கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜூலை 13, 2016

வடுகப்பட்டிமுதல் வால்காவரை ......



என் ஜன்னலின் வழியே
எட்டிப்பார்க்கிறேன்
நேற்றுப் போட்ட கோலம் கூட
ஒரு மௌனத்தின்
சப்தங்களாகிப்போனது !
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
என்று வைகறை மேகங்களில்
தமிழுக்கு நிறமுண்டென
உனது திருத்தி எழுதிய தீர்ப்புகள்
மறக்கவியலா கல்வெட்டுக்கள் !
பெய்யெனப்பெய்யும் மழையே ....
இந்த தண்ணீர் தேசத்து
எல்லா நதிகளிலும்
எங்கள் ஓடங்கள்
சிகரத்தை நோக்கி
கொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடனும்
காவி நிறத்தில் ஒரு காதல் செய்கிறது !
மூன்றாம் உலகப்போருக்கு
வில்லோடு வா நிலவே என்றழைக்க ...
ஒரு போர்க்களமும்
இரண்டு பூக்களுமே மீதமிருந்தன !
எனது பழைய பனைவோளைகளை
புரட்டியதில்
குளத்தில் கல்லெறிந்தவர்களை விட
கவிராஜன் கதைகளைக்
கேட்டவர்களே அதிகம் !
இதனால் சகலமானவர்களுக்கும்
வடுகப்பட்டிமுதல் வால்காவரை
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் .....
கள்ளிக்காட்டு இதிகாசம்
உனது இரத்ததானம் !
கருவாச்சி காவியம்
இன்னொரு தேசியகீதம் !
சிறுகதைகளின் சிற்பியே
உன்னைச் செதுக்கினாலும்
அந்தக் கல்லிலிருந்து
உதிரும் கவிதைப்பூக்கள்
விற்பனைக்கல்ல எங்களின் சுவாசத்திற்கு !
தாய்மண்ணின் தமிழுக்கு
உயிராய் வாழும் இந்நூற்றாண்டு கவியே
உளமார வாழ்த்துகிறேன் பிறந்தநாளில்
பல்லாண்டு வாழ்கவென !
.......கா.ந.கல்யாணசுந்தரம்