கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஜனவரி 29, 2012

நிலமகள் நோதல் இன்றி....
வேலை வெட்டி ஏதுமில்லையென
நாளும் வெட்டியாய் ஊர் சுற்றும் வாலிபர்கள்
தோளினை சுமக்கும் உடல்கள்
இருந்தென்ன இலாபம்?
விவசாயம் தழைக்கின்ற விளைநிலங்கள்
ஏராளம் நம் நாட்டில்!
படித்துவிட்டு வேலையின்றி
பகட்டாய் வாழ்ந்ததெல்லாம்
வீணே என்றறியும் முன்
வீறுகொண்டு எழுவீர் இளைய தலைமுறையே...
பாட்டன் கொடுத்த வயல்காட்டில்
பொன்விளையும் பூமி இதுவென்று போற்றி
எர் பிடித்து உழுதிடுவீர்!
தைமகள் உங்கள் வீடு தேடி
தானியக் களஞ்சியத்தை கொட்டிடுவாள்
இது உறுதி நம்பிடுவீர் ! - இனி
பயிரிடா விளைநிலங்கள்
இருத்தலாகாது என இயம்பிடுங்கள்!
நிலமகள் நோதலின்றி வாழ்ந்திடுங்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்,
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்

வெள்ளி, ஜனவரி 27, 2012

இந்தக் காதல் எதுவரை?
புரிதலின் பயணிப்பில் நேசிப்பு பூத்துக் குலுங்கும்
நினைவுகளில் தேன்சொரிந்து இதயம் குளிரும்
வாசமிகு வாழ்வுக்கான வசந்த வாயில்கள்
வழியெங்கும் வரவேற்கும் - ஆம்
இதுதான் காதலின் மேன்மையென உள்ளங்கள்
ஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்!
மார்கழிப் பனி பாவையர்க்கு உன்னத நோன்பானது
சூடிக்கொடுத்தவளின் திருவாயால்!
பயணிப்பின் எல்லை பயணிக்கும் திசையில்
ஒரு இடமறிந்த உண்மை!
நேசிப்பின் நடை இருமனங்களின்
எல்லையற்ற தூரத்தின் விளிம்புகள்!
வயதின் மூப்பிலும் வியப்பின்றி விருந்துவைக்கும்
இல்லத்துணையின் ஈடற்ற அன்பே காதல்!- இந்தக்
காதல் எது வரை? ....எனக்கேளின்....
துளிர் விடும் மனம் முதல் துவளும் நாள் வரை
துணைவருமே காதல் மாசற்ற முகத்துடன்...!
எனச் சொல்வோம் நேசமுடன் எந்நாளும் !


..........கா.ந.கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை)

தூரத்து உறவுகள் எப்போதும் ......

உறவுகளில் உன்னதமென்று
மாதா, பிதா. குரு தெய்வமென முன்னோர்கள்
அந்நாளில் கண்டறிந்த உண்மை!
அகல உழுவதிலும் ஆழ உழும் விவசாயி
கொண்டிருக்கும் உறவோ விளை நிலமீது!
நெய்யும் தொழிலுக்கு நிகரில்லையென
நெசவாளியின் உறவோ நெய்யும் தறி மீது!
உண்ண உணவு உடுக்க உடை
இவ்விரண்டும் கிடைத்தபின்
இருக்கும் இடம்தான் இன்றியமையாதது!
இடர் அகற்றி இனிதே தங்க
வீடென்பது விதிவிலக்கல்ல வாழ்வுக்கு!
உறவுகளின் மேன்மை சுற்றத்தாரோடு
முடிவதில்லை மானுட வாழ்வில்!
கற்றறியா சிற்பி கல்லுடன்
உளிகொண்டு உறவாடலில்
உன்னத சிலை வடிக்கும்
அற்புதம் காண்கின்றோம்!
உறவுகள் அண்மையில் இருப்பினும்
சேய்மையில் இருப்பினும்
மேன்மை காண்பதில்
இருக்கிறது மனிதநேயம்!
உவர்ந்து கசந்த போதிலும்
தூரத்து உறவுகள் எப்போதும்
இனிப்பதுண்டு பலாச்சுளையாய்......
பிரிவின் நிழலில் !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 18, 2012

இனிய தமிழ் இனி

அகரம் பயின்ற நாள் முதலே
அன்னைத்தமிழில் பேசும் கலை கற்றோம்!
ஆன்மிகம் வளர்த்த இன்தமிழ்
ஆலம் விழுதாய் நிலமதில் நிலைத்தது!
இதழியல் வரலாற்றில் இமயம் தொட்டு
இணைய தளத்திலும் தடம் பதித்தது!
ஈதலும் இசைபட வாழ்தலும் நம் தமிழர்
ஈடிலா கொள்கையாய் சிரமேற்கொண்டனர்!
உலகின் மொழிகளில் செம்மொழியென
உன்னத இடம் கொண்டு உலவுகிறது!
ஊருணி பலருக்கும் உதவுதல் போல்
ஊக்கமுடன் நம் அறிஞரெல்லாம் செயல்படுவர்!
எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போமென
ஏங்கும் இளைஞர் அயராதுழைப்பர்!
ஏற்றமிகு சொல்வனத்தில் புவியெங்கும்
ஐயமின்றி தேன்பொழியும் மணமலறாய்
ஐயன் வள்ளுவன் திருவடி குறள் சிறக்க
ஒப்பிலா மொழியிதுவென உலகு மொழிகளை
ஒருங்கிணைத்து எபோதும்
ஓங்கு புகழுடன் இனியத் தமிழினி
ஔவை முதல் இன்றைய கவிகள் வரை
புகழ் சேர்த்து புவிமீது ஓயாது உலவும் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.

(nanri: eegarai.net)

நடக்க முடியாத நதிகள்
பலவீனத்தின் குறியீட்டில் ஒரு பாலின மனிதம்!
அது பெண்மையெனும் மலரினையொத்த
மெல்லிய பூங்காற்று! - ஆம் நிலமதில்
ஒரு நூல்கண்டு வேலியில்
ஓடி விளையாடும் நூலறுந்த பட்டங்கள்!
பெண்ணியம் பேசுகின்ற பெண்டிரெல்லாம்
புரிதலான வாழ்வுக்கொரு வழி தந்தால்
பாரத மண் மீது பெண்மைக்கொரு பெருமைதான்!
உளவியலை ஆராயாமல் உடலியலில்
ஆவல் கொண்டு மணம்புரியும் மாந்தரெல்லாம்
நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில்
எரிவதைக் காணுகின்றோம்!
விலைகேட்டுப் போனார்கள் திரும்பவில்லை - என்
வினைக்கூர்றின் மணநாளும் அரும்பவில்லையென
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிரைக் காணுகிறோம்!
பாரினில் பெண்கள் சட்டங்கள் ஆளினும்
வரதட்சணை நவீனமாய் உருவெடுத்து ஆள்கிறதே!
கலியுக இளைய தலைமுறையே......
நல்லதோர் முடிவெடுங்கள் இனிமேலும்
நடக்க முடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டாம்!
புதியதோர் உலகு செய்வோம்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

(ஈகரை தமிழ் களஞ்சியம் - இணையதளத்தில் பரிசு பெற்ற கவிதை)

சனி, ஜனவரி 14, 2012

பொங்கலிடு பொங்கலிடு !

தை மகளின் வரவு - நல்ல
தமிழிசையின் உறவு!
புத்தரிசி பொங்கலிட்டு
புத்தாடை அணிந்து
மண்ணின் மணம் கமழ
பாடுகின்ற நாளிது!
உழைப்போரின் உளம் மகிழ
உன்னத இயற்கையின்
இறையருள் நாளிது!
பொங்கலிடு பொங்கலிடு !
புதிய வாழ்வின் பூமணக்கும்
பொங்கலிடு!
மனிதநேயமுடன் பொங்கட்டும்!
தமிழர்தம் வாழ்வு உலகளவில்
தழைக்கட்டும்!
பொங்கலிடு பொங்கலிடு !
மனிதநேயப் பொங்கலிடு!
தமிழ்ப் புத்தாண்டின் வரவு கண்டு
தமிழ் கூறும் நல்லுலகு செழிக்க
பொங்கலிடு!

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஜனவரி 08, 2012

ஆருத்ரா தரிசனம் - ஆடல் காணீர்!

சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!

அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.

சிதம்பரம் கனகசபை : (பொற்சபை)
திருவாலங்காடு இரத்தின சபை :
மதுரை வெள்ளியம்பலம் :

திருநெல்வேலி தாமிர சபை:திருக்குற்றாலம் சித்திர சபை:

எல்லா வளமும் அருளும் பெற்று அனைவரும் வாழ்க வளமுடன் என்று இறைவனை துதிக்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜனவரி 04, 2012

நெஞ்சைத் தொடும் கவிதைகள்.....இசை அறியா உள்ளத்தையும்

செயலிழக்கச் செய்கிறது...

கொலுசுச் சத்தம்!


காய்க்க முடியாது தவிக்கும்

காகிதப் பூக்களாய்...

விலை மகளிர்!


என்றும் பசுமையாய்

நினைவில் நிற்கிறது...

பாடசாலை அனுபவங்கள்!


இனியவை பேசி

இன்னல் அகற்றுதல்...

மனிதநேயத்தின் அஸ்திவாரம்!


புரட்டிப் பார்ப்பதைவிட

என்னை படித்துப்பாருங்கள்...

ஏங்கிடும் புத்தகங்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம்.