கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, டிசம்பர் 31, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...


இரண்டாயிரத்து பன்னிரண்டு
அனைவருக்கும் இனிய ஆண்டு !
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இயற்கை வளமுடன் என்றென்றும்
மானுடம் இனிதே வாழ்ந்து
சமுதாய முன்னேற்றம் காணும்!
நாடும் வீடும் பயனுறும் வண்ணம்
நன்மை மலிந்திடும் ஆண்டு!
பொன்னொளிர் வாழ்வில் அனைவரும்
நிம்மதி பெற்று நித்தம் மேன்மையுற
மனதார வாழ்த்துகிறேன்
இறைவனை வேண்டி !
வாழ்க வளமுடன்!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 30, 2011

வலியறியாத...

நதி வருடிய கைகளின்
வலியறியாத...
கூழாங்கற்கள்!

......கா.ந.கல்யாணசுந்தரம்

மலரும் மங்கையும்மலரும் மங்கையும்
ஒரு ஜாதியானதால்....
பட்டாம்பூச்சியின் சுவாசமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 29, 2011

ஒரு பனிபொழியும் காலை


ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

தவமாய் தவமிருக்கும்


தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

பெத்தலகேம் நகரின் புனிதமே..!


பெத்தலகேம் நகரின் புனிதமே!
அன்னை மரியாளின் அவதார புதல்வனே!
ஆண்டவனின் தூதனே....
கல்வாரிகுன்றின் முள் முடியரசனே!
அன்பும் கருணையும் ஈகையும்
உந்தன் பிரவிக்குணங்கள்!
உலகத்தின் பிறப்புகள் உந்தன்
வருகையால் புனிதம் பெற்றன!
வேதம் பைபிளில் சங்கீதமானது!
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னம் காட்டு என
மனிதநேயம் கற்பித்த மகாத்மாவே!
அடைக்கலமே உனது அபயகரம்!
உனது பிறந்தநாள் உலகில்
எல்லோர்க்கும் ஒரு புனிதநாள்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 22, 2011

உலகம் அழியும் இது மயனின் வழி.....


டிசம்பர் இருபத்து ஒன்று 2012
உலகம் அழியும் நாள்....
இது மயன் நாட்காட்டியின் எல்லை!
கடல் கொந்தளித்து சுனாமி வரலாம்...
எரிமலைகள் வெடித்து சிதறலாம்...
வேற்று கிரகங்களில் இருந்து
புதிய விண்வெளிக்கலன்களின் தாக்குதல்
இருக்கலாம்....
சூறாவளிப் புயல்களால் நாடு உருக்குலையலாம்....
சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைந்துபோகலாம்....
கடல்மட்டம் உயர்ந்து நிலங்களை
கபளீகரம் செய்யலாம்....
விண்மீன்களின் பாதைகள் மாறி
கிரகங்களின் மீது மோதி பூமியை தாக்கலாம்....
மொத்தத்தில் கலியுகம் முடியும் நாள்
டிசம்பர் 21 , 2012 ............................................
இப்படியெல்லாம் தகவல்கள்
தொலைக்காட்சிகளிலும்,
மேலைநாட்டு பத்திரிகைகளிலும்
இணையதளத்திலும் செய்திகள்..........
அறிவியல் வல்லுனர்கள்,
வானியல் ஆராய்ச்சியாளர்கள்
ஜோதிடர்கள், பாதிரியார்கள், சாதுக்கள்
இப்படியாக பலர்
அமானுஷ்யமாக பட்டும் படாமலும்
ஆமோதித்து பின்பு சாத்தியமில்லை என்றும்
சொல்கின்றனர்..........
இப்படியாக நான் இந்த செய்திகளை உள்வாங்கி,
சிந்தித்து நாற்காலியில் அமர்ந்திருந்தேன் !
என் கவனத்தை திசை திருப்பி
எங்களின் பெயர்த்தி சொன்னாள்.....
"இனிமே ஒரு வருஷம் என்பது
ஆறு மாதங்கள்தான் !
அப்போ நான் நிச்சயமா
நூறு வயசுக்குமேல் வாழ்வேன்...!"
சிரித்துக்கொண்டே சொன்ன சிறுமியின்
அமானுஷ்ய வார்த்தைகளில் சிக்குண்டு
அந்த மயன் நாட்காட்டியை
என் நினைவில் இருந்து
கழற்றி எறிந்தேன்!
மானுடம் வெல்லும் என்று எண்ணியவாறே!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 19, 2011

வாழ்க்கைப் படகு!பயணங்களில் எப்போதுமே
வெற்றி நிச்சயம் என்று
சொல்லமுடியாது!
இதுதான் இலக்கு என்று
பயணிப்பவர்களுக்கு கூட
படிக்கற்கள் தடைக்கல்லாய்
மாறியதுண்டு!
விட்டுக்கொடுக்கும்
பண்பானவர்களும்
வீதியில் நிற்கும் அவலங்கள்
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது!
ஒரு நாணயத்தின்
இருபக்கங்களாய் மானுடம்
இந்த கலியுகத்தில்
வெற்றித் தோல்விக்கு மத்தியில்
பந்தாடப்படுகிறது!
ஓ.....மறைந்துபோகும் மானிடனே
மறந்துவிடாதே.....!
இந்த பிறவிக்கடலில்
எப்போதாவது சந்திக்கும்
வாழ்க்கைப் படகின்
வெற்றிப் பயணத்தில்
உன்னுடன் பயணிக்கின்றன...
தோல்வியின் துடுப்புகளும்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஒளிமயமான பசுமைக்காலம் - ஹைக்கூ

பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

வாழ்வியல் சிந்தனைகள் - ஹைக்கூ
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள்பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!

சனி, டிசம்பர் 17, 2011

ஆண்டாள் நாச்சியார்

மார்கழித் திங்களில் மங்கையரெல்லாம்-திரு
மாலவன் பாதம் போற்றி
பாவை நோன்பிருப்பார்!
திருப்பாவை முப்பதும் செப்புகிற பாவைக்கு
திருமண நன்னாள் எளிதில் கைகூடும்!
ஆண்டாள் நாச்சியார் நவின்ற திருப்பாவை
அழகு தமிழில் இனித்திடும் தெள்ளமுது!
புனித மாதமாம் மார்கழியில் அவர் திருநாமம் போற்றி
பயனுறுவோம் புவிமீது!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், டிசம்பர் 15, 2011

உறவுகளோடு உறவுகளின் பயணிப்பு


சந்தணப் பொட்டிட்டு மாலை அணிவித்து
மாப்பிள்ளையை வரவேற்கும்
மைத்துனராக மணமகளின் சகோதரன்!
மணப்பெண்ணின் அலங்காரத்தில்
முழுதுமாய் அக்கறை செலுத்துகின்ற
தாய் வீட்டு சொந்தங்கள் !
புதிய உறவில் தடம் பதிக்கும்
சம்பந்திகளின் சம்பந்த நலுங்கு!
மணப்பந்தலில் கைவிளக்கேந்தி நிற்கும்
நாத்தனாராக மணமகனின் சகோதரி !
மங்கல நாண் அணியும்முன்
மணமகளை மடிமீது
அமர்த்திகொள்ளும் தாய் மாமன் !
அட்சதை அனைவரிடமும் கொடுத்து
மங்கல மனைமாட்சிக்கு
ஆசி கேட்கும் மாமன் மைத்துனர்கள் !
சீர்வரிசை முறையாக
கொடுத்து மகிழும் தாய் !
மருமகன் மருமகளை தன்மக்களாக
ஏற்றுக்கொள்ளும் மாமனார் மாமியார் !
கணவனே கண்கண்ட
தெய்வமென்று மனைவியும்…
மனைவி சொல்லே
மந்திரமென கணவனும்….
மாதா பிதா குரு
தெய்வமென பிள்ளைகளும்…..
இப்படியே உறவுகள் நமது பயணிப்பில்
இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது….
பாசம் எனும் முகமூடி அணிந்தவாறே..... !


.......கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், டிசம்பர் 14, 2011

ஹைக்கூ சிந்தனைகள்....

*தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

*ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!

*பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

*பிரிந்தபோதுதான் தெரிந்தது
இன்பம் மட்டுமே அல்ல....
வாழ்க்கையின் புரிதல் !

*இந்த பூமியைக் காட்டி
குழந்தைக்கு சோறு ஊட்டினாள்...
நிலவில் தாய்!

*விளையாடும் வயதை மறந்து
வயிற்றுப் பிழைப்பில் ...
பொம்மை விற்கும் சிறுமி!

*ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!

*இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், டிசம்பர் 12, 2011

தாய்மை
பல்லவி

ஒளிரும் மெழுகிலே
ஓவியம் பிறந்தால்
தியாகம் என்றே சொல்லாகும்!

வணங்கும் தெய்வமும்
வாழ்த்திப் பேசிடும்
தாய்மையின் அழகு தெய்வீகம் - இந்த
தாய்மையின் அழகு தெய்வீகம்!
....ஒளிரும்

சரணம்

மாதங்கள் பத்தும்
சுகமாய் சுமக்க
சுமந்த உயிரே தாயாகும்!

பாச நெஞ்சம்
முதுமையில் வீழ்ந்தால்
பிள்ளையின் கரமே தூணாகும் - இந்த
பிள்ளையின் கரமே தூணாகும்!

....ஒளிரும்

கருவில் தோன்றிய
நாள் முதலே - உன்
உருவம் காணத் துடித்திருந்தேன்!
கடலும் அலையும் விலகினாலும்
அன்னையை பிரியா நிலை வேண்டும் - என்
அன்னையைப் பிரியா நிலை வேண்டும்!

.....ஒளிரும்

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

நங்கூரமிடாத நம்பிக்கைகளோடு .....
பயணங்களில் புதுமைகள்
எபோதுமே நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது!
பல இடங்கள் ஏற்கனவே
எனக்கு பழகியதாய் இருக்கிறது!
சில பழமையான வீடுகளை பார்க்கும்போது
அதில் வசித்தது போன்ற ஒரு உணர்வு!
நினைவு தெரிந்த நாள் முதல்
பறவைகளிடம் ஒரு அதீத பற்று!
என்னுடைய கரங்கள் தொட்டு துவக்கினால்
அது மற்றவர்களுக்கு மட்டுமே ராசியாகிறது!
நான் வசிக்கின்ற இடத்தின் எதிரில் எப்போதுமே
புதிய கட்டடம் உருவாகிறது!
அதில் வசிப்போரும் வாழ்வின் உயர்நிலையை
நுகர்கின்றனர்..
இறைவனின் இயற்கை படைப்புகளில்
ஆன்மா எபோதுமே இயைந்து செயல்படுகிறது
கனவுகளில் .....
எனது செயல்கள் முற்றுப்பெறாமல்
தொக்கிநின்று ஏக்கத்தை ஏற்படுத்துகிறது...
ஆனால் மற்றவர்கள் நடக்கிறார்கள்....
நான் மட்டும் பறந்து செல்கிறேன்....
நீரோடைகள் எப்போதுமே
பயணிப்பில் குறுக்கிடுகின்றன...
மானுடத்தின் ஏழாம் அறிவில்
அறிவியல் பயணிக்கும் தருவாயில்
கடந்தகால பயணிப்பில் எனது
அறிவு பயனத்திசையை மாற்றி
ஆச்சரியத்தில் மீண்டும் மீண்டும்
மூழ்கிக் கிடக்கிறது....!
நங்கூரமிடாத நம்பிக்கைகளோடு!
......கா.ந.கல்யாணசுந்தரம்.
வெள்ளி, டிசம்பர் 09, 2011

பின்னுக்கு தள்ளப்படவேண்டும் ....எனக்கு தெரிந்தவரை மனிதம்
பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்...
பத்துபைசா தபால் அட்டையில்
நலம் விசாரித்தபோது உறவுகள்
பலமாயிருந்தது!
செல்போன் இல்லாத கரங்கள்
எப்போதும் தயாராய் இருந்தது
மற்றவர்களின் துன்பம் போக்க!
ஏர் பூட்டி உழவு மேற்கொண்டபோது
உணவுதானியங்கள் தரமாயிருந்தது!
நடைபாதை பயணங்கள்
மக்களின் நலனுக்கான வழிதந்தது!
திரைப்படங்கள் பண்பாட்டின்
சிகரங்களாய் விளங்கின!
இல்லறமே நல்லறமாய் கொண்டு
மாந்தரெல்லாம்
நல்லதொரு குடும்பம் பல்கலையென
வித்திட்டிருந்தன......
ஆம்...ஒரு குறைந்தபட்ச
மனிதநேயத்தைக் காண
எனக்கு தெரிந்தவரை மனிதம்
பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்...

