கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

இனி ஒரு விதி செய்வோம்.....
விடுதலைக்கான சின்னமாய்
இன்றும் பட்டொளிவீசி பறக்கிறது
நமது மூவண்ணக்கொடி!
அன்னியரின் அடிமத்தளையருத்து
பொன்னான தாயகத்தை
மீட்டெடுக்க இன்னுயிர் நீத்தனர்
இந்தியத் திருநாட்டின்
இணையில்லா தவப்புதல்வர்கள் !
நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்
நலமுற பேணிக் காப்போமென
உறுதிமொழி ஏற்றிடும்
மாணவ மாணவியர் தினம் தினம்!
ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில்
நல்லதொரு கருத்தினை
பகிர்ந்திடவே விழைகின்றேன்!
சுதந்திர தேசிய மணிக்கொடியை
இனி தனிமனித போராட்டத்தில்
பயன் படுத்தலாகாது!
கொள்கை எதுவாகிலும்
தேசிய கொடியினை தன்னலப்போக்கில்
தவறாகப் பயன்படுத்தி மக்களிடம்
அனுதாபம் பெறுகின்ற சுயநலவாதிகளை
அடையாளம் கண்டுகொள்வோம்!
அரசும் சட்டமும் இருந்தும்
அகற்றிட தயக்கமென்ன?
இனி ஒரு விதி செய்வோம் அதை
எந்தநாளும் காப்போம்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

எது சுதந்திரம்?அன்னியரின் அடிமைத்தளையருத்து
ஆருயிர் தாயகத்தை மீட்டெடுத்து
இணையிலா இந்தியத்திருனாட்டின்
ஈடில்லா அரசியலமைப்பை
உருவாக்கி மகிழ்ந்தோம்!
ஊரும் நாடும் சிறப்புறவே
எளியவரும் பயனுறும் வண்ணம்
ஏற்றமிகு மக்களாட்சி மலர்ந்திடச் செய்தோம்!
ஐயம் இல்லா அறிவுத்திருக்கோயில்
ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கினோம்!
ஓதும் கல்விமுறையில் மட்டும்
ஒளடதமாய் விளங்காமல்
மொழியுலக வரலாற்றில் சுதந்திரத்தை
பறிகொடுத்து வளர்கல்வி
அரசியலாய் சமைந்ததுவே!

.....கா.ந..கல்யாணசுந்தரம்