கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், மே 26, 2016

கண்டபோதெல்லாம் வாடுங்கள் .....!

அறிவியல் வளர்ச்சியெல்லாம்
அகம் மகிழும் புறவாழ்வு !
ஆன்மீக நெறிகளில்
பேரின்பம் பெருக்கெடுக்கும் !

பொருள் குவிக்கும் செயலினிலே
பூவுலக போதை புதைந்திருக்கும் !
ஆளுமை அகங்கார வாழ்வுதனில்
அடிமைகளை வளர்த்திட்டு
ஆர்பரிக்கும் குணமிருக்கும் !

பாரம்பரிய மரபுகளை மீட்டெடுக்கும்
பணிதனில் பண்புகளே மிஞ்சிடும் !
கல்விதனை வணிகமது தத்தெடுத்தால்
மனித மூளைதனை அடகுவைக்கும்
நிகழ்வுகளே அணிவகுக்கும் !

பாரதத்தின் பெரும்பகுதி
பாரம்பரிய விவசாய நிலமாகும் !
விளைநிலங்கள் அழித்தொழித்து
வாழ்விட மையங்கள் ஆக்காதீர் !

உண்ணும் உணவின் பிறப்பிடம்
அறியா தலைமுறைகளே ....
உணருங்கள் மானுட வாழ்வுதனை !
விவசாய தொழில்நுட்பம் ஏட்டளவில்
இருந்தால் போதுமா?
தகவல் தொழில்நுட்பமும்
மென்பொருள் வளர்ச்சியும்
தானியங்களை தந்திடுமா?

திரும்பிப் பார்த்திடுங்கள் கிராமங்களை ...
பணிக்கொடையாய் விளைநிலங்கள்
தரிசாய் மாறி தரிசனம் தருகின்றன !
பொருளாதார மேம்பாட்டு திட்டமென
அரசியலார் சுருட்டுகின்ற செயலதனை
இனி ஒழிப்போம் ...!மெத்தப் படித்தாலும் வாழ்வின் மேம்பாட்டில்
இத்தரை காணும் விவசாயமே எனக்கண்டு
அணியணியாய் திரள்வீர் ...!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இனி ஜெகத்தினை எரிக்கவேண்டாம் ....
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடுங்கள் .....!

....கா.ந.கல்யாணசுந்தரம்.