கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

என்னுடன் பழகிய நிழல் கூட....
*என்னுடன் பழகிய நிழல்கூட
இப்போது வெறுக்கிறது...
நிழல் தரும் மரங்களை வெட்டியதால் !

*எனது கிளைகளை வெட்டி
முடமாக்காதீர்.....
வெட்டினாலும் துளிர்த்திடுவேன்!

*படுத்து உறங்குபவர்களை விட
இளைப்பாறுபவர்களை விரும்புகிறேன்...
நிழல் தரும் மரங்கள் !

* அரம் கொண்டு மரம் அழித்தனர்
அறம் பொருள் இன்பமெனும்....
குறள் படித்த மாந்தர் !

* உங்களின் உயிர் மூச்சு எங்களிடம்
என்றாலும்....எங்களின் வாழ்வு உங்களிடமே....
மரங்களின் பெருமூச்சு !

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

வசந்த வாயில் மாவிலைத் தோரணமே!

சிந்தனை மலர்கள் தூவி
நந்தன ஆண்டு இன்று
சிறப்புற மலர்ந்ததுவே !
வண்ணங்கள் ஒருங்கிணைந்து
எண்ணங்களில் உயிர்த்தெழுந்து
வாழ்க்கைச் சுவற்றில்
நாளும் வரைந்திடுமே
நல்லதொரு ஓவியம்!
மனிதநேயம் மலரும்
மண்மீது மாண்புடனே!
சித்திரைத் தமிழ் மகளே
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் !
வசந்த வாயில் மாவிலைத் தோரணமே !
வந்திங்கு வாழ்த்தொலிகள் ஏற்றிடுவாய் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஏப்ரல் 11, 2012

வேர்களின் தேடல்.....

பூக்களுடன் உறவாடும்

வண்டுகளுக்கு தெரியுமா?

வேர்களின் தேடலை ....!


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்நடந்து செல்ல செல்ல
எனது தூரம் வளர்கிறது
பாதை ஏனோ முடியவில்லை !
அருகில் எவரையும்
காண முடியவில்லை !
தேநீர் அருந்த எவ்வளவு
தூரம் பயணிப்பது?
ஒரு ஓலைக் குடிலுக்கு அருகில்
எனது தாய் என்னை வரவேற்கிறாள்!
மகனே...கால் வலிக்கிறதா?
உள்ளே வா ..... உனக்கு தேநீர் தருகிறேன்
என்றழைத்து ஒரு கோப்பை தேநீர்
அருந்தத் தருகிறாள்!
என் கரங்களைப் பற்றி
அவள் கண்ணீர் மல்க கூறுகிறாள்
" தடைக் கற்கள் என்றுமே
உனது படிக் கற்கள் தான்!
சோர்வு அடையாதே.....
என்றாவது இந்த உலகம்
உன்னை திரும்பி பார்க்கும்"
இந்த உற்சாக வார்த்தைகள்
என்னுள் ஆனந்த ராகங்களை
மீட்டுகிறது......
எனக்கு புதியதாய் சிறகுகள்
முளைக்கின்றன......
இதோ ....நான் பறந்து செல்கிறேன்...
இப்போது நான் பயணிக்கும் தூரம்
அதிகமில்லை!
இலக்குகள் என்னருகே.........!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

எங்கள் வீட்டு தோட்டத்தில்....

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
புரட்சி புரட்சி என கேட்கிறது...
பறவைகளின் ஒலி

எங்கள் வீட்டுத் திண்ணையில்
அழியாத சுவடுகளாய் ...
மூதாதையரின் அமர்விடங்கள் !

எங்கள் வீட்டுப் பரணையில்
பழைய புத்தகக் கட்டுக்குள்...
நட்பின் அடையாளங்கள் !

எங்கள் வீட்டின் சன்னலருகே
முத்தமிடும் ...
நிலவொளி நிழல்கள் !

எங்கள் வீட்டு முற்றத்தில்
எப்போதும் காத்திருக்கிறேன்....
அணிலோடு விளையாட !

எங்கள் வீட்டு கதவிடுக்குகளில்
கண்ணை வைத்துப் பாருங்கள்...
இவளின் முகமழிந்த கோலங்கள் தெரியும்!