கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, அக்டோபர் 05, 2018

உளவியலின் உன்னதம் ....

உளவியலின் உன்னதம் ....
*******************************************
# உயர்வின் படிகள்
உன்னருகே இருக்கிறது 
மன்னிக்கும் தன்மை
# நமக்குள் ஒளிவெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகிறது
தனித்தன்மை கண்டறிதல்
# திட்டமிடலில் எப்போதுமே
கரைந்து போகிறது
மனஅழுத்தம்
# சிந்திக்காமல் நாம்
உடைத்தெறிவோம்
நிகழ்காலத் தடைக்கற்கள்
# இலக்கினை அடையும்
போராட்டத்தில் வெற்றிகள்
சாதனையாளன் அணுகுமுறை
# மனஉளைச்சலின்
இமாலயத் தோற்றத்தில்
தூக்கமின்மை
# உறங்குதலும் உடற்பயிற்சியும்
துணைநிற்கின்றன
தியானத்தின் எல்லைகளில்
# எப்போதும் தேவையில்லை
கழற்றி எறியுங்கள்
தாழ்வு மனப்பான்மை
# மன அழுத்தத்தின்
முதன்மைக் காரணிகள்
எதிர்மறை எண்ணங்கள்
# இயற்கையோடு இயைந்த
வாழ்வோடு பூத்திருக்கிறது
வளமான வாழ்வு
# கொண்டுவந்தது ஏதுமில்லை
எடுத்துச் செல்வதும் ஒன்றுமில்லை
மனிதம் வாழ வாழ்வோம்
..............கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், செப்டம்பர் 25, 2018

வியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....

08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பின் எத்தனையோ வர்த்தக மைய்யக் கட்டடங்களைக் கட்டி நம்மை பிரம்மிக்கச் செய்திருக்கிறது இந்த முதலாளித்துவ வல்லரசு நாடு.
மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது அமெரிக்கா சுதந்திர தேவி சிலை (Statue of Liberty ) . 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த சிலை 305 அடி உயரமுள்ளது. பிரான்சு நகரில் வடிவமைக்கப்பட்ட சிலை.
வியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில் மற்றுமொரு இடம் time square எனச் சொல்லப்படும் வர்த்தக சாலை.இங்கே இரவில் கண்கொள்ளாக் காட்சியாக LED விளம்பர ஒளிரும் பலகைகள் கட்டிடங்களின் வனப்பை மெருகூட்டுகின்றன.இங்கே ஜனவரி ஒன்று ஆண்டுப்பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
என்னதான் என்னை வியப்பில் ஆழ்த்தினாலும் நமது நாட்டின் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளைக் காணும் போது ஏற்படும் ஆனந்தம் மட்டுமே எனக்கு அலாதியானது.
...........கா.ந.கல்யாணசுந்தரம்
Image may contain: Dharmambal Rathinam, smiling, standing and outdoor
Image may contain: one or more people and outdoorImage may contain: 2 people, including கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், people standing, sky and outdoor

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

கவிஞர்...புலவர்....படைப்பாளி....

