கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
உழவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 26, 2016

கண்டபோதெல்லாம் வாடுங்கள் .....!

அறிவியல் வளர்ச்சியெல்லாம்
அகம் மகிழும் புறவாழ்வு !
ஆன்மீக நெறிகளில்
பேரின்பம் பெருக்கெடுக்கும் !

பொருள் குவிக்கும் செயலினிலே
பூவுலக போதை புதைந்திருக்கும் !
ஆளுமை அகங்கார வாழ்வுதனில்
அடிமைகளை வளர்த்திட்டு
ஆர்பரிக்கும் குணமிருக்கும் !

பாரம்பரிய மரபுகளை மீட்டெடுக்கும்
பணிதனில் பண்புகளே மிஞ்சிடும் !
கல்விதனை வணிகமது தத்தெடுத்தால்
மனித மூளைதனை அடகுவைக்கும்
நிகழ்வுகளே அணிவகுக்கும் !

பாரதத்தின் பெரும்பகுதி
பாரம்பரிய விவசாய நிலமாகும் !
விளைநிலங்கள் அழித்தொழித்து
வாழ்விட மையங்கள் ஆக்காதீர் !

உண்ணும் உணவின் பிறப்பிடம்
அறியா தலைமுறைகளே ....
உணருங்கள் மானுட வாழ்வுதனை !
விவசாய தொழில்நுட்பம் ஏட்டளவில்
இருந்தால் போதுமா?
தகவல் தொழில்நுட்பமும்
மென்பொருள் வளர்ச்சியும்
தானியங்களை தந்திடுமா?

திரும்பிப் பார்த்திடுங்கள் கிராமங்களை ...
பணிக்கொடையாய் விளைநிலங்கள்
தரிசாய் மாறி தரிசனம் தருகின்றன !
பொருளாதார மேம்பாட்டு திட்டமென
அரசியலார் சுருட்டுகின்ற செயலதனை
இனி ஒழிப்போம் ...!



மெத்தப் படித்தாலும் வாழ்வின் மேம்பாட்டில்
இத்தரை காணும் விவசாயமே எனக்கண்டு
அணியணியாய் திரள்வீர் ...!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இனி ஜெகத்தினை எரிக்கவேண்டாம் ....
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடுங்கள் .....!

....கா.ந.கல்யாணசுந்தரம்.




திங்கள், பிப்ரவரி 25, 2013

குறையாத பொக்கிஷங்களாய் !










பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து எரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின் 
சாரல் துளிகள் 
மாலை நேரத்து ஏரிக்கரையில் 
நிழலோவியமாய் 
வீடுதிரும்பும் தொழிலாளிகள் 
இன்னும் எத்தனை எத்தனையோ 
நெஞ்சில் இன்னும் 
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின் 
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும் 
குறையாத பொக்கிஷங்களாய் !
......கா.ந.கல்யாணசுந்தரம் 

ஞாயிறு, ஜனவரி 29, 2012

நிலமகள் நோதல் இன்றி....
















வேலை வெட்டி ஏதுமில்லையென
நாளும் வெட்டியாய் ஊர் சுற்றும் வாலிபர்கள்
தோளினை சுமக்கும் உடல்கள்
இருந்தென்ன இலாபம்?
விவசாயம் தழைக்கின்ற விளைநிலங்கள்
ஏராளம் நம் நாட்டில்!
படித்துவிட்டு வேலையின்றி
பகட்டாய் வாழ்ந்ததெல்லாம்
வீணே என்றறியும் முன்
வீறுகொண்டு எழுவீர் இளைய தலைமுறையே...
பாட்டன் கொடுத்த வயல்காட்டில்
பொன்விளையும் பூமி இதுவென்று போற்றி
எர் பிடித்து உழுதிடுவீர்!
தைமகள் உங்கள் வீடு தேடி
தானியக் களஞ்சியத்தை கொட்டிடுவாள்
இது உறுதி நம்பிடுவீர் ! - இனி
பயிரிடா விளைநிலங்கள்
இருத்தலாகாது என இயம்பிடுங்கள்!
நிலமகள் நோதலின்றி வாழ்ந்திடுங்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்,
நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்