கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
அன்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 03, 2014

இதுவன்றோ தமிழனின் வீடு......

தமிழிசை நாள்தோறும் பாடு - இனி 
நற்றமிழ் துறைதோறும் நாடு 
இதுவன்றோ தமிழனின் வீடு - இதை 
மறுப்போரை மறக்காமல் சாடு 

......(தமிழிசை ) 

தாய்மொழி நன்கறிந்து பயின்றால் - அயல் 
மொழி இனிதாகும் இன்றே 
வாய்மொழி தாய்தந்த பரிசு - நம் 
வாழ்வினை வளமாக்கும் உறவு 

....(தமிழிசை ) 

அம்மா என்றழைக்கும் மழலை - பின் 
மம்மி என்றழைப்பது ஏனோ ? 
தனிமனித முன்னேற்றம் இதுவில்லை - ஏன் 
தமிழன் மறந்தான் நற்றமிழ் சொல்லை ? 

......(தமிழிசை )

............................கா.ந.கல்யாணசுந்தரம் .

புதன், ஜூலை 11, 2012

தியாகத்தின் விளைநிலம் !






என்னை உயிர்ப்பித்த நாள் முதல்
பிம்பங்களின் நடு நடுவே
எனது கண்கள் தேடுகின்றன...
நிஜமான மனதுடைய முகங்களை!
சில நேரங்களில் முகத்தருகே கூட
முத்தமிடுவதுபோல் அன்பான முகங்கள்!
சலிப்பின் விளிம்புகளை தொட்டவாறு
கைதட்டலோடு சில முகங்கள்!
சேட்டைகளை செய்தவாறே எனது
புன்னகைக்கு தவமிருக்கும் புதிய முகங்கள்!
கைநீட்ட எனை எடுத்தணைக்கும்
இருகரமுடைய மனிதங்கள்!
மனித உடல் சூட்டில் எனது சிறுநீர்
சட்டென்று வெளியேற,
வீசி எறியாத குறையாய் பெற்றவளிடம்
தள்ளுகின்ற பல முகங்கள்!
பட்டாடைமேல் மலம் கழித்தாலும்
முகம் சுளிக்காமல் எனைக் கொஞ்சுகின்ற
ஓர் முகம்! - பத்துமாத பந்தம் மட்டுமல்ல!
எனது முகவரிக்குள் எழுத்தாகி ,
உயிர் மெய்யாய் உலவும் தாயெனும்
தியாகத்தின் விளைநிலம்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், செப்டம்பர் 08, 2011

நினைவுகளின் ஆராதிப்பில்






















முப்பது ஆண்டுகளின்
இடைவெளிக்குப்பின்
இனிய பயணமாய்
பிறந்த ஊருக்கு!
கிராமத்து வாசம் மாறினாலும்
புராதான சின்னங்களாய்
பழைய வீடுகள்!

கோளரங்க கூரையின் கீழ்
குண்டும் குழியுமாய் தரை
பொற்கால நினைவுகளில்
புதையுண்டு போனேன்!
அன்புக்கேனியாய்
இன்ப ஊற்றை வற்றாமல்
அள்ளித் தெளித்த
அன்னை இல்லம்
அரவணைத்தது!

ஆட்டுக்கல் குழவியும்,
இன்சுவை சமையலறையும்,
தயிர்ப்பானைத் துளிகளும்,
ஆன்மீகமாய் பூஜையறை மாடங்களும்
அன்னை இல்லத்தின் அன்புச்
சுவடுகளாய் நிலைத்திருக்கிறது!

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்
தம்பி, தங்கையென அப்போது
கதவின் பின்புறம் நானெழுதிய
வார்த்தைப் பிழைகளை திருத்திய
அம்மாவின் கையெழுத்தோடு
'தமிழமுதூட்டிய' அன்னையின்
சுவடுகள் அழியாது இன்றும்
நினைவுகளின் ஆராதிப்பில்!



....கா.ந.கல்யாணசுந்தரம்.

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பூவாக உனை சுமக்க

புன்னை மர நிழலில்
தென்றல் துணையோடு
பிள்ளைக்கு தாலாட்டு!
தண்ணீர் தேக்கிவைத்த
வயக்காடு பரப்பினில்
நெல்நாத்துக் கட்டோடு
தாயவளின் பெரும்பாடு!

உச்சி வெயில் தணலாகி
உடம்பெல்லாம் வியர்க்க
பச்ச புள்ள செவ்வாய்க்கு
பால் புகட்டும் நேரமிது!
மார்பிரண்டும் பெரும்பாரம்
பிடிக்காத சுமையிதுவே!
பூவாக உனை சுமக்க
உள்ளமிது குதூகலிக்கும்!
குடைபிடித்து நிர்க்கின்ற
முதலாளி கெடுபிடியில்
நாற்று நாடும் கையிரண்டும்
குழந்தையின் நேசமிகு
உணர்வுகளில் நடுநடுங்க....
மங்கையவள் மாராப்பு
மழலைவாய் தீண்டாமல்
பால்வடிந்து நனைந்ததம்மா!
பாவியவள் அடிவயிற்றை
நனைக்கின்ற தேடலிலே!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஒரு நீர்த்துளிக்குள் கடல்...



ஒரு நீர்த்துளிக்குள் கடல்...
என்று அறிந்தும் இந்த வாழ்க்கை
ஒரு மௌனத்தின் பிரவாகம்
என்பதை யாவரும் அறிந்திலர்!
இருட்டறைக்குள் உயிர் கொடுத்து
தவமிருந்து பெற்றெடுத்த தாயுள்ளம்
ஒரு தபோவனம்!
வம்ச விருட்சத்தின் நாற்றங்கால்கள்
இன்றளவும் நாம்தான் என்று பறைசாற்ற....
உன்னுள் இன்றளவும் எதை சாதித்தாய்
என்று மனம் மௌனமாய் கேட்பது
யாருக்கு தெரியப்போகிறது!
ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது
இந்த மானுடம் வென்ற மௌன நித்திரை
மரணமென்று!........
இனிமேலாவது அன்னையின் தபோவனத்தில்
ஒரு நிரந்தரப் பணியாளனாய் இரு!

.....கா .ந .கல்யாணசுந்தரம்.