கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெஞ்சமதைத் தழுவும் வரை
இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான் ...
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று....
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும் .....
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

....கா.ந.கல்யாணசுந்தரம்


மகத்தானது மனிதநேயம்
எங்கே போகிறோம்?
என்று நமக்கு நாமே
கேள்வி கேட்டுக்கொள்வோம்!
மானுடம் வாழும் பூமியில்
விசாரிப்புகளின்றி
வறண்ட பாலைவனமாய்
ஈரமற்ற நெஞ்சின்
உடல் கூடுகளாய்
புழுவினும் கேவலமாய்
மனச் சுமைகளை மட்டுமே
சுயநலத்தின் சிகரமாக்கிக்கொண்டு
ஊர்ந்து செல்கிறோம்!
மானுடமே!.... வாழும் வாழ்க்கையில்
மகத்தானது மனிதநேயம்
என்பதைவிடுத்து பயணிக்கிறோம்!
உனது பாலைவன பயணத்திலும்
புதைகுழிகள் இருப்பதை மறந்து!


...கா.ந.கல்யாணசுந்தரம்.