டபத்தில்
இளைப்பாறியதாய்......!
அவர்கள் கோவலன்,
கண்ணகியுடன் கவுந்தியடிகள்
என்பதுமட்டும்
அவனுக்கு தெரியவில்லை!

ஆனால் .......சரித்திர சான்றுகளின்
புனைவுகளில் என்றும்
இலயித்தவரே இருக்கின்றனர்
இன்றைய எழுத்தாளர்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம்