கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், அக்டோபர் 17, 2011

சற்று வித்தியாசமானதுதான்
















அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, அக்டோபர் 15, 2011

ஒரு கார்கால துவக்கம்.....

என் ரோஜா தோட்டத்தில்
எனக்காக முதலில் பூத்த மலராக
உனது வருகை எப்போதுமே இருக்கும்.
வார மாத இதழ்களில் வருகின்ற
கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம்
அதில் உனது பார்வையின் துடிப்பை
அறிந்துகொண்டிருக்கின்றேன்!
காதல் உணர்வுகளில் எனது இதயம்
ஒரு தும்பியாய்
வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது!

பெண்ணியம் சார்ந்த ஒரு புரிதலில்
நிச்சயமாக இது சிற்றின்பம் இல்லை.
கனவுத் தொழிற்சாலையின்
இன்ப உற்பத்தியாக இருந்தால்
இந்த சமுதாய சந்தையில்
நம்மிடம் இருந்து காதல்
களவாடப்படும் என்பது உறுதி !

நாம் கை கோர்த்து நடந்த
நாள் முதலே நட்பின்
இலக்கணத்தை அல்லவா
சுவாசித்திருக்கிறோம்.
அது நம் காதலின்
கார்கால துவக்கமென்றால்
இன்று நமதுள்ளம்
இளமையின் வாயிலில்
உன்னதமான சிநேகத்தின்
வசந்தமாகட்டும்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், அக்டோபர் 13, 2011

முப்பெரும் காலங்கள்....
















ஒரு அங்கீகாரத்துக்காக
வாழ்நாளைப்
பணயம் வைத்ததுதான்
அவனின் கடந்தகாலம் .....
சறுக்கலின் கொடுமையை
உணர்ந்தவாறே
பயணித்தல்தான்
அவனது நிகழ்காலம் .....
எதோ ஒரு சக்த்தியால்
இயக்கப்படுகிறோம்....
நம்மால் ஒன்றும் இல்லை
இறையருள் ஒன்றே
மகத்தானது!
நல்லவை நடப்பது
நம்மிடம் இல்லை....
உழைத்த உழைப்பின்
அங்கீகாரம் அரூபமான
கடவுளிடம் இருந்து
கிடைத்துவிடும் ......
இதுவே அவனது
எதிர்காலத்தின்
வசந்தமானது!


.....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், அக்டோபர் 12, 2011

தமிழே வாழ்க!

தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும்
ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;
வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்
ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை
இமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.
தமிழைத் தனித்த புகழில் நட்டாய்
தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா!
தத்துவ உணர்வை முதலில் தந்தாய்;
எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்
முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க!
இழைத்த குயிலே இசையே வாழ்க!
தழைத்த மயிலே கூத்தே வாழ்க!
ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

.........புரட்சி கவி பாரதிதாசன்

செவ்வாய், அக்டோபர் 11, 2011

மண்வாசம்




















நெனவிருக்குதா பொன்னுத்தாயி
நீயும் நானும் ஒண்ணா சேந்து
நாலாவது படிக்கிறப்போ
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி
விளையாடும் போது.....
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!
கையில கட்டுபோட்டு
வீட்ல இருந்தப்போ
ஒன்னோட அம்மாவோட
என்ன பார்க்க வந்தப்போ....
'ஒங்க பொண்ணாலதான்
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்'
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட
சண்டை போட்டு அனுப்பிடுச்சி!
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...
நான் விழுந்த எடத்துல
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி
வளக்கறேன்னு........
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட
வேற ஊருக்கு போயிட்ட....
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!
ஆமா.... பொன்னுத்தாயி!
இப்ப என் கை நல்லா இருக்கு!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...
இந்த புளியமரமும் நம்மோட
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....
மனசு தாங்காம என் நெஞ்சுலே
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப
ஒலிச்சிகிட்டே இருக்கு.....
என் சாமியே சாமி கும்பிடனுமா?

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், அக்டோபர் 10, 2011

சருகுகள்
















பிறர்க்கு உதவி இன்பம் காணும்
சிறு பிள்ளைவயதை நினைத்தே,
வாழ்ந்த இவளின் பருவம்
சமுதாய வீதியில் - சில கயவர்கள்
மடியில் தஞ்சும் புகுந்தது...
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து
பறந்த காலங்கள் வெறும்
கூட்டுப் புழுவானாள்!
கால் வயிற்று கஞ்சிக்கு காலம் தள்ள....
வயிற்றில் விளைந்த கருக்களும்
தரிசுநில வித்தாகிப் போனது!
ஒப்பிலா இன்பமுதை இரவுக் கூடலில்
தந்தவளின் உடலின்று முடங்கியது!
நுகர்ந்தோர் எல்லாம் நகர்ந்து போயினர்
அந்த நடை பாதை நுனியை யாரும் நாடவில்லை
அள்ளியெடுத்து முத்தமிட்ட மேனிக்கு
இன்று கொள்ளிவைத்து
பால் வார்க்க யாருமில்லை!
சமுதாயம் பெற்ற சந்தனப் பேழை
சாக்கடைப் பொருளாய் சிதறிக் கிடக்கிறது!
பட்டமரக் கிளை மீதமர்ந்த கழுகுக்கு
பிணவிருந்தாகி மடிந்து போனாள்!
அந்தோ!...... சமுதாயம் பெற்ற
விலைமகளிர் எல்லாம்
இளவேனிர்காலத்து உதிர்ந்த
சருகுகளே!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, அக்டோபர் 08, 2011

ஒரு கவிதையானது.....



எதற்காக மழலயின் மௌனம்?
இந்த மெழுகு வார்த்திகளை
அணைத்துதான் பிறந்தநாள்
கொண்டாடவேண்டுமா?
கேட்கின்றன இவளின் விழிகள்!
தமிழ்க் கவிதையாய்
எனை ஈன்ற பெற்றோருக்கு
ஒரு விண்ணப்பம்.....
மெழுகினை அணைக்காமல்
பிறந்தநாள் கொண்டாட
அனுமதி தாருங்கள்!
ஆமாம் இந்த மழலயின் எண்ணங்களில்
மனிதநேயத்தின் ஒளி பிறந்துள்ளாது!
இந்த காத்திருப்பு எமக்கு
ஒரு கவிதையானது!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

எதிர்பார்ப்பும் கூடத்தான்!

இயற்கையின் யதார்த்தங்களில் இருந்து
விடுபட்டுப்போன காட்சிகள்!
இனிய இராகங்களின் புரிதல் இல்லாத
பாடல்களின் அரவணைப்புகளில்
விரசமான உடை அணிவிப்புகள்!
மனதைத் தொடாத குத்துப்பாடல்கள்!
நாமென்ன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமா
கேட்கின்றோம்?
வன்முறையும் விரசமும் வாடிக்கையாகிப்போன
இந்த சினிமா ஊடகம்
இளையதளைமுறைத் தோட்டத்து
நச்சு களைகளாக அல்லவா இருக்கிறது.
அறம், பொருள், இன்பம் எனும்
வாழ்வியல் தத்துவங்கள்
நவீனத்துவமாக இந்த
சினிமா ஊடகங்களில்
ஏன் உலா வரக்கூடாது?
இது இன்றைய இளைஞ்சர்களின்
வினாவல்ல!
எதிர்பார்ப்பும் கூடத்தான்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், அக்டோபர் 06, 2011

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்



வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக உட்பொருள் ஆவாள்
மாதர் தீம்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்