கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

இவனது நிஜ வாழ்க்கை ...

வண்ணக் கலவைகள்  
கிண்ணத்தில் இருந்தன...
ஆடை களைந்து
மினுக்கும் ஜிகினா
உடையணியும் நேரம்
ஒரு முறை மீண்டும்
நிலைக்கண்ணாடியில்
தன்னைப்பார்த்து மீள்கையில்
ஒப்பனைக் கலைஞன்
அவனருகே .....!
திரைவிலகியதும்
முதல் காட்சியில்
தோன்றவேண்டும்.....!
வீதியெங்கும் ஆவலுடன்
அமர்ந்திருக்கும்
ரசிகர்கள்....!
ஹார்மோனியப் பெட்டியுடன்
பாட்டுவாதியார்
பக்க வாத்தியங்களுக்கு
நடுவே...!
மாதக்கணக்கில்
ஒத்திகை பார்த்து
நினைவில்கொண்ட பாடலை
உச்ச குரலில் பாடவேண்டும்  !
ஆம்.....................
அரிதாரம் பூசி கோமாளியாய்
மற்றவர்களை சிரிக்கச்செயும்
இவனது நிஜ வாழ்க்கை ...
ஒரு முகமூடிக்குள்
புதைந்திருக்கிறது !


...........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

காலநதியில் ஆசைப்படகுகள்...........கண்மூடி தியானிக்கும்
விழிகளின் கட்டுப்பாட்டில்
எண்ண அலைகள்...!
ஒரு பிரபஞ்சத்தின்
அந்தரங்க மொழி
மௌனம்தான் !

இழையோடிய புன்னகை
எதிர்வரும் இன்னல்களை
இல்லாமலாக்கும் !
நற்சிந்தனைகள்
வளமானவாழ்வின்
நாற்றங்கால்கள் !

ஓசையின்றி ஓடும்
காலநதியில் 
ஆசைப்படகுகள்
இலக்கின்றி பயணிக்க...
ஐம்புலன்களையும்
அடக்கி ஆளா மானுடம்  
தினம் தினம் இழக்கிறது
‘சும்மா’..... இருக்கும் 
சுகம்தனை அறியாமல் !  

 ..............கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, ஆகஸ்ட் 15, 2015

விதைக்கப்பட்ட சுதந்திரம் ......இந்தியத் திருநாட்டில்
விதைக்கப்பட்ட சுதந்திரம்
ஆல்போல் தழைத்து
தன்னிறைவின் நிழல் பரப்பி
தரணியிலே தலைநிமிர்ந்து
நிற்கிறது !
வல்லரசு கொடியுயர்த்தும்
நாள் தொலைவிலில்லை !
மென்பொருள் அறிஞர்கள்
கூகுள் இணையத்திலும்
கோலோச்சி நிற்கிறார்கள் !
அறிவியல் வேளாண்
துறைகளிலும் அளப்பரிய சாதனை !
ஏவுகணை வரலாற்றில்
இணையிலா முத்திரைப்பதித்தார்
இந்தியக் குடிமகன்
அப்துல் கலாம் !
எண்ணற்ற எல்லையோர
இராணுவ வீரர்கள், கலைஞர்கள் ,
பல்துறை அறிஞர்கள்,
திறன்மிகு அரசியலார், 
வல்லுனர்களை ஈந்து
பெரிதுவக்கும் இந்தியத்தாயின்
இன்றைய வேண்டுகோள்.....
“மதுவற்ற மாநிலங்களைத்
தழுவட்டும் இனி பாரதம் !
தனிமனிதன் ஒழுக்கநெறி
பேணி தியாகி சசிபெருமாள்
கனவுதனை நினைவாக்குங்கள்”
வந்தேமாதரம் ...!!! ஜெய்ஹிந்த்......!!!!!

.......கா.ந.கல்யாணசுந்தரம்