கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஜூலை 11, 2013

தோள்களின் தோழமையோடு !


விடியல் பறவைகளோடு
எனது பயணிப்பும் !
வாழ்க்கையின் தொலைந்த
பக்கங்களைப் புரட்டியவாறே
கடக்கும் இரவுப் பொழுதுகள் !
பகல் நேரத்து தேடல்களில் !
புலம்பெயரும் சிந்தனைகள்
அரை குறை அறிவுஜீவிகளின்
அறிவுறுத்தல்களில்
செயலிழக்கும் மனம் !
உடன் பிறவா தோழர்களின்
தளர்ந்த கைகுலுக்கல்களில்
நட்பின் தேய்மானம் !
இறை வழிபாடுகளில்
இனம்புரியா நிலைப்பாடு !
கார் கால தொடர் மழையில்
நிரம்பும் ஏரிகளுக்கும்
வடிகால்கள் இருக்கின்றன !
ஆம் ....பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது....
பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள .....
தோள்களின் தோழமையோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்


சனி, ஜூலை 06, 2013

உனக்காகத் தேடுகிறேன்
வேறொரு பெயரை 
உனக்காகத் தேடுகிறேன் 
ஜாதிமல்லியே !

............கா.ந.கல்யாணசுந்தரம்