கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய
முகநூல் குழுமங்கள்
***********************************************************************
அன்பார்ந்த முகநூல் தோழமைகளே..
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தமிழ் முகநூல் குழுமங்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. ஆனால் பல குழுமங்களின் இலக்கியப் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.
தமிழ் மொழியின் ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவம் உருவான வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது.
கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகளாய் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மென்பொருள் ஊடகமாய் அகில உலகமெங்கும் தனது பயணத்தை மேற்கொண்டு தொன்மையின் சிறப்பை வென்றுள்ளது.
மொழியின் தொன்மை, வீச்சு, நடை, இலக்கணம், மொழியின் பரிணாமம் போன்றவற்றைப் பகிர்வதில் இன்றைய முகநூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
இதிகாசங்கள், பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள்,
நாவல்கள், மரபு இலக்கணம், பல்வேறு கவிதை நூல்கள் ,சங்கம் தழுவிய நூல்கள், நாடகங்கள், இசை விற்பனர்களின் வரலாறு, இயற்றமிழ் அறிஞர்களின் உரைகள், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் தற்போது மின்னூலாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம் .
இவையனைத்தும் மின்னூலாக இருந்தும் அனைத்தையும் நம்மால் படிக்கும் நேரம் இருக்கிறதா ? ஆனால் அவ்வப்போது இலக்கியச் சுவைகளை மேற்கோளுடன் முகநூல் குழுமக் கவிஞர்கள் பகிர்வது சிறப்பானதாக இருக்கிறது.
பல முகநூல் குழுமங்கள் இன்றளவில் பல்வேறு கவிதை போட்டிகளை முன்வைத்து தற்கால இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தி பயிற்றுவிப்பது சிறப்பு.
எனக்குத் தெரிந்து அந்நாளில் இலக்கிய இதழ்களில் பங்களிப்பு செய்து வந்த மூத்தக் கவிஞர்கள் பலர் இப்போது முகநூல் குழுமங்களில் பதிவு செய்து பங்காளிப்பதை பார்க்கிறோம். இதனால் இன்றைய இளைய தலைமுறைகள் அவர்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களும் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.
முகநூல் குழுமங்கள் போட்டிகள் நடத்துவது தவறில்லை....அதேபோல் கவிதைப்போட்டிகளில் பங்கேற்போருக்கு சான்றுகள் வழங்குவதிலும் தவறில்லை. ஆனால் தரமான கவிஞர்களுக்கு வழங்க வேண்டும். புதியவர்களை பயிற்றுவிக்கவும் வேண்டும்.
முகநூல் குழும கவிஞர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசுவது போன்ற தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்தல் அவசியம். கவிதைகளில் குறை நிறை இருக்கத்தான் செய்யும். அனைத்தையும் ஏற்கும் மனப்பான்மை இருந்தால் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள் மேலும் தமது பணிகளை செய்வதில் முனைப்புடன் செயலாற்றும்.
முகநூல் குழுமங்கள் ஆண்டுவிழாக்கள் தொடர்ந்து நடத்தட்டும். பலரது கைத்தட்டல்கள் சிறந்த ஓசை எழுப்ப வல்லது.
நன்கொடைகள் தவறில்லை ...ஆனால் அதுவே வியாபார திணிப்பாக இருத்தல் கூடாது.
விருதுகள் வழங்கினால் தான் ஊக்கப் படுத்தும் செயலாக இருக்கும். ஆனால் விருதுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படக் கூடாது.
சிறந்த தமிழ் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள்
தொடர்ந்து ஆண்டுவிழாக்களை நடத்துவது சிறப்பு. போட்டிகள் நடத்துவதும் இனிமை மேலும் சான்றுகள் வழங்குவதும் கூடுதல் சிறப்பு.
தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நமக்கென விருது கொடுத்து விழா எடுக்கப்போவதில்லை (எதோ ஒரு சில நிறுவனங்கள் தவிர ).
விளையாட்டுப் போட்டிகளுக்கு (குறிப்பாக மட்டைப்பந்து ) தருகின்ற ஊக்கப்பரிசுகள் எப்போதும் இலக்கியத் துறைசார்ந்த விருதுகளுக்கு இல்லை. முகநூல் குழுமங்கள், சில இலக்கிய அமைப்புகள் தருகின்ற விருதுகளுக்காய் தொடர்ந்து சிறந்த படைப்புகளை அளியுங்கள் கவிஞர்களே..தங்களை முன்னிறுத்தி அடையாளம் கொள்ளுங்கள்.
வாழ்க தமிழ்..வளர்க சிறந்த முகநூல் குழுமங்கள் !
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம் .
(குறிப்பு: சிறந்த முகநூல் குழுமங்களை நீங்களே அடையாளம் காணுங்கள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக