கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், மார்ச் 31, 2014

நாளை உலகின் பாதையை .....



ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே

ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)


 ..........கவியரசு கண்ணதாசன் .

செவ்வாய், மார்ச் 25, 2014

ஹைக்கூ கவிதைகள்..... மாறுபட்ட சிந்தனைகளுடன் !



@  பூட்டிய வீட்டுக்குள்
      சலங்கை ஒலி ...
      பரதம் கற்பித்த முற்றத்துடன் !

@  நிலவொளியில் மங்கினாலும்
      நீலவானின் நண்பர்கள் ...
      விண்மீன்கள் !

@  நடைபயிலும் குழந்தைக்கு
      தெளிவாய் தெரிந்தது
      நம்பிக்கையின் இருப்பிடம் !

...........கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், மார்ச் 19, 2014

தமிழர்தம் நெஞ்சமெல்லாம்.........



தமிழர்தம் வாழ்வினை சிற்றுளியால்
மனிதநேயமுடன் சிற்பங்களில்
அள்ளித் தெளித்தான் பல்லவன் !
பகலவன் உள்ளளவும் பார்போற்றும்
மாமல்லை பறைசாற்றும்
கலைமாந்தர் நுண்ணறிவை !
வனப்புமிகு சிலைகள் எல்லாம்
உயிர்பெற்று வாராதோ... என்றே
ஏங்கிடும் தமிழர்தம் நெஞ்சமெல்லாம்
தவிக்கிறது ........
உயிர்கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும்
மாமல்லபுரத்து எழில்மிகு சிற்பங்களை....
கடலரிப்பின்  பிடியிலிருந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம்