கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

கவிஞர்...புலவர்....படைப்பாளி....

கவிஞர்...புலவர்....படைப்பாளி....
*******************************************
கவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிய வேண்டும்.
அண்மையில் நான் பதிவுசெய்த தமிழ் இலக்கிய பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் என்ற பதிவால் இதனை இங்கே கருத்திட விரும்புகிறேன்.
கவிஞர் :
இந்தப் பட்டப்பெயர் மற்றவர்கள் சூட்டினாலும் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டாலும் தவறில்லை.
பல கவிதைகள் எழுதி உங்களின் உச்சாணியில் இருப்பவரும், ஒரே ஒரு கவிதை எழுதி பல்லோராலும் பாராட்டு பெற்றவரும் கவிஞர் தான். மறுப்பதற்கு இல்லை. பிறவியிலேயே கவித்துவம் பெற்ற அருளாளர்கள் இருக்கிறார்கள். படிப்பறிவு ஏதுமின்றி பட்டறிவால் கவிஞர் ஆனவர்கள் ஏராளம். உதாரணமாக கவிஞர் பட்டுக்கோட்டையார், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்கள்.
ஆக கவிஞர் எனும் பட்டம் தமிழின் வளமையை அதன் தனித்தன்மையை செம்மையாய் மரபு, புதுக்கவிதை மற்றும் குறுங்கவிதைகள் , ஹைக்கூ , நாட்டுப்புறப் பாடல்கள் வழி எழுதுபவர்கள் பெற்றுள்ள நடைமுறை அடைமொழி. இதற்கு ஒரு பதிவு பெற்ற சங்கமோ, அமைப்போ கொடுப்பது இல்லை. மக்களாலும் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளும் ஒரு பட்டம் என்றே அறியலாம்.
புலவர்:
புலமைத் தகுதி சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.ஒரு மொழியில் புலமை பெற்று சிறப்புறுதல் வேண்டும். இதற்கு இலக்கணம்,மொழியின் தொன்மை குறித்து படித்தறிதல் அவசியம். தமிழக கல்லூரிகள் புலவர் பட்டங்களை தேர்வுகள் மூலம் அளிக்கின்றன.பாடத் திட்டங்களும் பல்வேறு நிலைகளில் உள்ளன. மொழியில் சிறந்த புலமை பெற்று மரபுப் பாடல்களை இலக்கணத்துடன் இயற்றி வாழ்ந்தவர்கள் சங்க காலத்தில் அதிகம். புலவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இதனை போட்டுக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.
படைப்பாளி:
இங்கு தான் பலருக்கும் சந்தேகம் வரும். படைப்பாளி என்பவன் தனது தனித்த திறனில் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில் சிறந்த படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு கொடுப்பவன். படைப்பு என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தது. எழுத்து வடிவம் கொண்டவை அனைத்தும் படைப்பாகாது. படிப்போருக்கு நல்ல படிப்பினைத் தருவதாகவும் இருக்கவேண்டும்.துறைதோறும் நல்ல படைப்பாளிகளின் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் தானாகவே வந்து சேரும் என்பது உறுதி.
முகநூல் வழி கவிஞர்கள் சிறந்த படைப்பாளிகளாக உருவாகவேண்டும் என்பது எனது விருப்பம்.
எனக்குத் தோன்றிய கருத்துகளை இங்கே பதிந்து வருகிறேன். மேலும் சிறந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய
முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி
***********************************************************************
21.08.2018 எனது பதிவின் பின்னூட்டங்களில் எமக்கு பலர் பாராட்டியும் இந்தப் பதிவு தக்க நேரத்தில் பதியப்பட்ட சிறப்பு என்றும் தெரிவித்துள்ளனர். சிலர் குறிப்பாக Venkatesan RamalingamVathilaiPrabaவெற்றிப்பேரொளிமுனைவர் ம.ரமேஷ்மற்றும் இராம.வேல்முருகன் வலங்கைமான் ஆகியோர் பின்னூட்டங்களுக்கு பதில் கூறவேண்டிய நிலையிலும் மேலும் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்திக்கொள்ளவும் இந்தப் பதிவு அத்தியாவசியப்படுகிறது.
* தமிழகத்தில் பல்வேறு பதிவுபெற்ற பேரவைகள்,சங்கங்கள்,இலக்கிய அமைப்புகள் ,சிற்றிதழ் அமைப்புகள் கவிஞர்களுக்கு
கவிமாமணி,கவிமணி,கவிச்சுடர், கவிக்கோ ,ஒட்டக்கூத்தர்,நக்கீரன்,ஒளவையார்,கம்பர்,கபிலர்,திருவள்ளுவர்,பாரதி,பாரதிதாசன் போன்ற விருதுகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் மூத்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அரசு விருதுகளும் இப்படியே.
