கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

காலையும் மாலையும்

கிராமத்து அத்தியாயங்கள்தான்
ஒரு சரித்திரம் படைக்கும் சித்திரங்கள் !
அகன்ற மண் தெருக்களில் வெள்ளநீர்
மழைநாளில் சிறுவர்களின்
காகிதக் கப்பல் விடும்
ஆற்றுப் படுகையானது!
கிராமத்து கிழக்கு வாசல்
அம்மன்கோயில் அனைவர்
வாழ்வோடு பக்திநெறி வளர்த்தது!
ஆலமரத்து நிழல் குடை
பாடித் திரியும் பறவைகள் சரணாலயம் ஆனது!
கிராமத்து திண்ணைகள் ஒரு
பாரம்பரியத்தின் சொத்தானது!
மனிதநேயம் வளர்த்த
மாண்புறு மேடையானது!
காலையும் மாலையும்
கிராமத்தின் எழிலார்ந்த ஓவியமானது!
வயல் பரப்பு ஒற்றையடிப் பாதைகள்
விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்தன!
கிராமங்கள் நகரமாகி நரகமாகும் நிலை
இனிவேண்டாம் !
படித்துப் பட்டம் பெற்றாலும்
ஏர்ப்பின்னதுதான் உலகம் என்றுணர்ந்து
இயற்கையோடு இயந்து வாழ வாருங்கள்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

தருணம் தரும் சுகம்

பாச உணர்வுகள்
நேசமுடன் வெளிப்படுத்தும்
இருவிழி வாசல்கள்
எப்போதும் துடித்திருக்கின்றன !

விளக்கொளி சாம்ராஜ்ஜியத்தில்
மின்மினி பூச்சிகளின்
ஊர்வலங்கள் எப்போதாவது
நடைபெறும் காரிருளுக்காக!

தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

நதிமிகு வெள்ளம் அணைக்குள்
சிறைபட்டாலும் வளர்மிகு
வயலுக்கு ஜீவனாகி
வான்சிறப்பில் வாழ்ந்திடும்!

இதயம் வளர் அன்பெனும்
சிறைக்குள் அகப்படினும்
முறைப்படி மணம்முடிக்கும்
தருணத்தை வரவேற்போம் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

பிரிவோம் சந்திப்போம்.....சந்தித்த வேளையில்
பகிர்ந்துகொண்ட உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய் அமைந்தது
நமது எதிர்பாரா நட்பு!

காலம் காலமாய்
உணவூட்டி கல்வி புகட்டி
நல்வழி காண்பித்த பெற்றோர்களை
மறத்தல் மாண்பாகுமா?

பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், பிப்ரவரி 23, 2012

ஒரு மழை நாளில்....
@வானத்து மழைத்துளிகளின்


வண்ணப் பதிப்பு....


வானவில் !
@புதியவர்களின் வருகைக்காக


மகிழ்ச்சியுடன் வீழ்கிறோம்...


ஒரு இலையுதிர்காலத்து இலை !
@மழைச் சாரல்களில்


ஒரு இனிய ஸ்பரிசம் நிகழ்கிறது....


விளையாடும் சிறுவர்களின் கண்களில்!
@இறை தேட வழியில்லை


சுவர் ஓரம் ஒதுங்குகின்றன...


மழையில் நனைந்த புறாக்கள்!
@ஒரு கோடை நாளின் வானப்பெண்ணின்


மேகக் கூந்தலுக்குள் நளினமாய்....


மின்னல் வகிடுகள் !............கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், பிப்ரவரி 13, 2012

முப்பொழுதும் நினைத்திருப்போம்!

