கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

அம்மா எனும் சொல் அற்புதமானது ...


வணிகக்கல்வி வாழ்வினை உயர்த்தும்
கல்வியில் வணிகம் மனிதத்தை வீழ்த்தும்
தாய்மொழிக் கல்வி தரத்தினை பெருக்கும்
அயல்மொழி கற்றிட அடித்தளம் அமைக்கும்

செம்மொழி தமிழின் இலக்கிய மாண்பு
சிந்தனை வளத்தின் இயற்கை ஊற்று
புலமை பெற்றிட்ட முன்னோரெல்லாம்
பன்மொழி பயின்று மேதைகளானார்

ஆங்கிலம் பயிலும் அரும்புகளிடத்து
அம்மா எனும் சொல் அற்புதமானது
அளவுக்கு மீறிய புத்தக சுமையில்
அமுத மொழியோ புதைந்து போனது

உலகின் தொன்மை தமிழில் உண்டு
உண்மை இதுவென அனைவரும் அறிவர்
பெற்றோர் நாளும் தமிழினை பகன்றால்
புதிய தலைமுறை அணியும் மகுடம்

.................கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, பிப்ரவரி 08, 2013

யாருக்கும் தெரியவில்லை

மாவட்ட கல்வி அதிகாரி
வருகையால் பரபரப்பானது
உயர்நிலைப்பள்ளி....
சீருடை மாணவர்களின்
அணிவகுப்பில் மகிழ்வெய்திய
அதிகாரி ......
ஒரு மூடிவெயத்த அறையைக்
காண்பித்து .....
என்னவென்று வினவ ...
முப்பது ஆண்டுகளாய்
பழுதான மர பெஞ்சுகள்
அடுக்கிய அறை
என பதில் வந்தது!
அறையைத் திறந்து ...
பத்தாம் வகுப்பு
பென்ச்சுகளைத் தேடினார்
கல்வி அதிகாரி!
உடைந்திருந்த அந்த
மர இருக்கையில் அமர்ந்தார் !
யாருக்கும் தெரியவில்லை
அவர் இந்த இருக்கையில்
அமர்ந்து இந்த பள்ளியில்
படித்தவர் என்பதை!

...கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

பிரிவோம் சந்திப்போம்.....















சந்தித்த வேளையில்
பகிர்ந்துகொண்ட உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய் அமைந்தது
நமது எதிர்பாரா நட்பு!

காலம் காலமாய்
உணவூட்டி கல்வி புகட்டி
நல்வழி காண்பித்த பெற்றோர்களை
மறத்தல் மாண்பாகுமா?

பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!



.......கா.ந.கல்யாணசுந்தரம்.