* கடந்த மூன்று ஆண்டுகளாக முகநூல் குழுமங்கள் பல்வேறு வகையான விருதுகளையும், மேற்கண்ட பெயருடைய விருதுகளையும், சான்றுகளையும் வழங்கி வருகின்றன. இதில் தகுதியுடைய சிலரும்,ஒன்றிரண்டு கவிதைகள் எழுதிய புதியவர்கள் பலரும் அடங்குவர்.
* மாவட்ட அளவில் மட்டைப்பந்து போட்டியிலும் பன்னாட்டளவில் நடைபெறும் போட்டிகளிலும் (கிரிக்கெட்) Man Of The Match கொடுக்கப்படுவதிலும் வேறுபாடு உண்டு. ஆனால் மாவட்ட அளவில் பெரும் விருதுதான் அந்த வீரரை பன்னாட்டு அளவில் போட்டிகளில் பங்கேற்க உதவுகிறது/ஊக்கமூட்டுகிறது என்பதில் ஐயமில்லை.
இதுபோலவே அங்கீகாரம் பெற்ற சிறந்த இலக்கிய அமைப்புகள் கொடுக்கும் விருதுகளை எளிமையாய் முகநூல் குழுமங்கள் பலருக்கும் கொடுப்பது ஊக்கப்படுத்தவே என உணரவேண்டும். தமது பெயருக்கு முன்னால் விருது பெயர்களை சேர்த்துக்கொள்ள தமக்கு அந்தத் தகுதி உள்ளதா என கவிஞர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே விருதுகளை அங்கீகாரம் பெற்ற இலக்கிய அமைப்புகளிடம் பெற முயற்சி செய்ய வேண்டும்
* ஆண்டுவிழா நடத்த அன்பளிப்பு பெறுவதில் தவறில்லை. ஆனால் அன்பளிப்பு கொடுத்தால்தான் சான்றிதழ்கள், விருதுகள் எனும் நிலை மாறவேண்டும். குழுமங்கள் சில மட்டுமே இலக்கியத் தொடர்புடைய, சிறந்த தமிழ்ப்பணியாற்றும் கவிஞர்களுக்கு விருதுகள் தருகின்றன. பல அமைப்புகள் மாற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
* முகநூல் குழுமங்கள் கவிதை போட்டிகளைக் குறைத்துக்கொண்டு பயிற்றுவித்தலில் ஈடுபட வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில குழுமங்கள் பயிற்றுவித்தலில் முனைப்புடன் ஈடுபட்டு வருவது சிறப்பு.
* ஆண்டு முழுக்க முகநூல் குழுமங்களில் போட்டியில் பங்குபெறுவதோடு தமிழ் இலக்கியச் சுவை ததும்பும் முன்னோர்களின் கவிதைகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வழங்குதல் சிறப்பு.
* முகநூல் குழுமங்களில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் புதிய குழுமங்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி உருவாக்கினாலும் தனிப்பட்ட பாதிப்புகளுக்கு பொதுவெளியில் குழும உறுப்பினர்களை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
* முகநூல் குழுமங்கள் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை அள்ளித் தருவதை தவிர்க்கலாம். ஆண்டுமுழுக்க தமிழ்ப்பணியாற்றும் தேர்ந்த கவிஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் கொடுத்து சிறப்பிக்கலாம்.
* முகநூல் குழுமங்கள் தங்களது சான்றுகளில் நிறுவனர் / தலைவர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் கையொப்பமிட்ட சான்றுகளை வழங்குதல் வேண்டும். சிறப்புடையதுமாகும்.
* குழுமங்கள் இனிவரும் காலங்களில் கவியரங்க அமர்வுகளை குறைத்து சிறப்பான திட்டமிடலை கையாளவேண்டும். ஐந்து நூல்களுக்குமேல் மேடையில் வெளியிடுவதை தவிர்த்தல் நல்லது.
விருது வழங்கல் நிகழ்வை நேரத்தோடு துவங்குதல் குழுமத்துக்கு ஆரோக்கியமானது.
* குழும விழாக்கள் தமிழ்ப் பண்ணோடு தொடங்கி நாட்டுப்பண்ணோடு முடித்தல் அவசியம் எனக் கருத வேண்டும்.
* நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நீண்ட நேரம் பேசி மற்றவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நன்று.
* நீண்ட தொலைவில் இருந்து வரும் கவிஞர்கள், வெளியூர் கவிஞர்கள் என முன்னதாக வரிசைப்படுத்தி , மேடையில் விருதுகளை சிறப்பாக அவசரமின்றி அளிக்கலாம். கவிஞர் வெற்றிப்பேரொளி சொன்னதுபோல் கிளைமாக்ஸ் காட்சிகளை தவிர்க்கலாம்.
