கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், டிசம்பர் 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!


0123 எண்கள் இடம்மாறி 2013 ஆனதோ?
பிறக்கும்  2013 - எப்போதும்
சிறக்கும் என்பதில் ஐயமில்லை !
பறக்கும் 2012 இன்றோடு ......
மறவா நிகழ்வுகள் நெஞ்சோடு !
என்றும் சிறக்கும் 2013 -  ல்
இமயம் வியக்கும் சாதனைகள்
இலங்கும் வாழ்வில் வன்மமின்றி !
என புத்தாண்டை வரவேற்று
உங்களனைவரையும் வாழ்த்துகிறேன்!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

.......அன்புடன் கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 19, 2012

இல்லங்களில் மலர்ந்திருந்தது

 
 
 
 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 12, 2012

12.12.12 ஹைக்கூ கவிதைகள்*இலையுதிர் காலத்தின்
திறந்த புத்தகமாயின....
தளிர்களின் வரவு!

*மொட்டவிழும் மலருக்கு
தெரியாத உறவு...
வேர்களின் பரிவு !

*புல் நுனியில்
ஒரு பிரபஞ்சம்
பனித்துளி !

*தென்றலின் தழுவலில்
நாணிற்று ....
ஆற்றங்கரை நாணல் !

*மாலை நேரத்து
எழிலோவியங்கள்....
கூடு திரும்பும் பறவைகள் !

*மீனவனின் அவலத்தை
சுமந்து வந்தது......
கடலோர காற்று !

*மலை முகட்டில்
மேகப் பெண்களின் ஆடிப் பொங்கல் ....
அருவி!

*வெள்ளி அலைகளின்
தோழமையுடன் .....
துள்ளியெழும் மீன்கள் !

*பரிசல் பெண்ணின்
புரிதல் வாழ்க்கையில் ....
புலம் பெயரா படகுத்துடுப்புகள் !

*தேன் தந்த மலருக்கு
வண்டின் பரிசளிப்பு....
மகரந்த சேர்க்கை !

*கொன்றை மலர்களின்
சிவப்பு கம்பள வரவேற்பு....
கிராமத்தின் சாலைகளில் !

*விட்டுக் கொடுக்கும்
பண்பை வளர்த்தன....
ஒற்றையடிப் பாதைகள் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

செவ்வாய் கிரஹத்தில்

 
 
 
 
 
 
 
பொழுது புலர்வதற்குள்
பெரு ஒளி வரவழைத்து
அலுவலகம் சென்றார்கள்!
பிள்ளைகளுக்கு ஆக்சிஜன் குப்பிகளை
முதுகுக்குபின்னால் கட்டிவைத்து
பள்ளிக்கூடம் அனுப்பினார்கள்
புத்தகமில்லா குழந்தைகள்
ஆக்சிஜனை சுமந்தவாறே
வேற்று கிரக மனிதர்களின்
ராக்கெட்டுகளில் பறந்தவாறே
டாடா காண்பித்து கிளம்பினர் !
பெட்ரோல் இல்லா கார்கள்
நகரில் வலம் வந்தன!
மனிதநேயமில்ல வாழ்க்கையில்
வயது முதிர்ந்தோர்
செவ்வாய் கிரஹத்தில்
காப்பகங்களில் வாழ்ந்தனர்!
அப்போதும் அவர்கள்
ஒரு சொல்லை
ஆன்மதிருப்தியாய்
உச்சரித்தவரே இருந்தனர்.....
"எல்லாம் தலைஎழுத்து" !

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், டிசம்பர் 05, 2012

சிக்குண்டு தவிக்கிறது....*நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

*மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

*ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

*தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

*வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

ஒரு கனத்த இதயத்தை


கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !

..........................கா.ந.கல்யாணசுந்தரம்