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, டிசம்பர் 03, 2011

உனக்கான எனது காத்திருப்பு.....நம்மைச் சுற்றி உற்றுநோக்கினால்

எல்லாமே எதற்காகவோ

காத்திருக்கின்றன...

முற்றுப்பெறாத நீண்ட சாலைகள்

பயணிப்பின் வரவை எதிர்நோக்கி!

விதைக்கப்பட்டவை

அறுவடை நாளை நோக்கி!

உயர்ந்த மலை முகடுகள்

நீர்வீழ்ச்சியின் வரவுக்காக!

வான் மேகங்கள்

நல்ல மழை பொழிதலுக்காக!

தேன்கூட்டின் ஈக்களும்

தேனருந்த முழுநிலவின் வருகைக்காக!

மூங்கில் காடுகள்

எப்போதும் காத்திருக்கின்றன

நல்லதொரு

புல்லாங்குழலை பிரசவிக்க !

இப்படி எத்தனையோ

அசையும் அசையா

பொருட்கள் ஒரு காத்திருப்பின்

சுகத்தில் லயித்திருக்கின்றன!

உனக்கான எனது காத்திருப்பு மட்டும்

உனக்கு கசந்துவிட்டது ஏனோ ?


............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஒரு குடு குடுப்பை சத்தம்......
குடு குடுப்பை சத்தத்தினை
பகலில் கேட்டபோது
இரவில் தந்த பயத்தினை
பறித்துப்போட்டது!
'நல்ல காலம் பொறக்குது தாயி......
இந்த வூட்டு எஜமானனுக்கு
ஒரு கண்டம் இருக்குது தாயி....
தண்ணிலகண்டமுன்னு நான் சொல்லல....
உங்க வூட்டு குலதெய்வம் சொல்றா தாயி ......
பூவாடகாரிக்கு பூஜை போடுங்க தாயி.....
வர கண்டம் வராம போயிடும் தாயி.....'
இப்படி விடியலில்
சொன்ன வார்த்தைக்கு
விடைதேடும் படலத்தில்
கணவருடன் சிந்திக்கும் வேளையில்.....
அதே கோடாங்கி பூம் பூம் மாட்டுடன்
ஒரு நாதஸ்வர இசையுடன் வீட்டு வாயிலில்.....
' அம்மா ஒரு கிழிஞ்ச துணி ....
சட்ட துணி கொண்டுங்கம்மா...
இந்த ஏழை கோடாங்கிக்கு குளுருதும்மா....'
என்று கேட்ட கோடாங்கியிடம் ....
'ஏம்பா குடு குடுப்பை
விடியற் காலைல வீட்டுமுன்னாடி
நடக்கப்போறத எப்படி சொன்ன? ----
என்று கேட்கும்போதே ....
' அம்மா தாயி எந்த வீட்டு முன்னாடி
என்ன சொன்னேன்னு
எனக்கே தெரியாதும்மா.....
இதெல்லாம் உங்க ஆத்தா சொல்றது!'
என்று சொல்லிக்கொண்டே
அடுத்த வீட்டின் முன்
நாதஸ்வரம் வாசிக்க தொடங்கினான்....
குலதெய்வம் கோயில் செல்ல
என் கணவர் ஏற்பாடுகளை செய்தபடி
பூவாடைக்காரிக்கு புதுப்புடவை ஒன்றை
எடுக்கவேண்டும் என்றும்
சொல்லிக்கொண்டார்.......
ஆனால் ஒரு கிழிந்த சட்டைகூட
வாங்காமல் சென்ற
அந்த குடு குடுப்பைக்காரனை நினைத்தபடியே
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.