இவையாவும்...எமக்குத் தோன்றிய கருத்துகள். முகநூல் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்தி தமிழ்ப்பணி ஆற்றுங்கள். விருதுகள்/சான்றுகள் தேர்ந்த கவிஞர்களுக்கும் சான்றோர்களுக்கும் தொடர்ந்து வழங்குங்கள்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய
முகநூல் குழுமங்கள்
***********************************************************************
அன்பார்ந்த முகநூல் தோழமைகளே..
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தமிழ் முகநூல் குழுமங்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. ஆனால் பல குழுமங்களின் இலக்கியப் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.
தமிழ் மொழியின் ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவம் உருவான வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது.
கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகளாய் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மென்பொருள் ஊடகமாய் அகில உலகமெங்கும் தனது பயணத்தை மேற்கொண்டு தொன்மையின் சிறப்பை வென்றுள்ளது.
மொழியின் தொன்மை, வீச்சு, நடை, இலக்கணம், மொழியின் பரிணாமம் போன்றவற்றைப் பகிர்வதில் இன்றைய முகநூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
இதிகாசங்கள், பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள்,
நாவல்கள், மரபு இலக்கணம், பல்வேறு கவிதை நூல்கள் ,சங்கம் தழுவிய நூல்கள், நாடகங்கள், இசை விற்பனர்களின் வரலாறு, இயற்றமிழ் அறிஞர்களின் உரைகள், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் தற்போது மின்னூலாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம் .
இவையனைத்தும் மின்னூலாக இருந்தும் அனைத்தையும் நம்மால் படிக்கும் நேரம் இருக்கிறதா ? ஆனால் அவ்வப்போது இலக்கியச் சுவைகளை மேற்கோளுடன் முகநூல் குழுமக் கவிஞர்கள் பகிர்வது சிறப்பானதாக இருக்கிறது.
பல முகநூல் குழுமங்கள் இன்றளவில் பல்வேறு கவிதை போட்டிகளை முன்வைத்து தற்கால இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தி பயிற்றுவிப்பது சிறப்பு.
எனக்குத் தெரிந்து அந்நாளில் இலக்கிய இதழ்களில் பங்களிப்பு செய்து வந்த மூத்தக் கவிஞர்கள் பலர் இப்போது முகநூல் குழுமங்களில் பதிவு செய்து பங்காளிப்பதை பார்க்கிறோம். இதனால் இன்றைய இளைய தலைமுறைகள் அவர்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களும் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.
முகநூல் குழுமங்கள் போட்டிகள் நடத்துவது தவறில்லை....அதேபோல் கவிதைப்போட்டிகளில் பங்கேற்போருக்கு சான்றுகள் வழங்குவதிலும் தவறில்லை. ஆனால் தரமான கவிஞர்களுக்கு வழங்க வேண்டும். புதியவர்களை பயிற்றுவிக்கவும் வேண்டும்.
முகநூல் குழும கவிஞர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசுவது போன்ற தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்தல் அவசியம். கவிதைகளில் குறை நிறை இருக்கத்தான் செய்யும். அனைத்தையும் ஏற்கும் மனப்பான்மை இருந்தால் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள் மேலும் தமது பணிகளை செய்வதில் முனைப்புடன் செயலாற்றும்.
முகநூல் குழுமங்கள் ஆண்டுவிழாக்கள் தொடர்ந்து நடத்தட்டும். பலரது கைத்தட்டல்கள் சிறந்த ஓசை எழுப்ப வல்லது.
நன்கொடைகள் தவறில்லை ...ஆனால் அதுவே வியாபார திணிப்பாக இருத்தல் கூடாது.
விருதுகள் வழங்கினால் தான் ஊக்கப் படுத்தும் செயலாக இருக்கும். ஆனால் விருதுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படக் கூடாது.
சிறந்த தமிழ் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள்
தொடர்ந்து ஆண்டுவிழாக்களை நடத்துவது சிறப்பு. போட்டிகள் நடத்துவதும் இனிமை மேலும் சான்றுகள் வழங்குவதும் கூடுதல் சிறப்பு.
தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நமக்கென விருது கொடுத்து விழா எடுக்கப்போவதில்லை (எதோ ஒரு சில நிறுவனங்கள் தவிர ).
விளையாட்டுப் போட்டிகளுக்கு (குறிப்பாக மட்டைப்பந்து ) தருகின்ற ஊக்கப்பரிசுகள் எப்போதும் இலக்கியத் துறைசார்ந்த விருதுகளுக்கு இல்லை. முகநூல் குழுமங்கள், சில இலக்கிய அமைப்புகள் தருகின்ற விருதுகளுக்காய் தொடர்ந்து சிறந்த படைப்புகளை அளியுங்கள் கவிஞர்களே..தங்களை முன்னிறுத்தி அடையாளம் கொள்ளுங்கள்.
வாழ்க தமிழ்..வளர்க சிறந்த முகநூல் குழுமங்கள் !
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம் .
(குறிப்பு: சிறந்த முகநூல் குழுமங்களை நீங்களே அடையாளம் காணுங்கள் )