கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், அக்டோபர் 21, 2014

மனிதநேயமுடன் மாநிலத்தில் வாழ்ந்திடவே வாழ்த்துகிறேன்....
இன்சுவைப் பண்டங்கள் 
இனிதே உண்டு 
புத்தாடைப் பொலிவுடனே 
பட்டாசு மத்தாப்பு 
வகை வகையாய் 
வானவேடிக்கை பல செய்து 
மகிழ்ந்திருப்பீர் நட்புடனே!
தீப ஒளித் திருநாளாம் 
தீபாவளி நன்னாளில் 
மனிதம் தழைத்திட 
உறுதிமொழி ஏற்பீர் !
அறிவியல் நுட்பமெல்லாம் 
ஆக்கமுடன் கையாண்டு 
மனிதநேயமுடன் 
மாநிலத்தில் வாழ்ந்திடவே 
வாழ்த்துகிறேன்....
இனிய தீபாவளி 
திருநாள் வாழ்த்துக்கள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.  

புதன், அக்டோபர் 08, 2014

அமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது !காடுவெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தான் மிச்சம் ! - எனும்
உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை
அன்றே பாடிவைத்த பட்டுக்கோட்டையே !
இமைப்பொழுதும் சோம்பலின்றி உழைத்து 
இளைய சமுதாயம் மேன்மையுற- நல்லிசை
பாடலை நாள்தோறும் புனைந்த புலவனே !
பொதுஉடமை பூவெடுத்து நற்றமிழ் சொல்
நார்கொண்டு பாமாலை தந்த வள்ளலே !
நிலவுக்கு ஆடைகட்டி மன மேடையில்
ஆடவைத்த ஆனந்தக் கவியே!
உனதிசைப்பாடல்களால் துள்ளாத மனங்களை
துள்ளவைத்து இன்பத் தேனை அள்ள வைத்தாய்!
வாழ்ந்த காலங்கள் குறைவெனினும்
குன்றின்மேலிட்ட விளக்கானாய் !
நும் பெயரை எனக்கிட்ட பெற்றோர்கள் இன்றில்லை!
நுனிப்புல்லின் பனித்துளியாய் கவிஎழுதும்
திறன் எனக்கு வந்ததெல்லாம் - நின் பெயரை
கொண்டதாலே எனவெண்ணி நாளும் மகிழ்கிறேன்!
தமிழ் வாழும் காலமெல்லாம் நற்றமிழ் மணம்பரப்பி
அமிழ்தென நின் பாடல் இலங்கும் புவிமீது !

.........கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, அக்டோபர் 05, 2014

காத்திருக்கிறேன்....
புன்னகை எப்போது வரும்?
காத்திருக்கிறேன்....
சராசரி மனித வாழ்க்கையில்
மகிழ்வின் எல்லையில் 
உதடுகள் தருகின்ற 
உன்னத வெளிப்பாடே 
புனிதமான புன்னகை !
எண்ணங்களின் எளிய 
வண்ணமயமான 
வாழ்வியலே புன்னகை!
பொலிவுறும் முகத்தோற்றத்தில் 
புத்தொளி வீசி 
கவர்ந்திழுக்கும் கலைனுட்பமே 
புன்னகை!
மற்றவரின் செயல்பாடுகளில் 
நிறைவுகளை அடையாளம் 
காணும் மௌன வெளிப்பாடே 
புன்னகை....
ஒரு புன்னகை ஓராயிரம் 
செயல்பாட்டினை செம்மையாக 
செயல்படுத்தும் திறனாளி !
வாய்மொழியில் பாராட்டாது
புன்னகைத்து அங்கீகரித்தல் 
பண்பாட்டின் எல்லை !
அகத்தின் முகவரியை 
முகத்தின் புன்னகை  
அறிமுகப்படுத்தும் !
முகவரி அற்றுப்போய் 
முதுகெலும்பில்லாமல் வாழாதீர்!
புன்னகை முகத்தோடு 
புவிமீது புதுக்கவிதை 
எழுத வாருங்கள்...
காத்திருக்கிறேன்.....
புன்னகையின் பேரேழில் காண !


............கா.ந.கல்யாணசுந்தரம் சனி, அக்டோபர் 04, 2014

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

.......பாவேந்தர் பாரதிதாசன்.