மண்ணுலகை ஓரடியால்
வாமனன் அளந்தாலும்
வள்ளுவனின் ஈரடி குறள்
நம் நினைவில் தடம் பதிக்கிறது

நல்லுலகில் வள்ளுவம் வழி
நடக்கின்ற மாந்தரெல்லாம்
நல்வழிகண்டு நலம்பெருவர்
மதுரை சங்கம் கண்ட மாண்புறு தமிழ்
மண்ணில் சரித்திரம் படைத்ததுவே

செம்மொழியாய் செம்மாந்து
சேய்மையில் வாழ்வோரிடத்தும்
இன்றும் சொல்தொடுத்து
வாழ்வியலில் வளமோடு இலங்கியதே

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றி மூத்த தமிழென்று
முன்னோர்கள் பகர்ந்ததை
மீண்டும் மீண்டும் பறைசாற்றி
பேசுவதில் பயனில்லை

மென்பொருள் அறிவியலில் மேலும்
தடம்பதிக்க விழைகின்றோம்!
மென்பொருள் துறை வல்லுனர்களே
தமிழின் தரம் ஆய்ந்து துறைதோறும்
தமிழ் மென்பொருள் கணணிவளர
அயராதுழைத்திடுங்கள்....!

இந்நூற்றாண்டில் மொழிப் புரட்சி
போர்க்கள தளபதி
எப்போதும் நீங்கள்தான்...!
முத்தமிழின் சிறப்புயர்த்தும்
இத்தரையின் மாந்தர்களை
முப்பொழுதும் நினைத்திருப்போம்!!!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், பிப்ரவரி 06, 2012

அசையாதா அரசியல் தேர்.....

சோழர் கால உத்திரமேரூர்
கல்வெட்டு செப்புகின்ற
மக்களாட்ச்சியின் மகிமை
நாடறிந்த ஒன்று!
இடிப்பார் இலாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் எனும்
குரள்மொழி இன்றும் கோலோச்சுகிறது!
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்தான்
இதுதான் விதியென மக்கள் நினைத்து...
வாழும் அவல நிலை இன்றும் உளது!
ஊழலின் வித்தாக அரசியல் கண்டோர்
உலவும் மாநிலத்தில் மக்களாட்சி,
மாற்றம் எப்போதும் கண்டதில்லை!
அடிபணியும் மக்களும் அதிகார வர்க்கமும்
புற்றீசலாய் புவிமீது எப்போதும்!
பொதுஉடைமைக் கொள்கைதனை
போதிக்கும் காந்தி இனிபிறப்பினும்,
ஆதரிக்கும் அரசியலாரைக் காண்பதறிது!
இளைய சமுதாயமே! இனி பொறுத்தது போதும்
பொங்கி எழுவென்று குரல்கொடுப்பினும்....,
எல்லோரும் ஏங்குகின்றனர்....
நல்லதொரு சமுதாயம் பிறப்பெடுக்க,
மக்களாட்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி பிறந்திட,
அசையாதா அரசியல் தேர் இனியேனும் !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

வேரை மறந்த விழுதுகள்....

ஆல் போல் தழைத்து
அருகுபோல் வேரூன்றி
பல்லாண்டு வாழ்கவென
வாழ்த்தும் பெரியோர்கள்
முத்திரைப் பதித்தனர்! -கனணியுக
வாழ்வுதனில் கால்பத்தித்த இளைஞர்கள்
தேடலே வாழ்க்கையென
பொன்னான மனிதநேய
வாழ்வுதனை தொலைக்கின்றார்!
இயந்திரமாய் இயங்குகிற
உலகமதில் உழன்றுழன்று முடங்கும்
தெளிவற்ற சிந்தனையில்- வயோதிகர்
உளமதனைஅறிந்திடாமல்
அறிவிழப்போர் ஏராளம்!
பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுதனை
செல்லரிக்கா விழுதெனவே வளர்த்து
சுயவளர்ச்சி காணாத பெற்றோர்கள்
வலுவிழந்து வீழுகின்ற
சூழலை நாம் காணுகின்றோம்!
காப்பகங்கள் சாலைதோறும்
தோன்றிற்று இந்நாளில்!
வயது முதிர்ந்தாலும்
அனுபவப் பெட்டகங்கள்
பயனின்றி காப்பகத்தில்
வாழும் நிலை அறிவோம்!
நல்லதொரு குடும்பம்
பல்கலை என்பதனை நிலை நிறுத்த,.
வேரை மறந்த விழுதுகளை இனங்கண்டு
தரையைத் தொடவைப்போம்! - ஆல்
தழைத்து அனுபவத்தை பகிர்ந்திடவே!

.........கா..கல்யாணசுந்தரம்.

( நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்)