கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 17, 2012

மலர்களின் சிரிபொலி !


பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

சனி, செப்டம்பர் 08, 2012

குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
மீண்டும் மழலையாய் பிறப்பெடுக்க இறைவனை
வேண்டும் மனம் கொடுத்து வாழ்வாள் இனிதாக!


..................கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 07, 2012

கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !
அருளோடு திருஉருவம் ஆனந்த களிநடனம்
பெருநிதிய வளத்தோடு பூவுலகில் அவதரித்தாய் !
கலியுகம் இதுவென்று மானுடம் அறிந்திடவே - ஈரைந்து
அவதாரம் எடுத்துலகில் ஆட்கொண்டாய் பெருமாளே !

ஏழுமலை கடந்து உன்னுருவம் கண்டிடவே
பாழும் இவ்வுடல் சுமந்து வருகின்றேன்
சூழும் பாவ அலைகடலில் அகப்பட்டோம் - கலியுகம்
வீழும் நாளறியேன் அறிவேன் நாராயணாவெனும் நாமம்

அலைமகள் அகம்கண்ட கலியுக வரதனிவன்
சிலைவடிவம் கொண்டிட்டான் மலைமீது!
விலையிலா அருட்கொடையாம் என்றென்றும் - திருமாலின்
கலையழகு பாதமலர் போற்றி வணங்கிடுவோம் !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 06, 2012

அன்னை ஓர் ஆலயம்!


* பயணிக்கும் தூரம் அதிகமெனில்
தாகமெடுக்கும்.....
அம்மாவை நினைத்துக்கொள் !

* நினைத்ததை பெற்றவுடன்
நிம்மதி கிடைக்கும்....
பெற்றவளின் நினைவிருந்தால்!

* புகழின் உச்சியை அடைந்தாலும்
மறவாதே....
அன்னையின் அரவணைப்பை !

* தெய்வமில்லை என்போருக்கும்
கடவுளானாள்...
அன்னை ஓர் ஆலயம்!

.................கா.ந.கல்யாணசுந்தரம்