கவிஞர்...புலவர்....படைப்பாளி....
*******************************************
கவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிய வேண்டும்.
அண்மையில் நான் பதிவுசெய்த தமிழ் இலக்கிய பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் என்ற பதிவால் இதனை இங்கே கருத்திட விரும்புகிறேன்.
கவிஞர் :
இந்தப் பட்டப்பெயர் மற்றவர்கள் சூட்டினாலும் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டாலும் தவறில்லை.
பல கவிதைகள் எழுதி உங்களின் உச்சாணியில் இருப்பவரும், ஒரே ஒரு கவிதை எழுதி பல்லோராலும் பாராட்டு பெற்றவரும் கவிஞர் தான். மறுப்பதற்கு இல்லை. பிறவியிலேயே கவித்துவம் பெற்ற அருளாளர்கள் இருக்கிறார்கள். படிப்பறிவு ஏதுமின்றி பட்டறிவால் கவிஞர் ஆனவர்கள் ஏராளம். உதாரணமாக கவிஞர் பட்டுக்கோட்டையார், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்கள்.
ஆக கவிஞர் எனும் பட்டம் தமிழின் வளமையை அதன் தனித்தன்மையை செம்மையாய் மரபு, புதுக்கவிதை மற்றும் குறுங்கவிதைகள் , ஹைக்கூ , நாட்டுப்புறப் பாடல்கள் வழி எழுதுபவர்கள் பெற்றுள்ள நடைமுறை அடைமொழி. இதற்கு ஒரு பதிவு பெற்ற சங்கமோ, அமைப்போ கொடுப்பது இல்லை. மக்களாலும் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளும் ஒரு பட்டம் என்றே அறியலாம்.
புலவர்:
புலமைத் தகுதி சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.ஒரு மொழியில் புலமை பெற்று சிறப்புறுதல் வேண்டும். இதற்கு இலக்கணம்,மொழியின் தொன்மை குறித்து படித்தறிதல் அவசியம். தமிழக கல்லூரிகள் புலவர் பட்டங்களை தேர்வுகள் மூலம் அளிக்கின்றன.பாடத் திட்டங்களும் பல்வேறு நிலைகளில் உள்ளன. மொழியில் சிறந்த புலமை பெற்று மரபுப் பாடல்களை இலக்கணத்துடன் இயற்றி வாழ்ந்தவர்கள் சங்க காலத்தில் அதிகம். புலவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இதனை போட்டுக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.
படைப்பாளி:
இங்கு தான் பலருக்கும் சந்தேகம் வரும். படைப்பாளி என்பவன் தனது தனித்த திறனில் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில் சிறந்த படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு கொடுப்பவன். படைப்பு என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தது. எழுத்து வடிவம் கொண்டவை அனைத்தும் படைப்பாகாது. படிப்போருக்கு நல்ல படிப்பினைத் தருவதாகவும் இருக்கவேண்டும்.துறைதோறும் நல்ல படைப்பாளிகளின் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் தானாகவே வந்து சேரும் என்பது உறுதி.
முகநூல் வழி கவிஞர்கள் சிறந்த படைப்பாளிகளாக உருவாகவேண்டும் என்பது எனது விருப்பம்.
எனக்குத் தோன்றிய கருத்துகளை இங்கே பதிந்து வருகிறேன். மேலும் சிறந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய
முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி
***********************************************************************
21.08.2018 எனது பதிவின் பின்னூட்டங்களில் எமக்கு பலர் பாராட்டியும் இந்தப் பதிவு தக்க நேரத்தில் பதியப்பட்ட சிறப்பு என்றும் தெரிவித்துள்ளனர். சிலர் குறிப்பாக Venkatesan RamalingamVathilaiPrabaவெற்றிப்பேரொளிமுனைவர் ம.ரமேஷ்மற்றும் இராம.வேல்முருகன் வலங்கைமான் ஆகியோர் பின்னூட்டங்களுக்கு பதில் கூறவேண்டிய நிலையிலும் மேலும் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்திக்கொள்ளவும் இந்தப் பதிவு அத்தியாவசியப்படுகிறது.
* தமிழகத்தில் பல்வேறு பதிவுபெற்ற பேரவைகள்,சங்கங்கள்,இலக்கிய அமைப்புகள் ,சிற்றிதழ் அமைப்புகள் கவிஞர்களுக்கு
கவிமாமணி,கவிமணி,கவிச்சுடர், கவிக்கோ ,ஒட்டக்கூத்தர்,நக்கீரன்,ஒளவையார்,கம்பர்,கபிலர்,திருவள்ளுவர்,பாரதி,பாரதிதாசன் போன்ற விருதுகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் மூத்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அரசு விருதுகளும் இப்படியே.
* கடந்த மூன்று ஆண்டுகளாக முகநூல் குழுமங்கள் பல்வேறு வகையான விருதுகளையும், மேற்கண்ட பெயருடைய விருதுகளையும், சான்றுகளையும் வழங்கி வருகின்றன. இதில் தகுதியுடைய சிலரும்,ஒன்றிரண்டு கவிதைகள் எழுதிய புதியவர்கள் பலரும் அடங்குவர்.
* மாவட்ட அளவில் மட்டைப்பந்து போட்டியிலும் பன்னாட்டளவில் நடைபெறும் போட்டிகளிலும் (கிரிக்கெட்) Man Of The Match கொடுக்கப்படுவதிலும் வேறுபாடு உண்டு. ஆனால் மாவட்ட அளவில் பெரும் விருதுதான் அந்த வீரரை பன்னாட்டு அளவில் போட்டிகளில் பங்கேற்க உதவுகிறது/ஊக்கமூட்டுகிறது என்பதில் ஐயமில்லை.
இதுபோலவே அங்கீகாரம் பெற்ற சிறந்த இலக்கிய அமைப்புகள் கொடுக்கும் விருதுகளை எளிமையாய் முகநூல் குழுமங்கள் பலருக்கும் கொடுப்பது ஊக்கப்படுத்தவே என உணரவேண்டும். தமது பெயருக்கு முன்னால் விருது பெயர்களை சேர்த்துக்கொள்ள தமக்கு அந்தத் தகுதி உள்ளதா என கவிஞர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே விருதுகளை அங்கீகாரம் பெற்ற இலக்கிய அமைப்புகளிடம் பெற முயற்சி செய்ய வேண்டும்
* ஆண்டுவிழா நடத்த அன்பளிப்பு பெறுவதில் தவறில்லை. ஆனால் அன்பளிப்பு கொடுத்தால்தான் சான்றிதழ்கள், விருதுகள் எனும் நிலை மாறவேண்டும். குழுமங்கள் சில மட்டுமே இலக்கியத் தொடர்புடைய, சிறந்த தமிழ்ப்பணியாற்றும் கவிஞர்களுக்கு விருதுகள் தருகின்றன. பல அமைப்புகள் மாற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
* முகநூல் குழுமங்கள் கவிதை போட்டிகளைக் குறைத்துக்கொண்டு பயிற்றுவித்தலில் ஈடுபட வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில குழுமங்கள் பயிற்றுவித்தலில் முனைப்புடன் ஈடுபட்டு வருவது சிறப்பு.
* ஆண்டு முழுக்க முகநூல் குழுமங்களில் போட்டியில் பங்குபெறுவதோடு தமிழ் இலக்கியச் சுவை ததும்பும் முன்னோர்களின் கவிதைகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வழங்குதல் சிறப்பு.
* முகநூல் குழுமங்களில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் புதிய குழுமங்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி உருவாக்கினாலும் தனிப்பட்ட பாதிப்புகளுக்கு பொதுவெளியில் குழும உறுப்பினர்களை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
* முகநூல் குழுமங்கள் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை அள்ளித் தருவதை தவிர்க்கலாம். ஆண்டுமுழுக்க தமிழ்ப்பணியாற்றும் தேர்ந்த கவிஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் கொடுத்து சிறப்பிக்கலாம்.
* முகநூல் குழுமங்கள் தங்களது சான்றுகளில் நிறுவனர் / தலைவர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் கையொப்பமிட்ட சான்றுகளை வழங்குதல் வேண்டும். சிறப்புடையதுமாகும்.
* குழுமங்கள் இனிவரும் காலங்களில் கவியரங்க அமர்வுகளை குறைத்து சிறப்பான திட்டமிடலை கையாளவேண்டும். ஐந்து நூல்களுக்குமேல் மேடையில் வெளியிடுவதை தவிர்த்தல் நல்லது.
விருது வழங்கல் நிகழ்வை நேரத்தோடு துவங்குதல் குழுமத்துக்கு ஆரோக்கியமானது.
* குழும விழாக்கள் தமிழ்ப் பண்ணோடு தொடங்கி நாட்டுப்பண்ணோடு முடித்தல் அவசியம் எனக் கருத வேண்டும்.
* நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நீண்ட நேரம் பேசி மற்றவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நன்று.
* நீண்ட தொலைவில் இருந்து வரும் கவிஞர்கள், வெளியூர் கவிஞர்கள் என முன்னதாக வரிசைப்படுத்தி , மேடையில் விருதுகளை சிறப்பாக அவசரமின்றி அளிக்கலாம். கவிஞர் வெற்றிப்பேரொளி சொன்னதுபோல் கிளைமாக்ஸ் காட்சிகளை தவிர்க்கலாம்.
இவையாவும்...எமக்குத் தோன்றிய கருத்துகள். முகநூல் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்தி தமிழ்ப்பணி ஆற்றுங்கள். விருதுகள்/சான்றுகள் தேர்ந்த கவிஞர்களுக்கும் சான்றோர்களுக்கும் தொடர்ந்து வழங்குங்கள்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய
முகநூல் குழுமங்கள்
***********************************************************************
அன்பார்ந்த முகநூல் தோழமைகளே..
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தமிழ் முகநூல் குழுமங்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. ஆனால் பல குழுமங்களின் இலக்கியப் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.
தமிழ் மொழியின் ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவம் உருவான வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது.
கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகளாய் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மென்பொருள் ஊடகமாய் அகில உலகமெங்கும் தனது பயணத்தை மேற்கொண்டு தொன்மையின் சிறப்பை வென்றுள்ளது.
மொழியின் தொன்மை, வீச்சு, நடை, இலக்கணம், மொழியின் பரிணாமம் போன்றவற்றைப் பகிர்வதில் இன்றைய முகநூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
இதிகாசங்கள், பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள்,
நாவல்கள், மரபு இலக்கணம், பல்வேறு கவிதை நூல்கள் ,சங்கம் தழுவிய நூல்கள், நாடகங்கள், இசை விற்பனர்களின் வரலாறு, இயற்றமிழ் அறிஞர்களின் உரைகள், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் தற்போது மின்னூலாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம் .
இவையனைத்தும் மின்னூலாக இருந்தும் அனைத்தையும் நம்மால் படிக்கும் நேரம் இருக்கிறதா ? ஆனால் அவ்வப்போது இலக்கியச் சுவைகளை மேற்கோளுடன் முகநூல் குழுமக் கவிஞர்கள் பகிர்வது சிறப்பானதாக இருக்கிறது.
பல முகநூல் குழுமங்கள் இன்றளவில் பல்வேறு கவிதை போட்டிகளை முன்வைத்து தற்கால இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தி பயிற்றுவிப்பது சிறப்பு.
எனக்குத் தெரிந்து அந்நாளில் இலக்கிய இதழ்களில் பங்களிப்பு செய்து வந்த மூத்தக் கவிஞர்கள் பலர் இப்போது முகநூல் குழுமங்களில் பதிவு செய்து பங்காளிப்பதை பார்க்கிறோம். இதனால் இன்றைய இளைய தலைமுறைகள் அவர்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களும் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.
முகநூல் குழுமங்கள் போட்டிகள் நடத்துவது தவறில்லை....அதேபோல் கவிதைப்போட்டிகளில் பங்கேற்போருக்கு சான்றுகள் வழங்குவதிலும் தவறில்லை. ஆனால் தரமான கவிஞர்களுக்கு வழங்க வேண்டும். புதியவர்களை பயிற்றுவிக்கவும் வேண்டும்.
முகநூல் குழும கவிஞர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசுவது போன்ற தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்தல் அவசியம். கவிதைகளில் குறை நிறை இருக்கத்தான் செய்யும். அனைத்தையும் ஏற்கும் மனப்பான்மை இருந்தால் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள் மேலும் தமது பணிகளை செய்வதில் முனைப்புடன் செயலாற்றும்.
முகநூல் குழுமங்கள் ஆண்டுவிழாக்கள் தொடர்ந்து நடத்தட்டும். பலரது கைத்தட்டல்கள் சிறந்த ஓசை எழுப்ப வல்லது.
நன்கொடைகள் தவறில்லை ...ஆனால் அதுவே வியாபார திணிப்பாக இருத்தல் கூடாது.
விருதுகள் வழங்கினால் தான் ஊக்கப் படுத்தும் செயலாக இருக்கும். ஆனால் விருதுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படக் கூடாது.
சிறந்த தமிழ் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள்
தொடர்ந்து ஆண்டுவிழாக்களை நடத்துவது சிறப்பு. போட்டிகள் நடத்துவதும் இனிமை மேலும் சான்றுகள் வழங்குவதும் கூடுதல் சிறப்பு.
தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நமக்கென விருது கொடுத்து விழா எடுக்கப்போவதில்லை (எதோ ஒரு சில நிறுவனங்கள் தவிர ).
விளையாட்டுப் போட்டிகளுக்கு (குறிப்பாக மட்டைப்பந்து ) தருகின்ற ஊக்கப்பரிசுகள் எப்போதும் இலக்கியத் துறைசார்ந்த விருதுகளுக்கு இல்லை. முகநூல் குழுமங்கள், சில இலக்கிய அமைப்புகள் தருகின்ற விருதுகளுக்காய் தொடர்ந்து சிறந்த படைப்புகளை அளியுங்கள் கவிஞர்களே..தங்களை முன்னிறுத்தி அடையாளம் கொள்ளுங்கள்.
வாழ்க தமிழ்..வளர்க சிறந்த முகநூல் குழுமங்கள் !
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம் .
(குறிப்பு: சிறந்த முகநூல் குழுமங்களை நீங்களே அடையாளம் காணுங்கள் )

வெள்ளி, ஜூலை 13, 2018

தன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...

செறிவார்ந்த அகண்ட தமிழ் இலக்கியத் தளத்தில் இன்னுமொரு சேர்க்கை. " தன் முனைக் கவிதைகள் " ! தெலுங்கில்" நானிலு " எனும் பெயரில் பரவலாய் வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றுள்ள நாலடிக் கவிதை வடிவம் தமிழுக்கேற்ற சிறு மாற்றங்களுடன் தமிழில் " தன் முனைக் கவிதைகள் " 
எனும் தலைப்புடன் உதயமாகி....அதன் செழுமையான விளைச்சல் தான் " நான் நீ இந்த உலகம் " எனும் நூல்!. நானிலு கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய துவக்கப் புள்ளி. மற்றும் நூலின் அணிந்துரை தவிர மற்றபடி நூல் சார்ந்த குவினரின் திறமை..ஆர்வம் உழைப்பின் முன் என் பங்கு மிகச் சிறிதெனினும் இன்று எங்கெங்கும் பரவலாய் பேசப்படும் இந் நூலில் நானும் என்பதில் பெரு மகிழ்ச்சியும் நெஞ்சு நிறை நன்றியும்.! நூல் அமோக வெற்றி பெற இனிய வாழ்த்துகள்..

என் அணிந்துரை -----------------.
ஓவியா பதிப்பகம் வெளியீட்டில்,
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுத்த
31 கவிஞர்களின் 465 கவிதைகள் இடம்பெற்ற
தமிழின் முதல் (நானிலு) தன்முனைக் கவிதைத் தொகுப்பான
"நான்..நீ..இந்த உலகம்" தொகுப்பில்...
ஹைதராபாத்தில் வசிக்கும்
மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான
சாந்தாதத் அவர்களின் அணிந்துரையில்...
‘நானிலு’ குறித்த இந்த என் ‘மகாகவி’ கட்டுரை வாசித்த ஏராளமான வாசகர்களை.. குறிப்பாகக் கவிஞர்களை இவ் வடிவம் வெகுவாய் ஈர்க்க.. விளைவாய் அவர்களுக்குள் ஒரு உத்வேகம்..
தமிழில் சுயமாய் எழுத வேண்டுமென.. நம் பெரும் கவிஞர் மதிப்பிற்குரிய கல்யாணசுந்தரம் அவர்கள் உட்பட! உடன் அவர் சில நானிலு வகைக் கவிதைகள் முகநூலில் எழுதி என் கருத்து கேட்டார். தொடர்ந்து மளமளவெனக் கவிதைகள்.. குவிய.. முகநூல் அவற்றுக்கான அரங்கேற்ற மேடையானது.
இந்த ஆரவார வரவேற்பு கண்டு ஏற்கெனவே வெகுவாய் ஈர்க்கப் பட்டிருந்த கல்யாணசுந்தரம் அவர்கள் நானிலு உருவாக்கத்தை யொட்டி தமிழில் தன்முனைக் கவிதைகள் எனும் பெயரில் ஒரு புது வடிவம் கொண்டு வர ஆர்வம் கொண்டு... இம் முனைப்பும் வெற்றிச் சிகரம் தொட்டது முகநூல் ஆர்வலர்கள் அறிந்த செய்தி! அடுத்து தன்முனைக் கவிதைகள் எனும் அடையாளத்துடன் அவர் அஸ்திவாரம் அமைத்த புதுக் கூட்டில் வேடந்தாங்கல் போல் ஏராளமான பறவைகள். வந்து குவிந்தன.. என்ன.. வேடந்தாங்கல் பறவைகள் அப் பருவம் முடிந்ததும் மாயமாகி விடும். இந்தத் தன் முனைக் கவிதைக் கூட்டில் நாளுக்கு நாள் கவிதை வரவு அதிகரித்தபடியே... தம் இருப்பை நிலைப்படுத்தியபடியே..!
தமிழுக்கு புது வரவான இத் தளத்தின் கோலாகலம் விளைவித்த அதீத ஊக்கத்தின் முதல் ஆக்கபூர்வ விதை.. ஒரு தொகுப்பாகவே கொண்டு வந்தால் என்ன.. எனும் யோசனை. திரு. கல்யாண சுந்தரம் மற்றும் நண்பர்கள் சிந்தையில் விதைக்கப்பட... சிறந்த இலக்கியவாதியும், படைப்பாளருமான திரு. வதிலைபிரபா அவர்கள் பதிப்புலகில் தனி முத்திரை பதித்துள்ள தன் ஓவியா பதிப்பகம் மூலம் அத் தொகுப்பைக் கொண்டு வர முனைப்பு காட்டிய பேரார்வம்... திரு. கல்யாணசுந்தரம்... என் அன்புத் தோழி சாரதா கண்ணன், தோழர் அனுராஜ் ஆகியோர் உழைப்பு உற்சாகம் உந்து சக்தியின் அறுவடையின் விளைச்சல் தான் அவ் விதையின் கனி இதோ இன்று நம் கரங்களில்.. “நான் நீ.. இந்த உலகம்.”
31 கவிஞர்கள்... பல நூறு கவிதைகள்...! படிக்கப் படிக்க நிஜமாகவே நானும் நீங்களும் நாமுமாய் உலகம் பல் விடப் பரிமாணங்களில் என்னுள்ளும்.. கண் முன்னும்... விரிவதை நான் உணர்ந்தேன்ஞ் வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்..! கடுகில் காரம் என்பது போல் இச் சிறு வடிவத்துள் பெரும் தாக்கங்கள் அதிர்வலைகளாய் படர்ந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புது உணர்வை, உலகைச் சுட்டுகின்றன.
‘நானிலு’ கவிதை வடிவம் தமிழில் இவ்வளவு வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றது மட்டுமன்றி அதன் தாக்கமாய் தமிழிலும் ‘தன்முனைக் கவிதைகள்’ எனும் தளம் ஜனனம் கண்டது உவகைக்குரிய விஷயம் தானே..! ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்’ என்ற மகாகவியின் பிற மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டாய் தெலுங்கில் முத்திரை பதித்த ஒரு பரிமாணத்தை நாம் விரும்பி ஏற்று, கௌரவம் கொடுத்து நம் மொழியிலும் வரவு வைப்போம் சில மாற்றங் களுடன் என்பது ஒரு அற்புத வெளிப்பாடு...! அதற்கான முயற்சியின் முதல் படியான “ நான் நீ இந்த உலகம்..” எனும் இந் நூல்.."
- சாந்தாதத், ஹைதராபாத்
நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீடு...01.07.2018ச்சார அமைப்பின் நிறுவனர் கோபாலன், சோழன் திருமாவளவன், தினமணி கவிஞர் திருமலை சோமு, பத்திரிகையாளர் கவிஞர் கணேஷ்குமார் கம்பன் கவிக்கூடம் செல்வராணி கனகரத்தினம், தன்முனைக் கவிதைத்தொகுப்பில் பங்குபெற்ற கவிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . நிகழ்வை கவிஞர் பாரதி பத்மாவதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
நடைபெற்ற நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் இனிய உதயம் இணையாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் நூலினை வெளியிட கவிஞர் குமரன் அம்பிகா பெற்றுக்கொண்டார். உடன் கவிக்கோ துரைவசந்தராசன் , கவிஞர் வதிலை பிரபா, தொகுப்பாசிரியர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிமாமணி வெற்றிப் பேரொளி, வாசாப்பேட்டை கம்பன்கழக பொருளாளர் திரு.ந.முருகன், கவிஞர் மயிலாடுதுறை இளைய பாரதி. விழாவில் கவிஞர் வசீகரன்,கவிஞர் உதய கண்ணன், வடசென்னைத் தமிழ்ச் சங்க தலைவர் எ.த.இளங்கோ ,தென்னிந்த சமூக கலா
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

புதன், ஜூன் 13, 2018

வெளிச்ச மொழியின் வாசிப்பு.....நூல் வெளியீடு...

