தெருவிளக்கு உமிழும்
வெளிச்ச எச்சிலில்
இரவு தன்னை
கரைத்துக்கொண்டு
விடியலின் வாழ்வுக்கு
வழிவிடுகிறது
தார்ச்சாலைப் பூக்கள்
வியர்வைத்துளிகளின்
வாசம் பரப்பி
ஒரு பரபரப்பில்
தன்னை சிறைவைக்க
தயாரானது
எச்சங்களின் வரவால்
வயிறு புடைத்த
குப்பைத் தொட்டிகள்
அட்டை பொறுக்கும்
சிறுவர்களின் மறுவாழ்வில்
அங்கம் கொண்டது
நான்கு சக்கரம்
இரண்டு சக்கரம்
மூன்று சக்கரம்
நாளெல்லாம் உருண்டு
மானுடத் திசுக்களை
சுமந்தவாறு
ஊர்வலத்தை நடத்தின
வளமிக்க
விளைநிலங்களை
மறந்த மனங்கள்
விடுதலை அறியா
விருப்பினர்களாக
தூண்டில் புழுவானார்கள்
நெரிசல் மிக்க
நகரத்து விண்வெளியில்
பறக்க மறந்த
பறவைகள் மட்டும்
கிராமத்து பாதைகளை
தேர்ந்தெடுத்தன