கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜூன் 22, 2016

புதுயுகம் கண்டிட உடனிருப்போம்

இயல்பாய் படித்திடு என் மகனே !
******************************************************
மதிப்பெண் அதிகம் பெறவேண்டும்
மாநில விருதுகள் பெறவேண்டும்
ஊடக செய்தியில் வரவேண்டும்
உறவுகள் வியப்பில் விழவேண்டும்
இதையே இலக்காய் வாழாமல்
இயல்பாய் படித்திடு என்மகனே
......(மதிப்பெண்)
நாட்டு நடப்பில் பங்கேற்று
நடைமுறை வாழ்வில் விளக்கேற்று
அனிச்சை செயலாய் வாழாமல்
அறிவுப்பூர்வமாய் நடைபோடு
.....(மதிப்பெண்)
உன்னில் இருக்கும் திறனறிவாய்
உலகம் வியக்க வளர்த்திடுவாய்
கன்னல் தமிழை நன்கறிந்து
கவிநூறு கலைகள் காத்திடுவாய்
....(மதிப்பெண்)
வித்தக வாழ்க்கையின் வளமனைத்தும்
புத்தக சுமைக்குள் கிடைக்காது
பெற்றோர் நாங்கள் உணர்ந்துவிட்டோம்
புதுயுகம் கண்டிட உடனிருப்போம்
....(மதிப்பெண்)
..........கா.ந.கல்யாணசுந்தரம் 

செவ்வாய், ஜூன் 21, 2016

தமிழினத்தின் பெருமைதனை

தமிழின் தொன்மையும்
வரலாறும்
கல்வெட்டு சாசனங்கள் !
கலாச்சாரத்தின் படிமங்களாய்
காலத்தால் அழியா
கற்சிலைகள் !

கலைவளர்த்த மன்னர்களின்
கடமையில் விளைந்தன
எழில்மிகு சிற்பங்கள் !
செம்மொழி தமிழென்றும்
மூத்தகுடி தமிழனென்றும்
சொல்லுவது எப்படி ?
தொல்பொருள் ஆய்வுகளால்
துலங்கும் கோயில்
கற்சிலைகள் !

சிலைகடத்தி பிழைத்தல்
தொழில் செய்து
பொருளீட்டும் மூடர் கூட்டம்
தமிழர்தம் தொன்மையை
சிதைக்கும் சீர்கேட்டில்
உலவுகின்றார் !
தமிழினத்து துரோகிகளை
வேரோடு அழித்தொழித்து
சமுதாய நலம்காக்க
அரசியலார் கடும் சட்டம்
தீட்ட வேண்டும் !
தமிழினத்தின் பெருமைதனை
காக்க வேண்டும் !

 ......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஜூன் 02, 2016

இசையுலகின் இணையிலா மேதை !

இசையுலகின் இணையிலா மேதை !

இறைவனின் இசை அவதாரம் !


இயற்கையின் இதயத்தை தொட்டவன் !


இயல்பின் வெளிப்பாடுகளில்


இமயத்தை முத்தமிட்டவன் !


இலங்கும் புவிமீது இசையின்


இலக்கணத்தை வடித்தவன் !


இன்றல்ல நேற்றல்ல என்றும்


இசையுலகின் சக்கரவர்த்தி !


இளையராஜா- எங்களின்


இதயம்கவர் கள்வன் !


இந்தியத்தாய் பெற்றெடுத்த


இணையிலா தவப்புதல்வன்


இன்னும் இன்னும் வேண்டும்


இவனின் இசை கேட்டு


இன்பம் பருகும் வாழ்நாட்கள் !


இந்த இன்னிசை வேந்தனின்


இனிய பிறந்தநாளில் வாழ்த்துவோம்


இதயம் கனிந்து !
............கா.ந.கல்யாணசுந்தரம்.