20.05.2012 அன்று சங்கத் தமிழ்க் கவிதைப்பூங்கா , ஐந்தாம் தமிழ்ச்சங்கம் முதல் ஆண்டுவிழாவில் மதுரை திருமங்கலத்தில் ....
" வெளிச்ச மொழியின் வாசிப்பு " புதுக்கவிதை நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் இயக்குனர் முனைவர் பசும்பொன் அவர்கள்.  முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார் புரவலர் குமரன் அம்பிகா அவர்கள். அருகில் சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவின் நிறுவனர் ந.பாண்டியராஜன், வீரபாண்டித் தென்னவன், அ.முத்துசாமி ஆகியோர்.செவ்வாய், மே 08, 2018

முகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்... - மு.முருகேஷ்முகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்...
- மு.முருகேஷ்
************************************************************************
மகாகவி பாரதியின் அறிமுகக் கட்டுரை வழியே தமிழில் அறிமுகமான ஹைக்கூ கவிதைகள், ஒரு நூற்றாண்டினை நிறைவு செய்திருக்கும்
இனிய வேளைவிது.
தமிழ் ஹைக்கூவில் சமூகம் மற்றும் இயற்கை சார்ந்த புதுப்புது பாடுபொருள்களோடு
இன்னும் கூடுதல் அழகோடும் செறிவோடும் கவித்துவத்தோடும் படைக்க வேண்டிய
பொறுப்பு சமகால ஹைக்கூ கவிஞர்கள் முன்நிற்கும் சவால்.
அதே நேரத்தில் வளரும் புதிய கவிஞர்களை அடையாளங்கண்டு, அவர்களது ஹைக்கூ
கவிதை முயற்சிகளை வரவேற்பதும், தமிழ் ஹைக்கூவின் தொடர் வரலாற்றுத் தடத்தினைச்
சுட்டிக்காட்ட வேண்டியதும் நம் கடமையாகும்.
தன் போக்கில் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் எழுதிக் கொண்டிருப்பதோடு, எழுதும்
இளைய கவிஞர்களையும் அரவணைத்துச் செல்லும் தாய்மனம் கொண்டவர் ஹைக்கூ
கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள். இதனை செய்யாறு நகரில் அவர் முன்நின்று
நடத்திய ‘ஹைக்கூ கவிதைத் திருவிழா’(2003)வில் பங்கேற்ற ஹைக்கூ கவிஞர்கள் அனைவரும்
நன்கு அறிவர்.
தமிழ் ஹைக்கூ இன்றைக்கு உலகு தழுவிய அளவில் ஒரு கவனிப்பையும் வரவேற்பையும்
பெற்றிருப்பதற்கு கவிஞர் கா.ந.க. அவர்களின் முன்னெடுப்பும் மிக முக்கிய காரணம் என்பது
பலரும் அறிந்திராத உண்மை.
முகநூல் வழியாக தமிழ் ஹைக்கூ வளர்ச்சிக்கு பலரும் தங்களது பங்களிப்புகளை
அளித்துவரும் நிலையில், கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தொடங்கியிருக்கும் ‘உலகத்
தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்’ எனும் முகநூல் குழுமம் மிகுந்த வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரிய நல்முயற்சியாகும். பல்வேறு கனவுகளோடு தொடங்கியிருக்கும் இந்த முகநூல் குழுமத்தின்
முதல் செயல்பாடாக ‘மானுடமும் இயற்கையும்’ எனும் தலைப்பில் ஹைக்கூ எழுதுமாறு
தமிழ் ஹைக்கூ கவிஞர்களை அழைத்துள்ளார். இந்த கவியழைப்பனை உலகு தழுவிய ஹைக்கூ
கவிஞர்கள் ஏற்று, உற்சாகத்தோடு தங்கள் கவிதைகளை அனுப்பியிருக்கிறார்கள்.
இவற்றிலிருந்து சிறந்த ஹைக்கூவை தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பை என் வசம் கவிஞர் கா.ந.க. ஒப்படைத்தார். இதுவரை பலமுறை கவிதைகளை நான் திரும்பத் திரும்ப வாசித்துவிட்டேன். எனது வாசிப்பின் ரசனையில் கீழ்க்கண்ட கவிதைகளைத் தேர்வு செய்துள்ளேன்.
நிறைய கவிதைகள் என்னை ஈர்த்துள்ளன. சில கவிதைகள் இன்னும் படம் பார்த்து கதை சொல்லும்
நிலையிலும், தலைப்பை அப்படியே கவிதைக்குள் சொல்லும் முயற்சியிலுமே முடங்கி நிற்கின்றன.
தமிழ் ஹைக்கூ கவிஞர்களே... முயன்றால் முடியும் உங்களால். இன்னும் உங்கள் பார்வையை
விசாலப்படுத்துங்கள். வேறுவேறு காட்சிப்புலத்தோடு கவிதைகளைத் தாருங்கள். நீங்கள் எழுதப்போகும் ஹைக்கூவை வாசித்துவிட்டுத்தான், நாளைய தமிழ் ஹைக்கூவை வழிநடத்தப்போகும் புதிய கவிஞன்
உதயமாகப் போகின்றான் என்கிற உத்வேகத்தோடு எழுதுங்கள்.
’உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்’ நடத்திட போட்டி எண்:1-இல் முதல் மூன்று நிலைகளைப் பிடித்த கவிதைகள்:
_______________________________________________________________
1.
வடியும் பால்
பசி தீர்க்கவில்லை
வீட்டில் குழந்தை. - மதுரா
2.
பாலூறும் இரப்பர் மரம்
பாதியிலே இறக்கி வைக்கிறாள்
பால் குடித்த குழந்தையை. - ரசி குணா
3.
ரப்பர் மரம்
அழகாக தொங்குகிறது
மிளகுக் கொடி. - பிரிதிவிராஜ் லோஜி
சிறப்புச் சான்று பெறும் 7 கவிதைகள் :
_______________________________________
0
ரப்பர் மரம் பால் தருகிறது
பசியாறவில்லை தாய்
பாலூறவில்லை குழந்தைக்கு. - சோ.மீனாட்சிசுந்தரம்
0
பாலூறும் ரப்பர் மரம்
பிசினாய் கொட்டியது
உழைப்பாளர்களின் வியர்வை. - ச.கோபிநாத்
0
ரப்பர் மரக்காடுகள்
முழுவதும் நிறைத்தபடி
காய்ந்த இலைகள். - பாண்டியராஜ்
0
பால் சேகரிக்கும் பெண்
ரப்பர் மரத்தடியில்
பாலுக்கு அழும் குழந்தை. - இளவல் ஹரிஹரன்
0
ரப்பர் தோட்டம்
வடிந்து கொண்டிருக்கிறது
தொழிலாளியின் கண்ணீர். - சாரதா க.சந்தோஷ்
0
இரத்தம்தான்
இவளிடமும் இரப்பர் மரத்திலும்...
பாலாக..! - செண்பக ஜெகதீசன்
0
பசியில் குழந்தை
ஞாபகத்தில் கனக்கும் மடி
பால் பீய்ச்சும் ரப்பர் மரம். - கா.அமீர்ஜான்

