கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

கவிஞர்...புலவர்....படைப்பாளி....

கவிஞர்...புலவர்....படைப்பாளி....
*******************************************
கவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிய வேண்டும்.
அண்மையில் நான் பதிவுசெய்த தமிழ் இலக்கிய பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் என்ற பதிவால் இதனை இங்கே கருத்திட விரும்புகிறேன்.
கவிஞர் :
இந்தப் பட்டப்பெயர் மற்றவர்கள் சூட்டினாலும் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டாலும் தவறில்லை.
பல கவிதைகள் எழுதி உங்களின் உச்சாணியில் இருப்பவரும், ஒரே ஒரு கவிதை எழுதி பல்லோராலும் பாராட்டு பெற்றவரும் கவிஞர் தான். மறுப்பதற்கு இல்லை. பிறவியிலேயே கவித்துவம் பெற்ற அருளாளர்கள் இருக்கிறார்கள். படிப்பறிவு ஏதுமின்றி பட்டறிவால் கவிஞர் ஆனவர்கள் ஏராளம். உதாரணமாக கவிஞர் பட்டுக்கோட்டையார், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்கள்.
ஆக கவிஞர் எனும் பட்டம் தமிழின் வளமையை அதன் தனித்தன்மையை செம்மையாய் மரபு, புதுக்கவிதை மற்றும் குறுங்கவிதைகள் , ஹைக்கூ , நாட்டுப்புறப் பாடல்கள் வழி எழுதுபவர்கள் பெற்றுள்ள நடைமுறை அடைமொழி. இதற்கு ஒரு பதிவு பெற்ற சங்கமோ, அமைப்போ கொடுப்பது இல்லை. மக்களாலும் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளும் ஒரு பட்டம் என்றே அறியலாம்.
புலவர்:
புலமைத் தகுதி சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.ஒரு மொழியில் புலமை பெற்று சிறப்புறுதல் வேண்டும். இதற்கு இலக்கணம்,மொழியின் தொன்மை குறித்து படித்தறிதல் அவசியம். தமிழக கல்லூரிகள் புலவர் பட்டங்களை தேர்வுகள் மூலம் அளிக்கின்றன.பாடத் திட்டங்களும் பல்வேறு நிலைகளில் உள்ளன. மொழியில் சிறந்த புலமை பெற்று மரபுப் பாடல்களை இலக்கணத்துடன் இயற்றி வாழ்ந்தவர்கள் சங்க காலத்தில் அதிகம். புலவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இதனை போட்டுக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.
படைப்பாளி:
இங்கு தான் பலருக்கும் சந்தேகம் வரும். படைப்பாளி என்பவன் தனது தனித்த திறனில் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில் சிறந்த படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு கொடுப்பவன். படைப்பு என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தது. எழுத்து வடிவம் கொண்டவை அனைத்தும் படைப்பாகாது. படிப்போருக்கு நல்ல படிப்பினைத் தருவதாகவும் இருக்கவேண்டும்.துறைதோறும் நல்ல படைப்பாளிகளின் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் தானாகவே வந்து சேரும் என்பது உறுதி.
முகநூல் வழி கவிஞர்கள் சிறந்த படைப்பாளிகளாக உருவாகவேண்டும் என்பது எனது விருப்பம்.
எனக்குத் தோன்றிய கருத்துகளை இங்கே பதிந்து வருகிறேன். மேலும் சிறந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக