கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், டிசம்பர் 22, 2011

உலகம் அழியும் இது மயனின் வழி.....


டிசம்பர் இருபத்து ஒன்று 2012
உலகம் அழியும் நாள்....
இது மயன் நாட்காட்டியின் எல்லை!
கடல் கொந்தளித்து சுனாமி வரலாம்...
எரிமலைகள் வெடித்து சிதறலாம்...
வேற்று கிரகங்களில் இருந்து
புதிய விண்வெளிக்கலன்களின் தாக்குதல்
இருக்கலாம்....
சூறாவளிப் புயல்களால் நாடு உருக்குலையலாம்....
சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைந்துபோகலாம்....
கடல்மட்டம் உயர்ந்து நிலங்களை
கபளீகரம் செய்யலாம்....
விண்மீன்களின் பாதைகள் மாறி
கிரகங்களின் மீது மோதி பூமியை தாக்கலாம்....
மொத்தத்தில் கலியுகம் முடியும் நாள்
டிசம்பர் 21 , 2012 ............................................
இப்படியெல்லாம் தகவல்கள்
தொலைக்காட்சிகளிலும்,
மேலைநாட்டு பத்திரிகைகளிலும்
இணையதளத்திலும் செய்திகள்..........
அறிவியல் வல்லுனர்கள்,
வானியல் ஆராய்ச்சியாளர்கள்
ஜோதிடர்கள், பாதிரியார்கள், சாதுக்கள்
இப்படியாக பலர்
அமானுஷ்யமாக பட்டும் படாமலும்
ஆமோதித்து பின்பு சாத்தியமில்லை என்றும்
சொல்கின்றனர்..........
இப்படியாக நான் இந்த செய்திகளை உள்வாங்கி,
சிந்தித்து நாற்காலியில் அமர்ந்திருந்தேன் !
என் கவனத்தை திசை திருப்பி
எங்களின் பெயர்த்தி சொன்னாள்.....
"இனிமே ஒரு வருஷம் என்பது
ஆறு மாதங்கள்தான் !
அப்போ நான் நிச்சயமா
நூறு வயசுக்குமேல் வாழ்வேன்...!"
சிரித்துக்கொண்டே சொன்ன சிறுமியின்
அமானுஷ்ய வார்த்தைகளில் சிக்குண்டு
அந்த மயன் நாட்காட்டியை
என் நினைவில் இருந்து
கழற்றி எறிந்தேன்!
மானுடம் வெல்லும் என்று எண்ணியவாறே!

........கா.ந.கல்யாணசுந்தரம்.