இப்போட்டியில் பங்கேற்ற - பாராட்டும் பரிசும் பெறுகிற கவிஞர்களுக்கு
என் தோழமை கனிந்த
வாழ்த்துகள். இப்பணியை மிகுந்த ஈட்பாட்டோடு
செய்யும் எங்கள் அன்புக் கவிஞர்
கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு
எனது மனம் நெகிழ்ந்த மகிழ்வையும் நன்றியையும் பகிர்கின்றேன்.
08.05.2018
---------------------------------------------------------------------------------------------- மு.முருகேஷ்
வந்தவாசி - 604408
மின்னஞ்சல்; haiku.mumu@gmail.com

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

தமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3

இயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3
*****************************************
தமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுதப்படும் வரிகள் நெஞ்சுக்கு நிம்மதி தருவன. ஏகாந்த சூழலில் நம்மை அழைத்துச் சென்று மனதை அமைதியில் ஆழ்த்தும் சக்தி பெற்றவை. ஆம்....மனிதனும் இயற்கையும் தோழர்கள். மறுக்க முடியுமா ?
இன்னும் சில ஐக்கூ கவிதைகளைக் காண்போம்...
1. தலைகீழாய்த் தொங்கும்
கிளிகளின் மூக்கு
முந்திரிக் காடு
.......அனலேந்தி ( அருவி ஹைக்கூ வாசல் )
2. கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது ?
பேசாமல் கூடையாக்கிவிட்டேன்
.......ம.ரமேஷ் (அருவி ஹைக்கூ வாசல் )
3. யாருமற்ற மரத்தடி
கயிற்றுக் கட்டிலில்
படுத்துறங்கும் நிழல்
.......காவனூர் ந.சீனிவாசன் (அருவி ஹைக்கூ வாசல் )
4. மெல்லப்போ தென்றலே
வழியில் கருவேல மரங்கள்
குத்தும் முட்கள்
.......வீ.தங்கராஜ், காஞ்சிபுரம் (அருவி ஹைக்கூ வாசல் )
5. எழுந்து போன
தடம் தெரியவில்லை
கிணற்றில் விழுந்த நிலா
........அ . முத்து விஜயன்
கல்பாக்கம் (அருவி ஹைக்கூ வாசல் )
6. அசைந்தாடுகிறது
பறவை பறந்த பின்பும்
நாணல்
........த.வே.விக்ரமாதித்தன், செய்யாறு
(அருவி ஹைக்கூ வாசல் )
7. வேர்களின் உருவம்
கிளைகளில்
இலையுதிர் காலம்
.......சொ.சரவணபவன், திமிரி
(அருவி ஹைக்கூ வாசல் )
8. நீரின் அழகில்
முகம் பார்க்கும் கொக்கு
ஓடிக்கொண்டிருக்கும் நதி
........பாரதி வசந்தன், புதுச்சேரி (அருவி ஹைக்கூ வாசல் )
9. கடற்கரை ஓரம்
காதல் இசை
ஆடும் படகு
........கா.அமீர்ஜான் ,திருநின்றவூர்
(அருவி ஹைக்கூ வாசல் )
10. நெஞ்சம் மகிழும்
உதய கீதங்களுடன்
விடியல் பறவைகள்
...........கா.ந.கல்யாணசுந்தரம்
(அருவி ஹைக்கூ வாசல் )
இன்னும் தொடரும் ...இயற்கை குறித்த புரிதல் ......

இயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் ! தொடர் 2

இயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் !
**********************************************************************
இயற்கை மானுடம் ஆராதிக்கின்ற இறைவனின் படைப்பு. வாழ்வியல் தத்துவங்களை மனிதனுக்கு இயற்கை போதிக்கும் ஆற்றல் கொண்டவை . இயற்கையை மனிதன் இறைத்தன்மையுடன் ஒப்பிட்டு வழிபாடு செய்தவிதங்கள் அற்புதமானவை.
இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் மனிதனின் 
ஆரோக்கியமான வழிநடத்துதலில் முக்கிய பங்கு வகிக்கிறது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
" வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்....
வாடினேன் ! "
........அருள்பிரகாச இராமலிங்க வள்ளலாரின் மனிதநேயமிக்க வரிகள். இயற்கையின் வளங்களை ஆராதித்த முதல் வள்ளல். மிகச் சிறந்த ஐக்கூவாக இதை ஏற்றுக் கொள்ளலாம்.
பெரும்பாலும் ஜப்பானிய ஐக்கூ கவிதைகள் இயற்கையின் வளங்களை அதில் உறைகின்ற சூட்சுமங்களை எடுத்துச் சொல்லும் ஜென் புரிதலாகவே விளங்கின. ஒரு நூற்றாண்டை கடந்த தமிழ் ஐக்கூ கவிதைகளில் பல தமிழகம் சார்ந்த இயற்கையின் புரிதலோடு ஒட்டி எழுதப்பட்டுள்ளன என்பது நிதர்சன உண்மை.
தற்கால ஐக்கூ கவிகளின் புரிதல் இயற்கை ஒட்டி இருத்தல் அவசியம். காலச் சூழலின் காரணமாக பெரும்பாலும் அரசியல், சமூகம் சார்ந்த அவலங்களின் வெளிப்பாடாகவே ஐக்கூ கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன....இதுதான் உண்மையும் கூட.
எழுதும் பத்து ஐக்கூ கவிதைகளில் ஒன்றையாவது இயற்கையின் புரிதலோடு எழுதுங்கள். அவை காலம் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
இனி சில ஹைக்கூ கவிதைகளைக் காண்போம்....
1. உள்ளே உறங்கும் தேனீக்கள்
பனியில் முழுக்க நனைந்து
கிளையில் தொங்கும் தேன்கூடு
.......ந.க.துறைவன் (ஹைக்கூ பாவை )
2. கூடு திரும்பும்
பறவைக் கூட்டம்
வெள்ளை வானவில்
......அருணாச்சல சிவா (பொன்விசிறி )
3. ஓய்ந்த மழையை
எதிரொலித்தன
மரத்தின் இலைகள்
.......கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி (பெயர் தெரியாப் பூ )
4. பூக்களுக்குக் குளிர்
போர்வையாய் விரிகிறது
வண்ணத்துப் பூச்சி
.......புல்வெளி செ.காமராசன் (விதைக்குள் விருட்சம் )
5. விண்மீன்களுக்காக காத்திருந்தபோது
மடியில் வந்து விழுந்தது
ஒரு பூ
.......கழனியூரன் (கரந்தடி )
6. வீசுகிறது
வேலியைத் தாண்டி
வெண்மல்லி வாசம்
........பொன்குமார் ( பிற )
7. மழை நனைத்த பூமி
உறவு விரிந்தது
எங்கும் மண் வாசம்
........ஆரிசன் (குளத்தில் மிதக்கும் தீபங்கள் )
8. தாமரைப் பூவில் நின்று
வண்டை விரட்டித் தவளை சொன்னது
இசைமிக நல்ல தென்று
...........ஈரோடு தமிழன்பன் (சென்னிமலை கிளியோபாத்ராக்கள்) (லிமரைக்கூ )
9. காற்றோடு கலக்கிறது
மகரந்த மணம்
வேலியோரப் பூக்கள்
............ச.கோபிநாத் (குழந்தைகளைத் தேடும் கடவுள் )
10. உதிரும் கொன்றை மலர்கள்
கருப்புக் குடையின் மேல்
கார் காலத் துவக்கம்
.......... கா.ந.கல்யாணசுந்தரம் (மனிதநேயத் துளிகள் )
......தொடரும் ....இயற்கை குறித்த புரிதல் ......

