கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, மே 20, 2012

இலக்கை நோக்கி

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.