திங்கள், ஏப்ரல் 16, 2018

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவேண்டும் ....தமிழ் ஐக்கூ கவிதைகள் !
********************************************************************
தமிழ் ஐக்கூ கவிதைகள் ஒரு நூற்றாண்டைக் கடந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
கவிதைகளின் பரிணாம வளர்ச்சியில் துளிப்பாக்கள் (ஐக்கூ கவிதைகள் ) தமிழ் கவிதை உலகில் இனிய தடம் பதித்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
ஒரு கவிதை சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருமேயானால் அது ஜீவனுள்ள வரிகளையும் சொற்களையும் தன்னகத்தே கொண்டு ஒரு இயக்கத்தையே நடத்துகிறது என்பது உண்மை.
திரையுலகில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோரின் பாடல்வரிகளில் உயிரோட்டமான சொற்களும் வரிகளுமே காலம் கடந்து நிற்கும் தன்மைக்கு அடிப்படை ஆகும்.
எளிய தமிழ் சொற்களால் கோடானுகோடி மக்களின் இதயத்தை கொள்ளையடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கான விதைகள் தூவப்பட்டன.
இலக்கிய உலகில் பக்தி இலக்கியம் தொட்டு, சங்க இலக்கியம் மற்றும் சங்கம் மருவிய காலம் வரை அலைகடலாய் தமிழ் இலக்கிய வரலாறு பார்போற்ற ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
இந்த வரிசையில் காலம் கடந்து நிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் ஐக்கூ (துளிப்பாக்கள் ) கவிதைகள் நூற்றுக் கணக்கான கவிஞர்களின் விரல்களில் பிறப்பெடுத்த பெருமைக்கு உரியதாகும்.
இந்த வரிசையில் தடம்பதித்த/தடம் பதித்து வரும் ஐக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் தினம் தொடராக எனது பார்வையில் வெளியிட விரும்புகிறேன்.
இந்த ஐக்கூ கவிதைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. விளக்கம் கொடுத்து புரிய வைக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. பன்முக நோக்கில் பொருள் கொள்ளும் ஆற்றல் மிக்க ஐக்கூ கவிஞர்கள் மத்தியில் நான் விளக்கம் கொடுக்க
விரும்பவில்லை... !
இந்த ஐக்கூ கவிதைகளை (துளிப்பாக்கள்) உள்வாங்கி கவிதையின்பம் பெற அன்போடு அழைக்கிறேன்...!
தற்போது ஐக்கூ எழுதும் இளைய தலைமுறைக்கும் இந்த ஐக்கூ கவிதைகள் எடுத்துக் காட்டாய் விளங்கும் என நம்புகிறேன்.
காலத்தை வெல்லும் தமிழ் ஐக்கூ கவிதைகள்....தொடர் ..1
*****************************************************
1. துணிகளில் தெரிவதில்லை
நெசவாளனின்
கருத்த விரல்கள்
......ஏகாதேசி
2. பசித்தழுகிறது குழந்தை
ரப்பர் மரத்தில் பால் வெட்டியபடி
வற்றிய மார்போடு அம்மா
.....ஏகாதேசி
3. சருகு பொறுக்குவதில்
சரியாகிறது நேரம்
குளிர் காய்வது எப்போது ?
.....பல்லவி குமார்
4. தீக்குச்சி இறந்தது
தீபத்தில்
அசைந்தாடும் உயிர்
......பழனி இளங்கம்பன்
5. அட...குடங்களுக்குக் கூட
சொட்டு மருந்து கொடுக்கிறதே...
நகரிய தெருக் குழாய்
......முகவை முனீஸ்
6. இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றி செல்கின்றன
நகரத்திற்கு மின்கம்பிகள்
......நாவம்மா முருகன்
7. பிச்சையெடுத்தான் சிறுவன்
பசி தீர்ந்தது
குடிகார அப்பாவுக்கு
.....நாவம்மா முருகன்
8. சங்கு ஊதியும்
எழுந்திருக்கவில்லை
ஆலைத் தொழிலாளி
.....சீனு தமிழ்மணி
9. இருட்டில் அமர்ந்து
மௌனத்தை தின்னும்
அணைந்த மெழுகுவர்த்தி
.....மு.முருகேஷ்
10. ஏற்றத் தாழ்விலும்
இணைந்த இயக்கம்
விரல்கள்
......கா.ந.கல்யாணசுந்தரம்
....................நாளை தொடரும்.............
(நன்றி: நீங்கள் கேட்ட ஐக்கூ தொகுப்பு நூல் - ஆண்டு 2000)

ஞாயிறு, ஏப்ரல் 15, 2018

உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4


உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 4
************************************************************************

26/02/2018 அன்று திருகோணமலை பத்ரகாளியம்மன் ஆலயம் சென்று வழிபட்டோம். அடடா...என்னவொரு நேர்த்தியான சிற்பங்கள் கொண்ட கோயில். கோயிலின் மேற்புற கூரையில் அழகிய சிற்பங்கள் வடிவமைப்பு இருந்தது. இதுவரை இம்மாதிரியான கலை அம்சம் கொண்ட கோயிலைப் பார்த்ததில்லை. இந்தத் திருத்தல வரலாற்றை சிற்பங்களாக வடித்திருந்தனர்.

இன்றெல்லாம் கண்டாலும் நேரம் போதாது. காணக் கண்கோடி வேண்டும்.
பத்ரகாளி அம்மன் அச்சு அசலாக அருள்மிகு அங்காளபரமேஸ்வரி போன்ற தோற்றமுடன் வீற்றிருந்த காட்சி அற்புதம்.

இனி வரலாற்றைக் காண்போம்:
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில்பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்துநிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில்தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணிகூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாலயத்தில் கடந்த 150 ஆண்டு காலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம்புரட்டாதி மாதம் விஜயதசமி முதல் ஐப்பசி மாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

விசயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.


திருகோணமலை கவிஞர் அருணாசலம் சிவானந்தம் அவர்கள் எங்களுடன் இத்திருத்தலத்தில் உடனிருந்து அழைத்துச் சென்றார்.. திருகோணமலையில் வசிக்கும் கவிதாயினிகள் சிவரமணி கவிச்சுடர் மற்றும் பிரிதிவிராஜ் லோஜி அவர்கள் நாயன்மார்கள் நற்றமிழ் சங்கம் நிறுவனர் ஸ்ரீகாந்த் ராஜா மற்றும் ஜாகிர் அவர்களுடன் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகக் கவிஞர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்ததை மறக்க முடியாது.  ஈழத்துக் கவிஞர்கள் பலருடன் உரையாடியது மகிழ்வை தந்தது.

கூட்டம் முடிந்து கவிதாயினி பிரிதிவிராஜ் லோஜி அவர்கள் தங்கள் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்று இன்முகத்துடன் வரவேற்று தேனீர் கொடுத்தது இன்னும் கண்முன்னே காட்சி அளிக்கிறது. லோஜி அவர்களுடைய வயதான தாயார் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கவிஞர் அருணாசலம் சிவானந்தம் அவர்கள் இல்லம் சென்றோம்.
அனைவரையும் வரவேற்று கவிஞர் சிவா அவரது மனைவியும் எங்களுக்கு இன்முகத்துடன்  அறுசுவை உணவளித்தது மறக்க முடியாது. நாங்கள் பயணப்பட்டு அன்றுதான் முழுமையான உணவருந்தி மகிழ்ந்தோம்.

இரவு விடுதியில் தங்கி மறுநாள் காலை வெந்நீர் ஊற்றில் குளித்து மகிழ்ந்தோம். மார்பல் பீச் -  பளிங்கு கடற்கரை சுற்றிப்பார்த்துவிட்டு  யாழ்பாணம் நோக்கி பயணமானோம்.

இனிய நேரங்கள்....

தொடரும்...அடுத்து....யாழ்பாணம் போகும் வழியில் ஓமந்தை கண்ணகி கோயில் வழிபாடு...

.........கா.ந.கல்யாணசுந்தரம்.
சனி, ஏப்ரல் 14, 2018

உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 3


உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ...தொடர் 3
 ********************************************************மட்டக்களப்பு – ஓட்டமாவடி இலக்கிய விழா முடித்து எங்களது பயணம் 26/02/2018 அன்று இலங்கையின் வடக்கு மாகாண தலைநகர்  திரிகோணமலை நோக்கி இனிதாய் நகர்ந்தது. திரிகோணமலை செல்லும் வழியெங்கும் அழகிய இலங்கை கடற்கரை இருபுறமும் காட்சி அளித்தது. இயற்கை எழில் சூழ்ந்த தமிழர் வாழும் பகுதிகள் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

மதிய நேரம் திரிகோணமலை அடைந்து அங்கே விடுதியில் சற்று ஓய்வெடுத்து திரிகோணேஸ்வரர் திருக்கோயிலை கண்டு ரசித்தோம்.
இராவணனால் தரிசிக்கப்பட்ட புராதான சிவலிங்கம் தரிசனம் கண்டோம். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கும் தற்போதைய அரசால் செய்யப்பட்டு இருந்தது.

விக்கிப்பீடியா வரலாறு :
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்இலங்கையின்கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில்உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில்தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[2]

இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது.

குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம் திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.
இத்தகு சிறப்புமிகு இடத்தை மூன்று மணிநேரம் பார்வையிட்டோம். இம்மலைக்கு செல்லும் வழியில் மான்களும் மயில்களும் ஒருங்கே இருப்பதைக் காண முடிந்தது. இயற்கை சூழல், மலைவளம், கடற்கரை பொலிவு அனைத்தும் சேர்ந்த இந்த மலைப்பகுதி கோயில் இராவணனால் வணக்கப்பட்ட லிங்கம் உள்ளது என்பதற்கு சான்றாக மலையின் அடிப்பகுதியில் இராவணனின் கோட்டைக் கொத்தளம் இன்றளவும் சிதலமடைந்து உள்ளது என்றார்கள். அதற்கு நாங்கள் சென்ற போது படகுப் போக்குவரத்து இல்லை.  எழில் சூழ்ந்த இயற்கை வளங்களோடு வாழ்ந்த இராவணன் வரலாற்றை கோயில் உள்புற மண்டபத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது மிகச் சிறப்பு.

பார்க்கவேண்டிய பரவசமூட்டும் இடம்....

...............கா.ந.கல்யாணசுந்தரம்

தொடரும்....அடுத்த பதிவு வியப்பில் ஆழ்த்தும் திரிகோணமலை பத்ரகாளியம்மன் கோயில் சிற்பங்கள்